செவ்வாய், 30 ஜூன், 2015

புறநானூறு – அரிய செய்தி - 2-5

புறநானூறு – அரிய செய்தி - 2
                                                    மக்கட்பேறு
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் ...
           உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.28 : 1 – 6
சிறப்பில்லாத குருடும் வடிவற்ற தசைப் பிண்டமும் கூனும் குறுகிய தோற்றமும் ஊமையும் செவிடும் விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கி இருப்பதும் ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவை, இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதைத் தன்மையிலான பிறப்புகள், இவற்றால் யாதொரு பயனும் இல்லை என  நன்கு அறிந்தோர் முற்காலத்தில் கூறினர்.
இன்றைய குழந்தைகள்நல மருத்துவ அறிவியலோடு ஒப்பிடவும்.
அறிவியல் வளர்ச்சியில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆய்க.
முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 3
                                              இயற்கையும் செயற்கையும்
மாரி பொய்ப்பினும்  வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்  இக் கண்ணகன் ஞாலம்
                              வெள்ளைக்குடி நாகனார், புறம்.35: 27-29
 மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினாலும்  காவலரைப் பழிக்கும் இவ்விடமன்ற உலகம்.
என்னே சங்கப் புலவரின் தொலை நோக்குச் சிந்தனைஇயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம் அதாவது மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல்,மணல் கொள்ளையடித்தல், நெகிழ்வி பயன்படுத்தல், காற்றை மாசூட்டுதல் போன்ற கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இதைதான் செயற்கையால் இயற்கையை அழித்தல் என்று புலவர் கூறினார் என்று கொள்க.காவலர் யாவர்?  - அன்று- மன்னன், இன்று- ஆள்வோர்.
புறநானூறு – அரிய செய்தி - 4   
                                                  போர்க் களக் காட்சி
இன்சுடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பு ஒதுகின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின் ஒதுகின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றி
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே
                                         சாத்தந்தையார், புறநா. 80
இனிய கடுமையான கள்ளினை உடையது ஆமூர். அவ்வூரில் வலிமையுடைய மல்லனுடைய மிகுதியான வலிமையை அழித்து நின்றனன் பெருநற்கிள்ளி. அங்ஙனம் பொருதபோது ஒரு காலை மடக்கி மண்டியிட்டு மல்லனின் மார்பில் வைத்தும் மற்றொரு காலை மல்லன் முயலும் தந்திரங்கட்கு விலக்கி முதுகின் பின்னர் வைத்தும் இருந்தனன்.
பசித்து மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப் போல தலையும் காலுமாகிய இரண்டிடமும் முறியுமாறு மோதினான். களத்தில் போரில் எதிர்ப்பட்ட மல்லனை வென்று கொன்ற நிலையை, வெல்லும் போருடையவனும் போரிடுவதற்கு அரியவனும் கிள்ளியின் தந்தையுமாகிய தித்தன் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக.
இப்பாடல் ஒரு நேர்முக வருணனை. இவ்வகைப் பாடல்களைத் தொகுத்து ஆய்க.
(ஏமாந்த = ஆசைப்பட்ட. 101) சேம அச்சு = ஸ்டெப்னி – 102. குறுமாக்கள் = சிறு பிள்ளை
கள்.104. பவர் = கொடி. 109 பழிச்சி = வாழ்த்தி 113. அல்குல் = உயிர் உறுப்பு, மறை உறுப்பு.116.
புறநானூறு – அரிய செய்தி - 5
                                                         புளிச்சோறு
செம்புற்று ஈயலின் இன் அளை புளித்து
                                              கபிலர், புறநா. 119 : 3
செம்புற்றின் ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடைத்து – பாரி நாடு.
இது போன்று வேறு பல உணவு வகைகளையும் சமையல் முறைகளையும் மேலும் காண்க.நெய்ச் சோறு-120, பாற் சோறு- 168  இன்னபிற உணவு வகைகள்- ஆய்க.

முதன்மை நோக்கு : சமுகவியல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக