வெள்ளி, 26 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -116-120

அகநானூறு – அரிய செய்தி -116
                               புணர்ச்சி –பரவசநிலை - டிஸ்கவரி 27/11/11.8-பிஎம்
தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பல்படை நிவந்த வறுமையில் சேக்கைப்
பருகு வன்ன காதலொடு திருகி
மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
                  வடமவண்ணக்கன் பேரிசாத்தனார், அகநா.305: 3 – 8
பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கையின்கண், பருகுதலையொத்த காதலுடன், மாறி ஒருவர் மெய்யில் ஒருவர் மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால் ஈருடம்பிற்கு ஓர் உயிரெனத் தகும் காதலர்களும் வருந்தா நிற்பரன்றோ.
அகநானூறு – அரிய செய்தி -117
                                           தழை ஆடை – நெய்தல்
தழையணி யல்குற் செல்வத் தங்கையர்  -3
 தழை அணியினை அணிந்த அல்குலையுடைய செல்வமிக்க தங்கைமார் –  விலை கூறி மீன் விற்றனர்.
அகநானூறு – அரிய செய்தி -118
,                                             உப்பு விற்றல், புணர்ச்சி  - நெய்தல்
நடுங்கயிர் போழ்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள் புதி துண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ கடலறி கரியே
            மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், அகநா.320:11-14
நெகிழும் நுண்மணலைப் பிளந்துகொண்டு வந்த கொடுஞ்சியையுடைய நீண்ட  தேரினை, யாங்கள் புனைந்து விளையாடிய வண்டற் பாவை அழிந்திடச் செலுத்திவந்து நீ, இவள் தோளின் நலத்தினைப் புதுவதாக நுகர்ந்த நாளில், கடலானது அறியும் சான்றாக, நீ கூறிய சூளும் பொய்யோ?
அகநானூறு – அரிய செய்தி -119            
                                            புணர்ச்சி-காமநோய் படுத்தும்பாடு
   வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்பெறி கோலிற் றமியை வைகித்
தேம்புதி கொல்லோ நெஞ்சே .....
                                                -பரணர், அகநா. 302 : 1 – 6
 விளங்கும் வெயில் மறையவே ( மேகம்) பரந்து, மின்னல் பிளந்திட மிக்க மழையைச் சொரிந்த நடு இரவில் ஆராக் காமம் வருத்தி நின்று அலைத்திட, மலை முகட்டினின்று வீழ்ந்து இறப்பார் போன்று, அச்சம் உண்டாக நடுங்கி, கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல்  வேறுதுணையின்றி வாடுவையோ?
அகநானூறு – அரிய செய்தி -120
                                      களவுப் புணர்ச்சி - பாலை
அம்ம வாழி தோழி காதலர்
வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்
நளியிருங் கங்குற் புணர் குறி வாய்த்த
களவுங் கைம்மிக  வளர்ந்தன்று ......
   மாமூலனார், அகநா. 325 : 1 – 4

நம் காதலர் வெள்ளிய மணல் உயர்ந்த பொலிவி பெற்ற வாயிலையுடைய பெரிய மனையின்கண், இருள் செறிந்த நீண்ட இரவில், புணரும் குறி அமைந்த, களவொழுக்கமும் வரம்பிகந்து நீண்டது .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக