புதன், 8 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 4-10

குறுந்தொகை - அரிய செய்தி - 4
                                                             காமப் பித்து
 மாஎன மடலும் ஊர்ப பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே
                                                             பேரெயின் முறுவலார், குறுந். 17
 காம நோய் முதிச்சியுற்றால்  ஊரும் குதிரை என ஊராத பனைமடலை ஊர்வர் ; ஒருவரும் சூடாத எருக்க மாலையை அணிந்துகொள்வர்; தெருவில் பலராலும் பரிகசிகப்படுவர் ; காதல் -  காமம்  நிறைவேறாத நிலையில் சாகவும் துணிவர்.
நன்னனது காவல் மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அவனையும் போரில் கொன்ற, வஞ்சினத்தை உடைய கோசர் செய்த சூழ்ச்சியைப் போலத் துணிவுடன் செய்யப்படும் ஆராய்ச்சியும் சிறிதளவு வேண்டற்பாலதேயாகும். மேலும் காண்க: குறள்.1131. அகம் 322. நற்ற். 152, 342. கலித். 106,புறம்.106.
பித்துப் பிடித்தல் – எருக்கு மருந்தாகும். – ஆய்க
குறுந்தொகை - அரிய செய்தி - 5
                                                 . காமமோ பெரிதே
 சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
                                                             -கபிலர், குறுந். 18 : 4, 5
காம்ம் என்பது உயிரில் தோன்றி வளரும் உணர்வு எனக் குறிக்கப்பட்டது.
ஆடவர், பெண்டிர் காம உணர்வின் இயல்பு – உடலியல், உயிரியல் – அறிவியல் ஆய்வு.
மேலும் காண்க : நற்.,335, கலித். 137.
        குறுந்தொகை அரிய செய்தி - 6
                                                           வலஞ்சுரி
சிலம்பு அணிகொண்ட வலம்சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
                                                சேரமான் எந்தை, குறுந்.22 : 3, 4
வலமாகச் சுரிந்து விளங்கும் வெண்கடம்பின் மலர்கள் வேனில் காலத்தில் மலர்ந்து மணம் வீசும்.
மேலும் காண்க : ஐங். 348, 383. அகம். 83
வலமாகச் சுழிந்து எழுதல், மலர்தல் – வலஞ் சுழிசிறப்பிக்கப்படுதலின் உட்கருத்து யாது ? அறிவியல் நோக்கு.- ஆய்க.
குறுந்தொகை -  அரிய செய்தி - 7
                                                      குளிறு - ஐயம்
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு  குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய கொடியோர் நாவே
                                பரணர், குறுந்.24 : 3-5
 கொடுமை உரைக்கும் மகளிரின் நாக்குகள் , யாற்றின் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள வெள்ளிய கொம்புகளையுடைய அத்தி மரத்தின், ஏழு நண்டுகள் பற்றிக் குழைந்த ஒரு பழத்தைப் போலக் குழைய  -- யான் வருந்தும்படி   ஆயிற்று .
ஏழு நண்டுகள் – என்ன கணக்கு – நண்டு – மிதிக்குமா  ?
குறுந்தொகை  - அரிய செய்தி - 8
                                                                 கனவு
 பொய்வலாளன் மெய்யுற மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட
                                         கச்சிப்பேட்டு நன்னாகையார், குறுந்.30 : 2, 3
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவன் என்னுடைய உடம்பின் ஊற்றின்பத்தைப் பெறுவதற்காக, இராக் காலத்தில் பொய்யாகிய கனவில் வந்து மயக்கியதை ---
 இஃது இரவில் கண்ட கனவுமுக்காலம் உணர்த்தும். பொய்க்கனவுபகல்கனவு . எண்ணங்களும் கனவுகளும் ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 9
                                       வீரர்கள் போர் விழா
மள்ளர் குழீஇய விழவினாலும்
                                       ஆதிமந்தி, குறுந். 31 : 1
வீரர்கள் கூடி எடுக்கும் வில் விழாவின் கண்ணும் ….
மேலும் காண்க : . காஞ்சி. 591 – 596,அகம். 400
 போட்டி விளையாட்டன்று ; மகிச்சி விளையாட்டு .பழங்குடி இன மக்களிடையே இவ்விளையாட்டு இருப்பதாகத் தெரிகிறது. ஆய்க.
குறுந்தொகை -  அரிய செய்தி - 10
                                                    ஒப்புமை – ஆய்க
சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ
                                           கழார்க்கீரன் எயிற்றி, குறுந். 35: 2,3
என்ன கொடி …. என்ன மரம்..?
பொருள் தெரியவில்லை
மாணை மாக் கொடி – ஒருவகைக் கொடி
                                              குறுந்.36
இரவம் – ஒருவகை மரம்
 நல் அராக் கதுவியாங்கு – நல்ல பாம்பு தீண்டினாற்போல
                                                                       குறுந்.43
அகல்இரு விசும்பு – நிலம், நீர், தீ, வளி இவை அகன்று விரிதற்கு இடமாகிய பெரிய ஆகாயம். குறுந்.44
மகளிர் மரப்பாச்சி விளையாட்டு – குறுந்.48

நரந்தம் – கஸ்தூரி மிருகம் – வாசனைப் புல்வகை / பூ  – குறுந். 52

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக