புறநானூறு – அரிய செய்தி - 56
விருந்து
ஊனும் ஊணும் மினையின் இனிது என
பாலின் பெய்தவும்
பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக
நன்னாகனார்,
புறநா. 381 : 1- 4
இறைச்சியையும் சோற்றையும் உண்டு வெறுத்ததால், பாலிற் கலந்து
செய்தனவும் வெல்லப்பாகிற் செய்தனவும் ஆகிய பண்ணியங்களை, இவை மிக இனிய என்னுமாறு அளவாக
நன்கு கலந்து மென்மையாகப் பருகி விருந்தினர்களாகத் தங்கி, பசியைப் போக்கி இனிது
இருந்தோமாக.
புறநானூறு – அரிய செய்தி - 57
கடற்போர்
கடற்படை அடல்கொண்டி
மண்டுற்ற மலிர் நோன்தாள்
தண் சோழ நாட்டுப் பொருநன்
கோவூர் கிழார், புறநா. 382 : 1-3
கடற்போரில் பகைவரை வென்று கொண்ட பெரும்பொருள் நெருங்கிப்
பெருகிய ஊற்றம் மிக்க வலிய தாளை உடைய தண்ணிய சோழரது நாட்டில் வாழும் பொருநன்.
புறநானூறு – அரிய செய்தி - 58
பொருநன்
பாடுங்காலம்
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடு பல வாழ்த்தி
மாறோக்கத்து நப்பசலையார், புறநா. 383 : 1 -4
ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து
எழுந்து குளிர்ந்த பனிதுளிக்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல் கொண்டு
தடாரிப் பறையை முழங்க அடித்து நெடிய வாயிற்கடை நின்று பலவாகிய உழவு எருதுகளை
வாழ்த்தி.
வெள்ளி தோன்ற புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தி
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
கல்லாடனார், புறநா.385 : 1- 4
வெள்ளியாகிய விண்மீன் வானத்தே தோன்றவும் புள்ளினங்கள் எழுந்து
ஒலிக்கவும் இரவு புலரும் விடியற்காலத்தே எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி, யான்
அவின் பெருமனை வாயிலிடத்துச் சென்றிலேன்;
பிறன்மனை வாயிலிடத்து நின்று கொட்டிய அகன்ற கண்ணை உடைய தடாரிப் பறையினது ஓசையைக்
கேட்டு அருள் கூர்ந்து..
பகடு=எருது / யானை
புறநானூறு – அரிய செய்தி - 59
- கட்
கேள்வி-பாம்பு
யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்தி
கண்கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅப் போலும்
கோவூர்கிழார்
, புறநா. : 382 : 11-14 –
காண்க.126
எழுச்சியையுடைய
மணிநிறம் பொருந்திய, அழகிய படப் பொறி கொண்ட, கண்ணாற் கேட்கும் திறன் பெற்ற,
பிளவுபட்ட நாக்கினை உடைய, நிறம் பொருந்திய
பாம்பு தன் தோலை உரித்து நீக்கினாற்போல.
அறிவியல் நோக்கு- ஆய்க.
புறநானூறு – அரிய செய்தி - 60
வெள்ளி
மீன் – பஞ்சம்
வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை
மள்ளனார்,
புறநா.388: 1,2
வெள்ளியாகிய மீன் தென் திசையில் நிற்க ; விளை வயல்களும்
நீர் நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்.. (காண்க. ப.பாலை)
நீர் நுங்கின் கண் வலிப்ப
கான வேம்பின் காய்திரங்க
கயம் கனியும் கோடை ஆயினும்
ஏலா வெண்பொன்
போருறு காலை
கள்ளில்
ஆத்திரையனார், புறநா. 389: 1- 4
பனநுங்கின் கண் நீரின்றி வற்ற, காட்டில் உள்ள வேம்பின்
காய்கள் முற்றாதே உலர, ஆழமான நீர் நிலை வற்றி களிமயமாதற்குரிய கோடைக் காலமாயினும்
பொருந்தா வண்ணம் வெள்ளிக் கோள் மற்றைக் கோள்களோடு போர் செய்யும் காலத்தே....
மைம்மீன் புகையினும்தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
கபிலர், புறநா.117, 1-2
சனி மீன் புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றொடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்கராசியில் புகின் உலகிற்குப் பெருந்
தீங்கு விளையும். தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும்;
தூமகேது என்பதும் இதுவே. இது வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் மறைந்துறையும்
கோள்கள் நான்கனுள் ஒன்று ; தூமகேதுவின் தோற்றம் உலகிற்குப் பெருந்
தீங்கு விளைவிக்கும் என்பர்.தென் திசைக்கண் வெள்ளி மீன் சென்றால்
மழை இராது.
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிகவானுள் எரி தோன்றினும்
குளமீனொடும் தாள் புகையினும்
மதுரை நக்கீரர், புறநா.395 : 33 -35
அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று வாடினும் வானத்தே
எரிமீன்கள் மிகுதியாகத் தோன்றினாலும் குளமீனும் தாள் மீனும் ஆகிய விண்மீன்கள் புகைந்து
தோன்றுமாயினும்….( எரி, குளம்,
தாள் என்பன விண்மீன் வகை இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடுதரும் என்பது
பண்டையோர் கருத்து )
( காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குவதற்கு
முன்பே விளக்கம்பெற்ற தலைநகர் உறையூர்
- ஊரெனப்படுவது உறையூர் )
( உவியல் = அவியல்
. 395 . நகைவர் x பகைவர் -நகைவர் = நண்பர்-398.
பெட்டா = விரும்பி 399.)வானியலார் கருத்தறிந்து
ஆய்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக