திங்கள், 6 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 61 --63

புறநானூறு – அரிய செய்தி - 61
                                         - வெள்ளி வெண்கலம்
 அமிழ்துஅன மரபின் ஊந்துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
                                                ஒளவையார்,புறநா.390 : 17, 18
அமிழ்து போன்ற சுவை உடைய ஊந்துவையலோடு கூடிய சோற்றை, வெள்ளியால் ஆகிய வெண்மையான கலத்தே பெய்து உண்பித்தலோடு..
புறநானூறு – அரிய செய்தி - 62
                                              பொன்கலம்கரும்பு
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோள்முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங் கடையே
                                                     ஒளவையார், புறநா.392 : 16 – 21
 தேளினது கடுப்புப் போல நாட்பட்ட புளிப்பேறிய கள்ளை, கோளாகிய விண்மீன் (நாள் மீனினும் கோள் மீன் பெரிது )போன்ற பொன் வள்ளத்திற் பெய்து, உண்ணும் முறைப்படி அளிப்பதன்றி, கொள்ளும் முறையில் விருந்தாக எம்மை இருத்தி உண்பித்தான். கடற்கு அப்பாலுள்ள தாய்நாட்டில் உள்ள பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்.
( அந்தரத்து = வேற்று நாடு )அதியமான் முன்னோர்கள் கரும்பினைக் கொண்டுவந்த செய்தி.) ஆய்க.
புறநானூறு – அரிய செய்தி - 63
                                               - முட்டை  ஈன்ற அரவு
ஈன்ற அரவின் நாஉருக் கடுக்கும் என்
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி
                                              நல்லிறையனார், புறநா. 393 : 15,16
ஈனுதற்குரிய நாளை அடைந்து முட்டை ஈன்ற பாம்பினது நாவின் வடிவைப் போல  பழைமையுற்றுக் கிழிந்த பிளவுபட்ட  என் கந்தல் உடையை முற்றவும் நீக்கி ….. ( முட்டை ஈன்ற பாம்பின் நா பெரிதும் பிளவுபட்டுக் காட்டும் )விலங்கியலார் கூறுவது கொண்டு – ஆய்க.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக