புறநானூறு – அரிய செய்தி - 16
கங்கை யாறு
வளமழை மாறிய என்றூழ்க் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
பெருஞ்சித்திரனார், புறநா.161 : 5 - 7
மழை நீங்கிய கோடைக் காலத்தில் மன்பதை எல்லாம் சென்று
நீருண்ணற்குக் காரணமான கங்கை பெரு வெள்ளத்தைப் போல ...
கங்கையை ஏன் பாடினார் ?
புறநானூறு – அரிய செய்தி - 17
காவல் மரம்
.................... நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
பெருஞ்சித்திரனார், புறநா.162 : 4 – 6
நின்னுடைய ஊரில் காவல் மரம் வருந்த, யாம் கொண்டுவந்து
கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்.
இறைவன் – அரசன்,
அரண்மனை – கோயில், காவல் மரம் – தலவிருட்சம் ?
மேலும் காண்க :
புறநா. 23, 36, 57
புறநானூறு – அரிய செய்தி - 18
நல்ல நாள் பார்த்தல்
நல்நாள் வருபதம் நோக்கி குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை
முந்து விலையாணர் நாள் புதிது உண்மார்
கதம்பிள்ளைச்சாத்தனார்,புறநா.168
: 5 - 7
விதைத்தற்கும்
விளைந்த தானியத்தை உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது பண்டைத் தமிழரின் வழக்கமாகும்.
இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் சிறு தினை முந்து விளை யாணர் நாள் புதிது
உண்மார் என்றும் கூறினார்.
மேலும் காண்க : புல்லும் பொழுதும் பழித்தல் அல்லதை, புறநா.204
: 10
வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
ஆறு செல் மாக்கள் புள்கொள பொருந்தும்
அள்ளூர் நன்முல்லையார்,
குறுந். 140 : 1, 2
கருக்கரிவாள் போன்ற
முதுகை உடைய முதிர்ந்த ஆண் ஓணான், வழியில் செல்லும்
மக்கள் நிமித்தம் பார்க்க உதவும்.
முதன்மை நோக்கு :- சமூகவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 19
விலங்குகளின் விருப்ப உணவு
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரலுடை முன்றில் அம்குடிச் சீறூர்
உறையூர் மருத்துவன் தாமோதரனார், புறநா. 170 : 1, 2
மரையா,
காட்டுப் பசு ; ஒருவகை விலங்கு என்பர் உ.
வே. சாமிநாதையர். இது நெல்லிக்காயைத்
தின்னுமிடத்து அதன் கொட்டயை வெளியே துப்பி விடுதலால், மரையா பிரித்துண்ட
நெல்லிப் பரல் என்றார். மனைகளில் நெல்லி மரங்கள் வேலியாக வைக்கப்பட்டுள்ளன,
மேலும்
காண்க : குறுந்.235, 317. அகநா.
69, 399. கலித்.6
புறநா. 257 பாலை நில உணவு
யானை – யா மரத்துப் பட்டை – நீர் வேட்கைக்கு
கரடிக்குட்டிகள் – இரவு உணவு – புற்றின்கண் அகழும் –
வெண்ணிறப் பாம்புகள் – புற்றாஞ் சோறு
ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 20
வெண்கோடு பயந்த முத்து
சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து
உறையூர் மருத்துவன் தாமோதரனார், புறநா. 170 : 10, 11
யானையின் கோடு மிகவும் முதிர்ந்த வழி அதன் நுனியில் முத்துண்டாமென்ப, முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற – பதிற்.
32 , என்று சான்றோர் கூறுதல் காண்க. மேலும் காண்க
: புறநா.161. குறிஞ்சிப். 35, 36. மலைபடு. 517, 518.
யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல் போல மறைத்த
வலிமையையுடையாய் என்பதும், காய்ந்தெறி கடுங்கல் தன்னைக் கவுட் கொண்ட களிறு
போல ( சீவக. 2910 ) என்பதும் எறிந்த
கல்லைக் கவுளில் அடக்குவது யாது குறித்தோ?
யானயின் கொம்பில் முத்துப் பிறப்பது, கற்பனைச் செய்தியேயாகும் .பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில்
விலங்கின விளக்கம், ப.281.
முதன்மை
நோக்கு : அறிவியல் அணுகுமுறை
ஆய்வு நெறி :-அறிவியல் அணுகுமுறை
மிக்க நன்று
பதிலளிநீக்கு