புறநானூறு – அரிய செய்தி - 26
நரையும் கவலையும்
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்
பிசிராந்தையார், புறநா.191 : 1, 2
செமையான வாழ்வு அமைந்ததால் தமக்கு நரை தோன்றவில்லை, நரை
தோன்றுவதற்குக் காரணம் முதுமையன்று ; மனக் கவலையே என்றார் பிசிராந்தையார்.
இக்கூற்றின் உண்மைத் தன்மையை ஆய்க.
முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை.
புறநானூறு – அரிய செய்தி - 27
மழை மேகம்
ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்து
கடல்வயின் குழீஇய அண்ணல்அம் கொண்மூ
நீரின்று பெயராவாங்கு ...
பெருந்தலைச் சாத்தனார்,புறநா. 205 : 10 – 12
இடியினது மிகுந்த ஓசையைக் கொண்ட புதிய மழையைத் தருவதற்காகக்
கூட்டாகத் திரண்டு கடலின்கண் படியும் தலைமைமிக்க முகில்கள் நீரைக் கொள்ளாமல் மீளா.
அறிவியலுக்குப் பொருந்துகிறதா ? ஆய்க.
புறநானூறு – அரிய செய்தி - 28
ஆளி
மீளி முன்பின் ஆளி போல
பெருஞ்சித்திரனார், புறநா. 207 : 8
வலிமை மிக்க யாளியைப் போன்று
ஆளி- யானையை
வீழ்த்தும், ஆளி-யாளி-சிங்கம்
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ....
நக்கண்ணையார், அகம். 252 : 1-4
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை
ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து
வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன்
வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.
மேலும் காண்க : அகநா. 78, 381, நற். 205, பொருந. 139 – 142.
ஆளியென்பது சிங்கமன்று.... ஆளி நன்மானைப் பற்றிச் சங்கப்
பாடற் செய்தி வட நூலிலிருந்து வந்த செய்தியாகவே தெரிகின்றது. வடநூலில் இத்தகைய
கற்பனையான புராணச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. ஆளியை அத்தியாளி என்று
பிற்கால நூல்கள் கூறும். நிகண்டுகளில் யானை யாளியென்றும் இதையே அறுகு, பூட்கை யென்றும்
கூறப்பட்டுள்ளது. யானையினுடைய கையும் புலியினுடைய உடலும் அல்லது சிங்கத்தினுடைய
உருவும் கலந்த விலங்காகக் கூறுவர். இத்தகைய விலங்கு இயற்கையில் கிடையாது. பி.எல்.
சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,ப. 274.
புறநானூறு – அரிய செய்தி - 29
மேலுலகம், மறுபிறவி
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத் து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப் பிறவார் ஆயினும் ….
எவ்வாற்றானும் நல்வினை செய்தல் நன்றே
………..புறநா. 214 : 4 – 12
புறநானூறு – அரிய செய்தி - 30
எரித்தலும் புதைத்தலும்
எறி புனக் குறவன் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க …
ஒளவையார், புறநா.231 : 1 – 4
கரிய புறத்தை உடைய விறகுகள் அதியமானின் உடல் மீது அடுக்கப்பட்டிருந்தன. இனி அந்த ஈமத்தீயானது அவன் உடலைச் சுடாமல் அணைந்தாலும் அணையட்டும்
அல்லது வானத்தைத் தொடுமாறு அத்தீயானது மேல் எழுந்தாலும் எழட்டும்.
மேலும் காண்க : கவி செந்தாழி.புறநா.238., ஒள் எரி நைப்ப
உடம்பு மாய்ந்தது, உரிமை மகளிரும் உடன் மாய்ந்தனர்,240. கவிக்கும் கண் அகன் தாழி,228.
யாமும் எம் தலைவனோடு இறக்கவிருக்கின்றோமாதலின் இடம் அகன்ற பெரியதொரு
தாழி செய்ய வேண்டுதல், 256.
தமிழர் வழக்கம் பிணத்தை
எரித்தலா புதைத்தலா ? எரித்தல் புகுந்தமையும் புதைத்தல் ஒழிந்தமையும்
குறித்து ஆய்க. உடன் மாய்தலோடும் ( எரி
மூழ்குதல் )ஒப்பிடலாம்.
முதன்மை
நோக்கு : மானுடவியல், சமுகவியல் அணுகுமுறைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக