புறநானூறு – அரிய செய்தி - 51
படையல் – இறந்தவர் , நடுகல்
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்லகத்து இட்டசில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்
பலர்வாய்த்து இராஅர் பருத்து உண்டோரே
நந்து மாறனைச் சங்க வருணர் என்னும் நாகரியர், புறநா. 360 :
16 - 21
பாழிடமாகிய சுடுகாட்டில் கள்ளி ஓங்கி வளர்ந்துள்ள களர்
நிலத்தின் பக்கத்தே, பாடையை நிறுத்திய பின்னர், பிணத்தைப் புல் மீது கிடத்தி, கள்ளுடனே சில சோறாகிய உணவைப் புலையன்
படைப்பான். புலையன் ஏவலுக்குப் புல்மேல் கிடத்திய பிணத்தைச் சுடலைத்தீயில் சுட்டெரித்தது கண்ட பின்னரும் உண்டு பருத்தோர்
பலரும் புகழ் வாய்த்து இருந்தார் இலர். மேலும் காண்க : புறநா. 232
புறநானூறு – அரிய செய்தி - 52
தாரை
வார்த்துக் கொடுத்தல்
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறி பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈந்து
புலவர் பெயர் தெரியவில்லை, புறநா. 361 : 4 – 6
நல்ல பல நூல்களைக் கற்றதோடு கேள்விச் செல்வமும் கொண்டு வேள்வி செய்தலை உடைய
அந்தணர்களுக்கு, பெற்ற்கரிய அணிகலன்களைத் தாரை நீர் வார்த்துக்கொடுத்த
பெருந்தகையாளன் எம் தலைவன்.
அந்தணர்களுக்குப் பொருள் கொடுக்குங்கால் தாரைநீர்
வார்த்துக் கொடுத்தல் உலக வழக்கு.
ஆக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறைக் குறி ....... யின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கைபெய்த நீர் கடற்பரப்ப
சிறுவெண் தேரையர், புறநா.362 : 8 – 12
அந்தணாளர்களே நான்கு மறைகளிலும் ......................
புறத்துறையாகிய பொருள் குறித்தலின்
அறநூல்களிலும் குறிக்கப்படுவதும் அன்று மருட்கையினின்றும் நீங்கி, மயக்கத்தையும்
போக்கி, கொடுத்தற் பொருட்டு பார்ப்பார் தம் கைகளில் பெய்த தாரை நீர் கடல் அளவும்
பரந்து சென்றது.
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும்
புனல்படச் சொரிந்து
ஒளவையார், புறநா. 367 : 4, 5
பொருளை யாசித்து நின்ற பார்ப்பார்க்கு, குளிர்ந்த கை
நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் தாரை நீர் வார்த்துக் கொடுத்தும்..
புறநானூறு – அரிய செய்தி - 53
திருமணச்
சடங்கு – பன்னீர் தெளித்தலோ ?
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய் ...
மாங்குடி
கிழார், புறநா. 372 : 10 – 12
திருமணவிழாவில் நிகழ்வது போல் விருந்தினர் எல்லோருக்கும்,
வழிபடுங்கலத்துப் புதிது பெய்த புனித நீரை, கலத்தின் வெவ்விய வாயின் வழியாகப்
பெற்று புதுநீரைத் தெளித்து, புலவு நாறும்
போர்க்களம்.
புறநானூறு – அரிய செய்தி - 54
உலகம்
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
முரஞ்சியூர் முடிநாகராயர், புறநா. 2 :
1 -6
காண்க. உரை
தமிழ்ச் சான்றோர் -
கிரேக்க விஞ்ஞானிகள் – ஒப்பிடுக.
உல் = உருண்டை, உலகம்
= உயிகள் உறையும் இடம்
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
தொல். 1589 : 1,2
உலகம் (ஐவகை இயற்கையும்) முத்தும் மணியும் பவளமும் போலக்
கலந்தும் செம்பும் பொன்னும் வெள்ளியும் உருக்கி ஓட்டினார் போல மயங்கியும்
கிடப்பது. காண்க. இளம்பூரணர் உரை.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ... – குறள்.1031
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. குறள். 27
பரிதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம்
வான்மீகியார், புறநா. 358 : 1
சூரியனால் சூழப்பெற்ற, பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்.
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது
கல்லாடனார், புறநா. 371 : 1
அகன்ற இடத்தை உடைய இந்நிலவுலகத்தின்கண் எம்மைப்
பாதுகாக்கும் புரவலரைக் காணப்பெறாமையான்
இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
ஐயாதிச்
சிறுவெண்டேரையர், 363 : 1
கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை.
மயங்குஇருங்
கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
மார்க்கண்டேயனார், புறநா. 365 : 1-3
தம்மிற் கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும்,
ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம்
பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு முகம் ; இருசுடர்கள் கண்.
ஊழிகள் தோற்றம்
தொல்முறை இயற்கையின் ……
கீரந்தையார்,
பரிபா. 2
ஒன்றற்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் கெட்டு, விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர் வானமும் கெட்டு இல்லையாகச்
சிதைந்து ஒடுங்கிய ஊழிக் காலங்கள் பற்பல முறை முறையாக்க் கழிந்தனவாக.
உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும்
ஒளியிழந்து துகளாகி வான வெளியிலே சிதறிப் போக நிலமுதலிய உலகங்கள் சத்தி கெட்டு நொருங்கித்
துகள் பட்டு ஒழியும்.
புறநானூறு – அரிய செய்தி - 55
காடு தந்த பொன்
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
உலோச்சனார்,
புறநா. 377 : 16, 17
மலையிடைப் பெற்ற மணிகளையும் காட்டிற் பெறப்பட்ட பொன்னையும்.
கடலிடத்தே பெறப்பட்ட ஒளி படைத்த முத்துக்களையும்..
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்,
அகநா.149: 8-10
சுள்ளி என்னும் பெயர் கொண்ட பேரியாறு சேர அரசர்க்கு உரித்தானது. அவ்வழகிய யாற்றினது வெண்ணிற நுரை சிதறுமாறு யவனர்கள் கொண்டுவந்த
தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம், பொன்னை விலையாகக் கொடுத்துவிட்டு
மிளகை ஏற்றிச் செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக