வெள்ளி, 26 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -126 - 136 -முற்றும்

-      அகநானூறு – அரிய செய்தி -126
                                       புற்றாஞ் சோறு
கோடைநீடலின் வாடுபுலத் துக்க
சிறுபுல் லுணவு நெறிபட மறுகி
நுண்பல் எறும்பு கொண்டளச் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்
  மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார், அகநா.377
 மறவர்கள் தம் உணவினை விதைத்து விளைவித்தலின்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும் இயல்பினராதல் பெற்றாம். – பாலை
அகநானூறு – அரிய செய்தி -127
                                            தாள்தோய் தடக்கை
ஓடு புறங் கண்ட தாள்தோய் தடக்கை
                           மதுரை மருதன் இளநாகனார், அகநா.312: 11
 முழந்தாளினைப் பொருந்தும் பெரிய கையினையுடைய, போர் வெல்லும் பாண்டியன்
 ஆய்க – உடல் உறுப்புகள் – காதளவோடிய கண்கள், அமிழ்துபொதி துவர் வாய்,( விறலி ஆற்றுப்படை)
அகநானூறு – அரிய செய்தி -128
                                         அரவு விழுங்கிய திங்கள்,ஒற்றுச்செல் மாக்கள்
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்ப
                                 பாலை பாடிய பெருங்கடுங்கோ,அகநா.313:7
அரா விழுங்கிய திங்களென நெற்றி ஒளியினை இழந்திட
அகநானூறு – அரிய செய்தி -129
                               வருத்தம் தரும் செவ்வழிப் பண்புரவி நூல்
 நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி யியம்ப ....8, 9
...........................................................
.............................................. தீந்தொடை
பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரா ராயின் .........11 – 13
               மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், அகநா.314
புரவி நூல் கூறும் முறைப்படி நுண்ணிதின் அமைந்த, வேகத்தாற் காற்றெனக் கூறத்தகும் குதிரை.
இனிய நரம்புத் தொடையினையுடைய நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப் பண் தோன்ற ........................

அகநானூறு – அரிய செய்தி -130
                                 புரவி நூல் – குதிரை இலக்கணம்
நூலமை பிறப்பின் நீல உத்திக்
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற் றார்கை
                     உலோச்சனார், அகநா. 400: 5-7
புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும் நீல மணியாலாகிய நெற்றிச்சுட்டினையும், சரிச்சரையுண்டாக அடர்ந்து கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரியினையும்......
அகநானூறு – அரிய செய்தி -131        
                                       பருவமுற்றனள் காதல் திருமணம்
கூழையும் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்டுணை சான்றனள் இவளென,,,,,,,,,  அகநா. 315 :1- 3
தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் எனும் இயல்பினை அமைந்தனள்.( இவளைக் காக்கத் தவறி விட்டேனே – மகட்போக்கிய தாய்.)
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக் கொல்கிப்
புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்
அறுநீற் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகி.... 8 – 14
                    குடவாயிற் கீரத்தனார், அகநா.315
தனது அரிய காவல் பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பும் செய்யப் பெறாளாய், நெடுந்தூரம் சென்று, நீரற்ற சுனைக்கண் நீர் பெறாது தளர்ந்து, புறா துளைத்துண்டமையின் மேல்காற்று உதிர்த்திட்ட  குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள், நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளையொப்ப வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில், கூரிய வேலினையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று...
மேலும் காண்க : சிலம்புகழி நோன்பு என்பது கலியாணத்திற்கு முன்பு செய்யப்படுவதொரு சடங்கு. – நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின், எவனோ- ஐங்குறு. 399. – சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ , அறியாத் தேஎத்தல் ஆகுதல் கொடிதே – அகநா. 385.  – சிலம்பு கழீஇ செல்வம், பிறருணக் கழிந்த வென்னாயிழை யடியே – நற். 279.
அகநானூறு – அரிய செய்தி -132
            பரத்தமைபாடி –குரவை ஆடுதல்-துணங்கைக் கூத்து, ஞாயிறு நோக்கிச் சுழலும் நெருஞ்சிப் பூ,
தெண்கட் டேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அங்குடம்  இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க்
காஞ்சி நீழற் குரவை யயருந்  - 6 -10
............................................................
தாமும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் – 15,16
தெளிந்த கள்ளினைக்குடித்து, மகளிர் நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு, தம் கணவரது நற்பண்பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களையுடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவை ஆடுதலைச் செய்யும்.
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாக் காலத்தே...
அகநானூறு – அரிய செய்தி -133                     
                           புலவன் பாடிய நன்னன் எழில் குன்றம்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்து
                    குடவாயிற் கீரத்தனார், அகநா.345: 5 -7
பழைமையான புகழினையுடைய மிக நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனாற் பாடப்பெற்ற மேகங்கள் தவழும் ஏழில் குன்றத்தின்கண்.
ஏழிற் குன்றம் நன்னன் என்பானது; மேல்கடற் பக்கத்தது. மேலும் : அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை, சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு, ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொள. அகநா.349: 7 -9 ஏழில் மலை – எழில் மலை – எலி மலை – காண்க.
அகநானூறு – அரிய செய்தி -134
                                      சொல்பெயர் தேயம், செம்மொழி
........................................ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
                      மாமூலனார், அகநா. 349: 3, 4
பொருளின் அளவை அறியும் கருவியாய துலாக் கோலையொத்த, குற்றமற்ற செம்மொழியினை யுடையனாகிய ....

350- வலம்புரி- முத்து எடுத்தல், பரதவர் கொற்கை
356 – நன்னன் பறம்பு-ஒப்பிடு சுடர்த் தொடி – கலி.
................................................. ஊரன்(மருதம்)
 இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென்
பொற்றொடி முன்கை பற்றினன் ஆக
 அன்னாய் என்றனென் அவன் கைவிட்டனனே
                                        பரணர், அகநா.356: 5-7
(சுடர்த் தொடீஇ.....
வளைமுன் கைபற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்த்து காண் என்றேனா
                                                       கபிலர், கலித். 51 : 10,11
தொன்னசை காவாமை நன்னன் பறம்பிற்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற்போல் நாவினேன் ஆகி .....
                                                -பரணர், அகநா. 356 : 4 - 10
( சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொற்றாம்
மறந்தனர் கொல்லோ தோழி ... மாமூலனார், அகம். 1: 5-7)
     அகநானூறு – அரிய செய்தி -135                                             
                                     பாம்பு உமிழ்ந்த மணி
மேய்மணி யிழந்த  பாம்பின் நீநனி
தேம்பினை வாழியன் நெஞ்சே …..
             பரணர், அகநா.372, 13, 14
மேய்தற் பொருட்டு உமிழ்ந்துவைத்த மணியினை இழந்த பாம்பைப்   போல நீ மிகவும் வாடுதலுற்றனை, ( குறிஞ்சி)
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
அகநானூறு – அரிய செய்தி -136
                                               கூந்தலில் மணம்
நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
-      காவட்டனார், அகநா. 378 : 1,2
மிக்க பொருள் தங்கும்  உயர்ந்தோங்கும் மனையகத்தே, கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல்போல் மணம் பொருந்துமாறு…. மணங்கமழும் வேங்கை மரத்தின் பொன்னிறத் தாதுக்கள் காற்று அடித்தலால் உதிர….
 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு
                                                              குறள். 1113
வேய் போலும் தோளினை உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்தமாயிருக்கும் இயல்பாய நாற்றம் நறு நாற்றமாயிருக்கும் உண்கண்கள் வேலாயிருக்கும்.
அகநானூறு – அரியசெய்தி – முற்றும்

            அடுத்து வருவது – புறநானூறு – அரிய செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக