சனி, 4 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 31-35

புறநானூறு – அரிய செய்தி - 31
                                                           பொன்புனை திகிரி
சீர்கெழு நோன்தாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் .....
                                      வெள்ளெருக்கிலையார், புறநா. 233 : 3, 4

அகுதை, பெருவீரன் இவனிடம் பொன்னால் ஆன சக்கரம் ஒன்று இருந்ததால் இவனை வெல்வது அரிது என்னும் கருத்து எங்கும் பரவியிருந்தது.
பொற்திகிரிக்கும் சக்கரப்படைக்கும் புராணத் தொடர்பு  ஏதேனும் உண்டா?
நம்பிக்கை சார்ந்த புனைகதையா?- ஆய்க                      

புறநானூறு – அரிய செய்தி - 32
                                                        காட்டில் வழி அறிய
............................. கள்வர்
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்
மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
                                        உறையூர் மருத்துவன் தாமோதரனார், அகநா.. 257 : 12 – 14
ஆறலை கள்வராகிய பகைவர்மிகுந்த கவர்த்த வழிகளில், பின்வருவோர் தாம் செல்லுதற்குரிய வழி இதுவெனக் காணும் பொருட்டு, முன்செல்வார் யா மரத்தின் மேலே ஏணியைச் சார்த்திவிட்டுச் செல்வர்.
மேலும் காண்க :     பண்டு நற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
                          சந்துநீவிப் புல் முடிந்து இடுமின்
                                                       மலைபடு. 392,93
 பண்டே வழி தெரியாமல் புதிதாகப் போகும் வெளியூர் மக்களே, நீங்கள் செல்லும் வழியில் அடையாளமாக வழியில் உள்ள புல்லை நீக்கி முடிந்து விட்டுச் செல்லுங்கள்.


புறநானூறு – அரிய செய்தி - 33

                                               வடமோதங்கிழார்


வடமோதங்கிழார் பாடிய பாட்டொன்று அகத்திலும்   (317) காணப்படுகிறது. இவர் பொருள்களைக் கூர்ந்து நோக்கி, ஓவியம் எழுதுபவர்க்கு வேண்டுங் குறிப்புத்தருபவர்போலச் சொற்களால் ஓவியம் செய்து காட்டும் ஒள்ளிய புலமை படைத்தவர்.- ஒளவை சு. து.,
உரையாசிரியரின் இக்கூற்றை ஓவியத்துள் பொருத்தி ஆய்க.
புறநானூறு – அரிய செய்தி - 34
                             கைம்பெண்டிர்கூந்தல் கழித்தல்
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
                      மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம்எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் எனவே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழித்தல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.
புறநானூறு – அரிய செய்தி - 35

 தீங்கனிவீட்டில் வேப்பிலை செருகல்மருத்துவம்
 போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு .ஒளவை -உரை புறநா. 281.
தீம்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ
காக்கம் வம்மோ ........
                                                   அரிசில்கிழார், புறநா.281 :1 – 7
இனிய கனிகளைத்தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி ; யாழுடன் பல இசைக கருவிகள் ஒலிக்க; கையில் மையாகிய மெருகினை இட்டு; வெண் சிறு கடுகினைத் தூவி ; ஆம்பல் குழலை ஊதி ; மணியோசையை எழுப்பி ; காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து... இரவமொடு வேம்பு மனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன.

 வேப்பந் தழை செருகுதல்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லாமனையும் கல்லென்றவ்வே
                                          வெள்ளைமாளர், புறநா.296 : 1 - 3
போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு .ஒளவைசு.து. -உரை

இரவமரம் – யாதென விளங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக