ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -70

மெய்ப்பொருள் காண்பது அறிவு -70
சோதிடம் உண்மை என்பார்…!
கோள்களின் இயக்கங்களை அனுமானமாக அறிந்த காலத்தில் சோதிடம் வகுக்கப்பட்டது. அனுமானங்களில் அறிவியலுக்குப் புறம்பான செய்திகளும் உண்டு.
வானநூற் கருத்துகள் ஆரியப்பட்டர் வராகிமிகிரர் ஆகியோர் சித்தாந்தங்களிலேதான் (கி.பி.400 – 850 ) முழுவளர்ச்சியை அடைந்தன. ( வராகிமிகிரர் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.)
தமிழர் சோதிட ம்
சூரிய வழிபாடு தமிழர்களின் தொன்மை வழிபாடாகும். சூரியனின் முதன்மையையும் மேன்மையையும் போற்றிப்புகழாத சங்கப் புலவர்களே இல்லையெனலாம். வானியலைத் தமிழர்கள் அறிவியல் கண்கொண்டு அளந்தறிந்துள்ளனர் என்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
 புறநானூறு 229 ஆம் பாடல் சோதிடக் குறிப்புகளக் கொண்டிருக்கிறது. ‘ கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி அவன் துஞ்சியவிடத்துக் கூடலூர்கிழார் பாடிய பாடல் …ஆடியலழற் குட்டத்து….எனத் தொடங்கும் இப்பாடல்.
இராமனின் கிரக நிலை
இராவணன் புரிந்த கடும் போரில், இராமன் நிலை குலைந்தான். இராமன் தோற்றனன் என்ற அச்சத்தால் அமரரும் கலக்கம் எய்தினர். இராமனுக்கு இந்நிலை கிரகத்தால் வந்ததாம்…
‘விசைகொடு விசாகத்தை நெருக்கி ஏறினான்
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே.. ‘ என்றார் கம்பர்.
குசன் என்றது செவ்வாய்க் கிரகத்தை. ஒருவனுடைய சென்ம நட்சத்திரத்தில் செவ்வாய் சேர்ந்தால் அவனுக்குப் பீடையுண்டாம் என்பது சோதிட விதி.
ஆருணியின் மரணக் குறிப்பு
‘பாஞ்சாலை தேசத்து அரசனான ஆருணி என்பான் உதயண மன்னனோடு போரிட நேர்ந்த போது செவ்வாய் விசாகம் சேர்ந்த நிலையைக் கொங்குவேளிர் குறித்துள்ளார்..
‘பெய்கழல் ஆருணி பிறந்த நாளுள்
செவ்வாய் விருச்சிகம் சென்றுமேல் நெருங்க
………………………………………………….
இன்னாமன்ன நின்னுயிர் உணீஇய வந்தெனன்
என்றே உதயணன் வந்தான்.’
கோவலன் கொலைக் குறிப்பு
இலங்கையில் வழக்கிலுள்ள ‘கண்ணகி வழக்குரை’ என்னும் காவியத்தில் ‘ கோவலன் சிலம்பு விற்கச் செல்லும் வழியில் வெற்றிலைப் பாக்கு வைத்துச் சோதிடம் கேட்டதாகக் குறிப்பு உள்ளது.  சோதிடர்,’ சிங்கராசி உதையமாகையினால் நன்மைப் பலன் இல்லை’ என்று கூறுகிறார்.மேலும் கோவலன் மனைவியுடன் மதுரைக்குச் சிலம்பு விற்க வந்தமை அட்டமத்துச் சனிப்பார்வையால்  பொருள்களைத் தோற்றமை ; தட்டான் ஒருவனால் கொலையுண்ணப் போவது ஆகியவற்றையும் கூறுகிறார்.
இக்காவியத்தில் மாதவியின் சாதகமும் கணித்துக் கூறப்பட்டுள்ளது. ஏழாம் இடத்தில் வெற்றி நின்றதால் வருகணவன் செங்கையினால் உள்ள பொருள் தோற்பான், அவன் தேவி கொங்கையினால் அழியும் கூடல்,’ என்றும் கூறப்பட்டுள்ளது. –இரெ. குமரன். தொடரும்….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக