புறநானூறு – அரிய செய்தி - 6
பொன் சுமந்த கலம்
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
மாறோக்கத்து நப்பசலையார், புறநா.126 : 14 – 16
சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும்
மரக்கலம் (கப்பலை) செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியுமோ?
மேலும் காண்க : பொன்படு மால்வரைக்
கிழவ.. புறநா.201
: 18, கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர, 202 :3,
பழந்தமிழகத்தில் பொற் சுரங்கம் இருந்ததா? –ஆய்க.
முதன்மை நோக்கு : தொல்லியல் , நிலவியலாய்வு அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 7
தாலி
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127 : 5, 6
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நாணை அணிந்த
மகளிருடன் நின் (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர்.
காண்க
: டாக்டர் மா. இராசமாணிக்கனார்,
தமிழர் திருமணத்தில் தாலி, 2012
முதன்மை நோக்கு : சமூகவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 8
மது - குரவை அயரும் குறவர்கள்
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.129 : 1 - 3
சிறு மனையின்கண் குறவர் மூங்கில் குழாயிலே வைத்திருந்து
முதிர்ந்த மதுவை உண்டு வேங்கை மரமுற்றத்தே
குரவைக் கூத்தை ஆடுவர்.
பண்டைத் தமிழர் அருந்திய மது வகைகள் பழக்க வழக்கங்கள் குறித்து
ஆய்க.
முதன்மை நோக்கு : சமுகவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 9
இமயம் - 132
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
கழை
வளர் இமயம் போல- 166
மூங்கில் வளரும் இமயம் போல
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 11: 23 – 25
ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும்
அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்
செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )
பெயர்க் காரணம் ஆய்க
முதன்மை நோக்கு : சொல்லாய்வியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 10
140 – அரிசி கொடு – யானை எதற்கு
இடித்துரைத்தல்
நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மி
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே
கபிலர், புறநா.143 : 12 -15
காதலன்புடைய மனைவியும் கணவனும் பிரிந்திருப்பின் , இருவரஒயும் ஒன்றுபடுத்தி
வாழ்வு இனிது நடக்குமாறு செய்தல் பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய புலவர்களினியல்பு.
அச்செயலையே பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்ற புலவர்கள்
செய்து அரசனை நல்வழிப்படுத்தினர்.
(மேலும் காண்க :
பேகன் – கண்ணகி உறவும் பிரிவும் 144, 145, 146, 147 )
முதன்மை நோக்கு : வரலாற்றியல் அணுகுமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக