வியாழன், 28 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1149


திருக்குறள் -சிறப்புரை :1149

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. ---- ௧௧௪௯

களவில் தழுவி மகிழ்ந்த காதலர், நின்னைப்பிரியேன் அஞ்சாதே என்று உறுதி அளித்தார் ; பலரும் நாணுமாறு அவர் பிரிந்துசென்றார்.  அதனால் அலர் தூற்றும் அயலாரைக்கண்டு நாணாமல் இருத்தல் கூடுமோ..?

பயமழை தலைஇய பாடுசால் விறல் வெற்ப
மறையினின் மணந்து ஆங்கே மருவு அறத்துறந்த பின்
இறைவளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்மன்
அயல் அலர் தூற்றலின் ஆய்நலன் இழந்த கண்
கயல் உமிழ் நீர் போலக் கண்பனி கலுழாக்கால்.” ---கலித்தொகை.

அயலில் உள்ளார் அலர் தூற்றலின் இவள் கண்கள் தேர்ந்த தம் நலத்தை இழந்தன ; அவ்வளவில் நில்லாதே கண்கள் மீன்கள் நீரினை உண்டு உமிழுமாறுபோல நீர் உமிழ்ந்தன ; நீர் விழாத காலத்துக்கூடி மருவுதல் அறும்படி நீ பிரிந்தனை ; இதனால் முன்கையிற் கிடந்த வளைகள் நெகிழ்ந்து கழன்றன ; அதனால் பெற்றதென் ? அக்கண்கள்  அதற்கு ஒப்பவில்லையே…!

புதன், 27 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1148


திருக்குறள் -சிறப்புரை :1148

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். ------ ௧௧௪ ௮

ஊரார் தூற்றும் அலரால் காமத்தை அடக்கிவிடாலாம் என்று எண்ணுவது ; எரிகின்ற தீயை நெய் விட்டு அணைப்பதைப் போன்றது.

அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார்கொல் மருள் உற்றனம் கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே.” ---ஐங்குறுநூறு.

தோழி...வாழி..! என் சொல்லைக்கேள், மூங்கில் புதரில் பற்றிய தீயைப் போல, ஊரில் அலர் எழும் வண்ணம் நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் காதலர் நம்மை நினையாரே..? அன்றி, நாம் தாம் அவர் குறித்துச்சென்ற பருவம் வாராததாகவும் வந்ததாக மயங்கினோமா.....சொல்வாயாக...!

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1147


திருக்குறள் -சிறப்புரை :1147

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். ----- ௧௧௪௭

என் காமநோயாகிய பயிர், பலகாலும் செழித்து வளர,  இவ்வூரார் கூறும் பழிச்சொற்கள் எருவாக, அலர் அறிந்த அன்னையின் கடுஞ்சொற்கள் நீராகவும் கொண்டு, பலகாலும் செழித்து வளரும்.
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தானறிந்து அன்றோ இலளே பானாள்
சேரியம் பெண்டிர் சிறு சொல் நம்பிச்
சுடுவாள் போல நோக்கும்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே.” ---நற்றிணை.

மீன் கொழுப்பாலாகிய நெய் வார்த்துக் கிளிஞ்சிலில் ஏற்றிய விளக்கின் ஒளியிலே துயிலுகின்ற, புன்னை சூழ்ந்த துறைவனோடு நாம் களவிலே  புணர்ந்ததை, நம் அன்னை முன்னரே அறியவும் இல்லை. நடு யாமத்தில்  நம் சேரியில் உள்ள அயலுறை மாதர்  கூறும் அலராகிய  இழிந்த சில சொற்களை விரும்பிக்கேட்டு, கொதிக்கின்ற பால் போன்ற பசலை பரந்த என் மேனியைச் சுடுவதுபோல் நோக்கினாள்…! 

திங்கள், 25 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1146


திருக்குறள் -சிறப்புரை :1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.----௧௧௪ ௬

தலைவனைக்கண்டு மகிழ்ந்தது ஒருநாள்தான்;  அதனால் எழுந்த அலரோ, திங்களைப் பாம்புகொண்டதுபோல ஊரெங்கும் பரவிப் பலரும் அறிவதாயிற்று.

நெஞ்சே நிறையொல்லாதே யவரே
அன்பின்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவுநுங்கு மதியினுக்கு இவணோர் போலக்
களையாராயினும் கண்ணினிது படீஇயர்
அஞ்சல் என்மரும் இல்லை……” –குறுந்தொகை.

என் நெஞ்சம் நினைவை நிறுத்தலைச் செய்ய இயலாது, தலைவன் என்பால் அன்பின்மை காரணமாக அருளைப் பொருள் என்று கருதாராயினர்,வன்மையால் என்னை வற்புறுத்தி, அவ்வற்புறுத்தலில் வன்மையைப்பெற்றோர் பாம்பினால் உண்ணப்படும் திங்கள் திறத்தில் இவ்வுலகத்தில் உள்ளோர் செயல் போல, எனது துன்பத்தினை நீக்காரானாலும் இனிமையாகக் காணப்படுகின்றனர் ; அஞ்சற்க என்று கூறி நம்மைத் தேற்றுவாரும் இங்கே இல்லை.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1145


திருக்குறள் -சிறப்புரை :1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. --- ௧௧௪௫

கள் குடிப்பவர்களுக்குக் களிப்பு மேலிடும்போதெல்லாம் மேலும் குடித்தல் இனிதாவதைப்போல, எம்முடைய காமம் அலரால் வெளிப்படும் போதெல்லாம் இனிமையுடையதாகின்றது.

 மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
அருங்கரை நின்ற உப்பெய் சகடம்
பெரு பெயல் தலைய வீந்தாங்கு இவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. “குறுந்தொகை.

 நெஞ்சே…! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பு வண்டியில் பெரிய மழை பொழிந்ததனால்  அழிந்ததைப்போல, இவளது கரிய கூந்தலின்  இயற்கை அழகைக்கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாக் காமத்தால் நாண் அழிந்து, கள்ளுண்டு களித்ததன்மேலும்  கள்ளை விரும்பி உண்டாற்போல,  நீ அவளை ஒருமுறை விரும்பியதன்  பின்னும் விருப்பத்தை அடைந்தாய். 

சனி, 23 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1144


திருக்குறள் -சிறப்புரை :1144

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. ----- ௧௧௪௪

எம்முடைய காதல் உணர்வு, இவ்வூரினர் தூற்றும் அலரால் இனிதாக வளர்ந்து வருகிறது ; அவ்வலர் இல்லையென்றால் காமவிருப்புக்  குறைந்து இல்லாது அழிந்துபோகுமே.

மணங்கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒருநாள் பிரியினும் உய்வரிது என்னாது
கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச்
செய்ததன் தப்பல் அன்றியும்
உயவுப்புணர்ந்தன்று இவ்வழுங்கல் ஊரே.” ---நற்றிணை.

கடலருகே மணம் கமழ்கின்ற சோலையின்கண்ணே காதலருடனே தொடர்ந்து ஒன்றிய நம்முடைய நட்பானது, ஒருநாள் இடையீடுபட்டுப் பிரிந்தாலும்  உயிர் பிழைத்தல் அரிதாகுமென்று கருதாமல், குதிரை பூட்டிய அவரது நெடிய தேரின்  வருகையை இனி கானலிடத்து வாராது அவரால் மறிக்கப்பட்டு வருந்தச்செய்த தன்னுடைய தவறுகளை வெளிக்காட்டாது இருப்பதன்றியும், ஊராரின் பழிமொழிகளாகிய பேரிரைச்சலை, இங்ஙனம் ஒரு தேர் வருவதன் காரணம்தான் யாதோவென்று ஆராய்ந்து அதனால் வருத்தமும் அடைகின்றது ; இஃதென்ன கொடுமை, இங்ஙனமாயின் இனி எவ்வாறு அவருடன் களவொழுக்கம் நிகழும் ..? (இதனால், தலைவன் விரைந்து மணம் புரிந்துகொள்ள வற்புறுத்தினாள்.)

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1143


திருக்குறள் -சிறப்புரை :1143

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. ---- ௧௧௪

ஊரார் தூற்றும் அலர் என்னைப் பற்றாது ஒழியுமோ..?  அலரால் தலைவியோடு கூடப்பெறாமையால் வருந்திய எனக்கு, அந்த அலரே பெறமுடியாததைப் பெற்றதுபோன்ற இன்பத்தைத் தருகின்றது.

கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்கறிந்தனர் மன்னே இனியே
வதுவை கூடிய பின்றை…………..
……………………………
ஒலியவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே.” ---அகநானூறு

கொழுவிய கண்களை உடைய அயிலை மீனை யாவர்க்கும் பகுத்துக்கொடுக்கும் துறைவன், நம்மொடு புணர்ந்த காதல் நட்பு முன்பு, அலர் கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலமாக்கிப் பரப்ப, அவ்விடத்து நம் காதலை பலரும் அறிவாராயினர். இப்பொழுது மணம் கூடிய பிறகு, ஆரவாரமுடைய இவ்வூர் ஒலி அடங்கப்பெற்றது.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

உலகத் தாய்மொழி நாள்


உலகத் தாய்மொழி நாள்

அண்மைக் கால அகழாய்வுகள், தமிழின் தொன்மையையும் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும் கால எல்லைகளைக் கடந்து மேன்மேலும் உயர்த்துகின்றன. ”தமிழே உலக முதன்மொழி” -  அறிஞர்களின் ஆய்வுரைகளுக்கு வலுசேர்க்கும் வண்ணம் சான்றுகள் கிடைத்துவருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் சிவகலை என்னும் ஊரில் திரு மாணிக்கம் அவர்கள் முயற்சியில் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்களின்  வாழிடங்களைக்  கண்டறிந்துள்ளார். தமிழர்கள், தொல்பழங்காலத்திலேயே இரும்பை உருக்கிக் கருவிகள் செய்துள்ளனர்.

தமிழ், தமிழர் வாழ்வியல் தொன்மைச் சான்றுகள் ஆழ்கடலிலும் அடிமண்ணிலும் புதைந்து கிடக்கின்றன. தமிழின் காலப்பழமையைக் கணக்கிட அறிவியலே திணறும் காலம் தொலைவில் இல்லை,

10,000-yr –old megalithic sites found in Sivagalai

”A. Manickam,44, of Sivagalai village about historical evidences found in Sivagalai, which are older than Adicahanallur.
Manickam, a history teacher at a private school in Srivaikundam  town developed self-interest about the history of his village.
Manickam unearthed  several artefacts, which he believes to be atleast 10,000 years old. “Most of them are either water canals or irrigation lands now and hence was hidden in plain sight.” Manickam tolod TOI.

The expert appointed by the department too concurred with Manickam’s assessment and submitted that about 1,000 acres of burial urns are found underneath. “Terracotta potteries, knife, sword, horse stable rings made of iron and bones were found in the area and hence this might have been a burial site.” The expert had stated, according to the submission before the court by K.Sakthivel, assistant director (in charge) of archaeology, Madurai.” –TOI-20/2/19.


திருக்குறள் -சிறப்புரை :1142


திருக்குறள் -சிறப்புரை :1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். ---- ௧௧௪.

மலர்போலும் கண்ணைஉடையாளின் அருமை அறியாத இவ்வூரினர் அலர் தூற்றி, அவளை, யான் அடைதற்கு எளிமையாக்கி எனக்கு ஈந்தனரே.

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலோடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்பலூரும் அவனொடு மொழிமே.” -----குறுந்தொகை.

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது குளிர்ச்சியுடைய கரிய மலர், நூலற்று உதிர்ந்த முத்துக்களைப்போல, காற்றால் சிதறி, நீர்த்துறைகள்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை, யானும் விரும்புதலையுடையேன், நம் தாயும் அவன்பால் மிக்க அன்புடையவள் ; நம் தந்தையும் அவனுக்கே மணமுடிக்க விரும்புவார் ; அலர் தூற்றும் ஊரில் உள்ளாரும் அவனொடு நின்னைச் சேர்த்தே சொல்லுவர்;  நின் மணத்திற்குரிய முயற்சிகள் நடைபெறுகின்றன -கவலற்க.