வியாழன், 6 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -74


மெய்ப்பொருள் காண்பது அறிவு -74

பிருஹத் ஜாதகம் – உரை மறுப்பு

பிருஹ்த் சாதகத்திற்கு உரை வகுத்துள்ள கடலங்குடி நடேச சாஸ்திரிகள், கிரகங்கள் மனிதர்கள் மீது ஆட்சி செலுத்தும் நிலையை விளக்கியிருப்பது விநோதமாக இருக்கிறது.

” இப்பொழுது கிரகங்களுக்குப் பிராமணர் முதலிய நான்கு வகுப்புக்கு அதிபதியாய் இருக்கும் தன்மையையும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுக்கு அதிபதியாய் இருக்கும் தன்மையையும்  ‘உவ ஜாதிகா’ விருத்தத்தில் (பிருஹத் ஜாதகம்) விளக்கப்பட்டுள்ளது. அஃதாவது, ‘பிராமணர்களுக்குச் சுக்கிரன், குரு இவர்களும் சத்திரியர்களுக்கு அங்காரகனும் சூரியனும், வைசியர்களுக்குச் சந்திரனும் சூத்திரர்களுக்குப் புதனும் சங்கர ஜாதிகளான சண்டாளன் முதலியோர்க்குச் சனியும் அதிபன்.’ என்கிறார்.

இதற்கு மேலும் விளக்கமளிக்கும் சாஸ்திரிகள், ‘ நாயுடு முதலிகளுக்குச் செவ்வாய், சூரியன் இவர்கள் அதிபதிகள் என்றும் செட்டி, கோமுட்டிகளுக்கும் சந்திரன் அதிபதி என்றும் மற்ற சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குப் புதன் அதிபன் என்றும் சாணான் முதலியோர்க்குச் சனி அதிபன் என்றும் துருஷர்களுக்கு ராகு அதிபன் என்றும் ஆங்கிலோ இண்டியன் வெள்ளைக்காரன் இவர்களுக்குக் கேது அதிபன் என்றும் வைத்துக்கொண்டு பலன் கூறுவது அநுபவத்தில் பெரிதும் ஒத்து நடக்கின்றது,’ என்று கூறுகிறார்.

கிரகங்களைச் சாதி ரீதியாகப் பிரித்து வைத்து மனித இனத்தில் உயர்பிறப்பாளன் என்றும் இழி பிறப்பாளன் என்றும் உறுதிப்படுத்த முயல்வது எவ்வகையில் அறிவுக்குப் பொருத்தமானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மனிதர்களைப் பிளவுபடுத்தி பிழைப்பை நடத்துவதற்கு நாள்களும் கோள்களும் எவ்வளவு இலகுவாகக் கையாளப்படுகின்றன என்பதற்கு மேற்கூறிய விளக்கங்களே சான்றாம். 

அறிவால் உயர்ந்தவன் சிறந்தவன்  என்பது அறிவுக்கொள்கை. இதற்கு மாறாகக் காலவெள்ளத்தில் கரைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதக் கொள்கைகளை நிலைநிறுத்த சோதிடம் முயற்சி செய்வது கொடுமையன்றோ..! –இரெ. குமரன்.---தொடரும்…..7/9/.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக