சனி, 11 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 21-23

குறுந்தொகை - அரிய செய்தி - 21
                                                                           பாம்பு பட இடிக்கும்
நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
                     ஒளவையார், குறுந்.158 : 1 – 3
உயர்ந்த மலைப் பக்கத்தில் வாழும் பாம்புகள் இறந்துபடும்படி ஒலிக்கும் மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது.......
 இடியோசைக்குப் பாம்பு இறந்துபடுமா ? விலங்கு நூல் கொண்டு ஆய்க.
மேலும் காண்க : அகநா. 92,  நற். 114


குறுந்தொகை - அரிய செய்தி - 22
                                                                அன்றில் பறவை
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில் ...
                     மதுரை மருதன் இளநாகன், குறுந். 160 : 1 – 3
தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை, இறாமீனைப் போன்ற வளைந்த அலகினையுடைய தன் பெண் அன்றிலுடன், தடா மரத்தின் உயர்ந்த கிளையின்கண் உள்ள தன் கூட்டிலிருந்து, தம் காதலரைப் பிரிந்தோர்க்குச் செயலறவு தோன்றும்படி ஒலிக்கும்.
அன்றில், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் பறவைகள். கிரெளஞ்ச மிதுனம்  என்ற பறவையினம் போல இரட்டையாய் வாழ்வதால் புணர் அன்றில் எனப்பட்டது.அன்றில் ஒரு கண் துயின்று, ஒரு கண் ஆர்வத்தால் தன் துணைமேல் வைத்து உறங்கும் அன்புடைய பறவையாகும். இது, சக்கரவாகம் போல் பகலில் புணரும் பறவை என ரா, இராகவையங்கார் குறிப்பிடுவார். நாகாலாந்து பழங்குடி மக்களின் வழிபாட்டிற்குரியது. அன்றில் பறவையின் இறகுகளைத் தலையில் சூடி
 ஆடுவர். அறிவியல் நோக்கில் ஆய்க.
மேலும் காண்க : நற். 124, 152, 303. குறிஞ்சிப். 219.
குறுந்தொகை - அரிய செய்தி - 23
                                                                         மடல் வடிவம்
பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி ...
        மதுரைக் காஞ்சிப்புலவன், குறுந்.173 : 1 – 3

பொன்போன்ற ஆவிரையின் புதிய பூக்களை, இடையிட்டு நெருங்கக் கட்டிய நூல்களையுடைய பல மாலைகளை அணிந்த பனங்கருக்கினால் செய்யப்பட்ட ஊர் மக்களின் ஆர்ப்பினுக்கு உரிய குதிரையை அதன் கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்கும்படி ஏறி .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக