திங்கள், 1 அக்டோபர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -95

மெய்ப்பொருள் காண்பது அறிவு -95
அரிசுடாட்டில் (Aristotle- Father of all Sciences) கி.மு. 384 – 322.
 பிளேட்டோவின் மாணவர். ’அறிவியல்கள் அனைத்திற்கும் தந்தை ’ என்று போற்றப்படுபவர். கிரேக்கச் சிந்தனைகளை அறிவியல் பக்கம் திருப்பியவர். பிளேட்டோவின் கருத்துக்களுக்கு எதிரானவர். மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர். அலெக்சாண்டரின் துணையோடு அறிவியல் ஆய்வுக்கு அரிய கல்விக்கழகம்  ஒன்றை நிறுவினார். அரிசுடாட்டில் தொடாத துறைகளோ எழுதாத நூல்களோ இல்லை எனலாம்.
படைப்புகள்
அரிசுடாட்டில் அறிவு, அறிவியல், அழகியல், தத்துவம் என்னும் நான்கு தலைப்புகளில் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இவரின் ‘அளவையியல்’ சிறப்புடையது. அறிவின் இயல்பு, அறிவைப் பெறுவதற்கான வழிகள், அறிவின் ஏற்புடைமை, என்பன பற்றிய தெளிவு இல்லாதவர்களிடம் முறையான சிந்தனை ஓட்டம் இருக்காது என்பது இவரின் துணிபு.
  ஒவ்வொரு பொருளுக்கும் நான்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்று இவர் கருதுகிறார். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பொருளிலிருந்து குறிப்பிட்ட வடிவத்தில்; குறிப்பிட்ட செயலால்;  குறிப்பிட்ட நேரத்திற்காக உண்டாகிறது. பொருள், வடிவம், செயல், நோக்கம் ஆகிய நான்கு காரணங்களும் ஒன்று சேர்வதால் ஏற்படுவதே உற்பத்தி.
தத்துவம்
                     முக்கூற்றுச் சிந்தனை வழி அனுமானம்  -அரிசுடாட்டிலின் படைப்பு. “ மனிதர்கள் அனைவரும் பகுத்தறியும் விலங்குகள் ; சாக்ரடிசு ஒரு மனிதன் எனவே சாக்ரடிசு ஒரு பகுத்தறியும் ஒரு விலங்கு” என்பதே முக்கூற்றுச் சிந்தனை. இது விளக்கத்தால் உண்மையை அறிவது ; கண்டறிந்த உண்மைகளைப் பிறருக்கு நிரூபிக்க உதவும் . புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க இச் சிந்தனை முறை பயன்படாது.
                அரிசுடாட்டில் இயற்கையின் போக்கினையும் மாறுபாடுகளையும் உற்று நோக்கி ஆறாய்ந்தார். இயற்கைச் சுழல் – தோற்றம், வளர்ச்சி, மாற்றம், அழிவு என்ற நிலையில் இயங்குகிறது. உயிரினங்களுள் மனித இனம் உடல், உணர்வு ஆகியவற்றின் அமைப்பாலும் இயக்கத்தாலும் முதிர்ச்சிப் பெற்றிருக்கிறது என்றதோடு உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
                   அரிசுடாட்டில் ‘ கடவுள் உண்டு ’ என்கிறார். ஒவ்வொரு மாற்றத்திற்கும் கடவுள் காரணமில்லை – இயக்கத்தின் தொடக்கமாகக் கடவுளைக் காண்கிறார். தான் இயங்காமல் பிறவற்றை இயக்கும் பேராற்றல் உடையதாய் ; உரு ஒன்று இல்லாததாய் ;; குறைவில்லா நிறைவாய் ; உலக சக்திகளின் தொகுப்பே கடவுள் என்கிறார். கடவுளுக்கு விருப்பு வெறுப்பு இல்லை எனவே சடங்குகள் எதுவும் செய்யத் தேவையில்லை என்கிறார்.------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக