புறநானூறு – அரிய செய்தி - 11
பண் இசைக்கும் நேரம்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் ...
வன்பரணர், புறநா. 149 : 2 – 4
மாலைப் பொழுதில் மருதப் பண்ணை இசைத்தும் காலைப் பொழுதில்
செவ்வழிப் பண்ணை இசைத்தும்
முறைமாற்றிஇசைத்தனர் எம் பாணர்.
காலையில்மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும்
இசைத்தல் இசை நூல்முறை. (மேலும் காண்க: 135 )
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடு பல வாழ்த்தி
மாறோக்கத்து நப்பசலையார், புறநா. 383 : 1 -4
ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து
எழுந்து குளிர்ந்த பனிதுளிக்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல் கொண்டு
தடாரிப் பறையை முழங்க அடித்து, நெடிய
வாயிற்கடை நின்று, பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி…
வெள்ளி தோன்ற புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தி
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
கல்லாடனார், புறநா.385 : 1- 4
வெள்ளியாகிய விண்மீன் வானத்தே தோன்றவும் புள்ளினங்கள்
எழுந்து ஒலிக்கவும் இரவு புலரும் விடியற்காலத்தே எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி,
யான் அவின் பெருமனை வாயிலிடத்துச்
சென்றிலேன்; பிறன்மனை வாயிலிடத்து நின்று கொட்டிய அகன்ற கண்ணை உடைய தடாரிப்
பறையினது ஓசையைக் கேட்டு அருள் கூர்ந்து..
தமிழிசை வரலாறு அறிய ஆய்க
முதன்மை நோக்கு : வரலாற்றியல் அணுகுமுறை
தமிழிசை வரலாறு
அறிய ஆய்க
முதன்மை நோக்கு : வரலாற்றியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 12
சிறுகதை
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறக.....
எனத் தொடங்கும்
இப்பாடல் (புறநானூறு 150) 28 அடிகளைக் கொண்டு, ஒரு
சிறுகதைக்குரிய இலக்கணவழகோடு இலங்குகிறது. இதுபோன்று சிறுகதை அமைப்புடைய பாடல்களை
இனங்கண்டு ஆய்க
புறநானூறு – அரிய செய்தி - 13
சான்றோர் பழிக்கும் வினைபுரிந்த
மன்னர்கள்
நன்னன் மருகன்
அன்றியும் நீயும் முயங்கற்கு
ஒத்தனை மன்னே வயங்கி மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால்வரை வரைந்தனர் எமரே
வன்பரணர், புறநா.151: 8 - 12
நின் முன்னோன் பெண் கொலை புரிந்த நன்னன் ஆவான்;நின் நாடு
பாடிவருவார்க்குக் கதவு அடைக்கும் தன்மையது; ஆதலால் எம்போல்வார் நின்
விச்சிமலையைப் பாடுதல் ஒழிந்தனர்.மேலும் காண்க : 375, குறுந்.292
புறநானூறு – அரிய செய்தி - 14
மன்னரைப் புகழ்தற்கு 21 துறைகள்
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி
கோ எனப் பெயரிய காலை ......
வன்பரணர், புறநா. 152 : 19 – 21
தலவனாதலாலே
இருபத்தொரு பாடற் துறையையும் முறையால் அவனைப் பாடி முடித்தேன்; முழை பொருந்திய
உச்சியுடைய உயர்ந்த கொல்லிமலைக்குத் தலைவன். ( வல்விலோரி)
மூவேழ்
துறையுமென்றது, வலிவு மெலிவு சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்று ஏழு தானம்
முடித்துப் பாடும் பாடற் றுறையை ; அன்றி, இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும்
பேரியாழ் எனினுமமையும். மூவேழ் துறைகளை, “
இசைத் தமைத்த கொண் டேழே யேழே நாலேமூன் றியலிசை யியல்பா, வஞ்சத்தேய்வின்றிக்கே
மனங்கொளப் பயிற்றுவோர் “ ( ஞானசம். 126:11 ) என்று ஞானசம்பந்தரும்
குறித்தனரென்பார். - ஒளவை சு. து. உரை. மதலை
மாக்கோல் = நமது பிறப்புணர்த்தும் கோல்.
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக
ஆவூர்மூலங்கிழார், புறநா.166 : 8, 9
இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றாகச் செய்து
முடித்த புகழமைந்த தலைமையுடைய அறிவுடையோர் மரபில் வந்தவனே.
உரை வேறுபாட்டினை நோக்குக , காண்க :
ஒளவை சு.து. உரை
தமிழிசை நுணுக்கங்களைக் கற்றுணர்ந்து ஆய்க.
புறநானூறு – அரிய செய்தி - 15
கடையெழு வள்ளல்கள்
– 8 குமணன்
கடையெழு
வள்ளல்களுக்குப் ( பாரி, ஓரி, காரி, அதியமான்,பேகன், ஆய் அண்டிரன்,நள்ளி ) பிறகு,
இரப்போரின் வறுமை தீர்தற்குக் காரணமாக உள்ள குமணனைப் பெருஞ்சித்திரனார்
வாழ்த்திப் பாடியது.
பெருஞ்சித்திரனார், புறநா. 158
முதுமையும் வறுமையும். தாய் , மனைவி,
மக்கள் வறுமைத் துயர்
பெருஞ்சித்திரனார், புறநா. 159
.குமணனைப் பாடியது.
பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறுங்கலம் திறந்து அழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனளாகி .............
பெருஞ்சித்திரனார், புறநா. 160 : 15 – 19
இளம் புதல்வன் பாலில்லாத வறிய முலையைச் சுவைத்துப் பால்
பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி, உள்ளே ஒன்றுமில்லாத வறிய சோற்றடு கலத்தைத் திறந்து பார்த்து அதில்
உணவைக் காணாது வருந்தி அழுகிறான் ; அவன் அழுகையை நிறுத்த காட்டில் உறையும்
மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும் நிலாவைக்காட்டியும் அவற்றால்
தணிக்க இயலாது வருந்தினாள்.
இன்று, குழந்தைக்கு
உணவு ஊட்ட இதே நிகழ்வு ....? மேலும் காண்க:
புறநா. 159, 164, 211, 165 – குமணனின் கொடைத் திறம்- தன் தலையைக் கொடுக்கத்
துணிதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக