வியாழன், 4 ஜூன், 2015

குறுந்தொகை – பொன்மொழிகள் – பகுதி - 2

குறுந்தொகை – பொன்மொழிகள் – பகுதி - 2
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் –கட்டுரையில் காண்க)
கடப்பாட்டாளன் உடைப்பொருள் போலத்
தங்குதற்கு உரியதன்று நின்
அம்கலுழ் மேனிப் பாஅய பசப்பே
                    மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார், குறுந். 143 : 5 – 7
ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல, நின் அழகிய மேனியில் பரந்த பசலையானது நிலையாகத் தங்குவதற்கு உரியது அன்று.

இன் துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே
                                           கோப்பெருஞ் சோழன், குறுந். 147 : 4, 5
எம் தலைவியை நேரில் கொண்டு வந்து காட்டியது போலக் கனவில் காட்டி எனது இனிய உறக்கத்தைக் கலைத்துவிட்டாய், என்றாலும்  மனைவியைப் பிரிந்தவர்கள் கனவே உன்னை இகழமாட்டார்கள்.
மறப்பருங் காதலி ஒழிய
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே
                                               தூங்கலோரியார், குறுந். 151 : 5, 6   
 நெஞ்சே ,மறத்தற்கரிய காதலியை விட்டுப் பிரிந்து செல்வேன் எனக் கூறுதல் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.

படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ...
             பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், குறுந். 156: 4-7            
            நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே, ஏட்டில் எழுதாமல் வாய் மொழியாகக் கற்கின்ற நினது வேதத்தின் சொற்களில், பிரிந்திருக்கும் காதலரைக் சேர்த்துவைக்கும் தன்மையுள்ள மருந்தும் சொல்லப்பட்டிருக்கிறதா ?

தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே
                                அள்ளூர் நன்முல்லையார், குறுந். 157 : 3, 4  
இணைந்த காதலரைப் பிரிக்கும் வைகறைப் பொழுது வாள்போல் வந்ததே

மகிழ்ந்ததன்  தலையும் நறவு உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்து உற்றனை
                                                                  பரணர், குறுந். 165 : 1, 2 
நெஞ்சே, கள் குடித்தவன் மீண்டும் அக்கள்ளையே விரும்பிக் குடிப்பதைப் போல, இவளை அடைய மேலும் மேலும் விரும்புகிறாயே.
தண் கடல் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்
கூடலூர்கிழார், குறுந். 166 : 1, 2
         
குளிர்ந்த கடலில்  தோன்றும் அலைகள் மீன்களை இடம் பெயரச் செய்ததால் வெள்ளிய சிறகுகளை உடைய நாரைக் கூட்டமும் இடம் பெயர்ந்து அயிரை மீன்களைத் தின்னும்.

தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே
கூடலூர் கிழார், குறுந். 167 : 4 – 6

            கணவனுக்காகத் தானே சமைத்த இனிய புளிச்சுவை உடைய உணவை மனைவி படைக்க, அதனை உண்ணும் போது  இனிது எனஅவன் கூறியதைக் கேட்டு, அவளின் அகம் மகிழ்ந்ததை முகம் காட்டியது.

மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
                             சிறைக்குடி ஆந்தையார், குறுந். 168 : 6, 7   
நெஞ்சே, தலைவியுடன் எப்பொழுதும் உடன் இருப்பதால் புதிதாகச்  சேர்தலும், பிரிதலும் இல்லையாயின இனிப் பிரிந்து சென்றால்  உயிர் வாழ்தல் அதனினும் இல்லை.

பொருள்வயின் பிரிவார் ஆயின் இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே
                                               வெண்பூதியார், குறுந். 174 : 6, 7      
தோழி, தலைவன் பொருளே உயர்ந்ததெனக் கருதி என்னைவிட்டுப் பிரியத் துணிந்தார், உயர்ந்த பொருளாகிய அருள்தான் யாரிடத்தும் இல்லாதது போலும்.

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
                               ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன், குறுந். 184 : 1   
தமக்குத் தெரிந்த ஒன்றை மறைத்துப் பொச்சான்று கூறும் பழக்கம் பண்புடையாளரிடம் இல்லை.

கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே
                                  கபிலர், குறுந். 187: 4, 5          
மணம் முடிக்க மனமில்லாத தலைவன், கல்லை விட வலிய நெஞ்சுரம் உடையவன் எனக் கருதாது, என் நெஞ்சு மெலிகின்றதே.
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் எம் தோளே
இன்றும், முல்லை முகை நாறும்மே
அரிசில் கிழார், குறுந். 193 : 4 -6           
தோழி, சென்ற திங்கள் முழுநிலவில் தலைவன் என்னைத் தழுவினான் அன்று அவன் சூடி வந்த முல்லை இன்றும் என் தோளில் மணக்கிறது.

கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே
                          கச்சிப்பேட்டு நன்னாகையார், குறுந். 197 : 4, 5     
தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் என்னை நோக்கிக் கூற்றுவன் வடிவில் கூதிர்ப்பருவம் வந்ததே
இன்றை அன்ன நட்பின் இந்நோய்
இறுமுறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்தும் மன்னுதல் பெறினே
                                                    பரணர், குறுந். 199 : 6 – 8      
இன்றைக்குத் தோன்றியது போன்ற நட்பினால் ஏற்படும் அன்பின் மிகுதியாகிய காமநோயானது அழிவு என்ற ஒன்று இல்லாமல் மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும் நிலை பேற்றை அடையும்.

மறந்தோர் மன்ற மறவாம் நாமே
                                                ஒளவையார், குறுந். 200 : 4    
நம்மை மறந்தாரை நாம் மறக்கவில்லை.

இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே
                                   அள்ளூர் நன்முல்லையார், குறுந். 202 : 4, 5    
இனிமை செய்த எம் காதலர் துன்பத்தைத் தந்து வருந்தச் செய்கின்றாரே.

இடத்து உவந்த உதவி கட்டில்
வீடுபெற்று மறந்த மன்னன் போல
                                                       கபிலர், குறுந். 225 : 3, 4     
தான்கெட்ட இடத்து ஒருவரின் உதவிபெற்று அரசனான ஒருவன், உதவி செய்தவர்களை மறந்தது போல.
பெரும்புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணை இலோர்க்கே
                            மிளைப்பெருங்கந்தன், குறுந். 234 : 5,6          
            பிரிவுத் துயரில் தனித்து வாடும் காதலர்க்கு, மாலைப் பொழுது மட்டும் மாலை இல்லை, விடியற் காலமும் மாலை, நண்பகல் பொழுதும் மாலையே.
.. சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே
                         கிடங்கில் குலபதி நக்கண்ணனார், குறுந். 252 : 6 – 8    -சான்றோர்
சான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர்.
தாம் அறி செம்மைச் சான்றோர் கண்ட                              
கடன் அறி மாக்கள்
                                    கருவூர்க்  கதப்பிள்ளை, குறுந். 265 : 3, 4      
தமக்கு முன்பே அறிமுகமான, நடுநிலையுடைய சான்றோரைக் கண்ட அளவிலேயே  அவர்களுக்கு இனியன உதவும் கடைமைகளை அறிந்த மக்கள்.
உற்றது மன்னும் ஒரு நாள் மற்றுஅது
தவப்பல் நாள்தோள் மயங்கி
வெளவும் பண்பின் நோய் ஆகின்றே
                  அழிசி நச்சாத்தனார், குறுந். 271: 3 – 5  

தலைவனுடன் கூடி மகிழ்ந்தது ஒரே ஒரு நாள்தான். அது மிகப்பல நாட்கள் என் தோள்களை வாட்டி, அழகைக் கவர்ந்து, கொடிய தன்மையுடைய நோயாக மாறியது.                    

பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே
                                                   நக்கீரனார், குறுந். 280 : 3 – 5    
பருத்த தோள்களை உடைய இளைய தலைவியின் சிறிய மெல்லிய மார்பை ஒரே ஒரு நாள் ஐம்புலனும் ஒருசேர இணைந்து கூடுவேனாகில், அது போதும். அதன்பிறகு அரைநாள் உயிர் வாழ்தலையும் விரும்பமாட்டேன்.
உல்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு
                             பாலை பாடிய பெருங்கடுங்கோ,குறுந். 283 : 1, 2   
முன்னோர் தேடி வைத்த செல்வத்தை அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப் பெறார். இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக் காட்டினும் இழிவானது.

இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே
                                                       கபிலர், குறுந். 288 : 3 – 5             
தலைவன் பழகுவதற்கு இனியவன் ஆவான், அதன் காரணமாக நமக்கு உறவானர்கள் ஏற்படுத்தும் இன்னாமையை விடத் துறக்க உலகமாகிய தேவருலகம் இனிமை உடையது ஆகுமா ?

காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியார் கொல்லோ அனை மதுகையர்கொல்
                                 கல்பொரு சிறுநுரையார், குறுந். 290 : 1, 2   
தோழி, காமநோயைத் தாங்கிக் கொள் என்று அறிவுரை கூறுகின்றவர், தாம் அக் காமத்தின் தன்மையை அறிந்திலர் போலும், அவர்கள் மனவலிமை உடையவர்கள் போலும்.

ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே
                                    தூங்கலோரியார், குறுந். 295 : 4 – 6                
தலைவ, அன்று ஒரு பசு மாட்டை மட்டும் வைத்துக்கொண்டு  சிறப்பில்லாத வாழ்க்கை மேற்கொண்டிருந்தாய், இன்று பெரு நலம் உடைய உன் தலவியால் உன் வாழ்க்கை விழாக் கோலம் உடையதாயிற்று என்பர் இவ்வூரார்.
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின்னுடை நட்பே
                           சிறைக்குடி ஆந்தையார், குறுந். 300 : 7, 8     
என் இனிய காதலியே,கடல்சூழ்ந்த இந்த உலகமே கிடைத்தாலும் உன்னுடைய நட்பை விடுவதற்குக்  எண்ண  மாட்டேன்
குப்பைக் கோழி தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
                 குப்பைக் கோழியார், குறுந். 305 : 6 – 8    
தலைவனைக் காணாது வருந்தும் நெஞ்சே, குப்பைக் கோழிகள் தாமே தனிமையில் நிகழ்த்தும் போர் விலக்குவாரின்றி, அதுவாக முடியுங் காலத்தில் முடியும். யான் உற்ற நோயும் களைவார் ஒருவருமின்றி வருத்துகிறதே.

யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே
                                           ……………….. குறுந். 313 : 4, 5                 
தலைவனோடு, யாம் உறவினால் பிணிக்கப்பட்டோம்.அந்நட்பை இனி யாராலும் கட்டவிழ்க்க முடியாது. இந்நட்பு தானே அமைந்ததாகும்.
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத் தோளே
மதுரை வேளாதத்தன், குறுந். 315 : 3,4  - மகிழ்ச்சி
தோழி, என் தலைவன் கதிரவனைப் போன்றவன். என் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சிப் பூவை போன்றவை.

தோள் அணைத் துஞ்சிக்
   கழிந்த நாள் இவண் வாழும் நாளே
                                              பதடிவைகலார், குறுந். 323 : 6, 7    
தலைவியின் இரண்டு தோள்களிலே துயின்று கழித்த நாட்களே இவ்வுலத்தில் வாழும் நாட்களாகும். ( ஏனைய நாட்களெல்லாம் என்ன பயனை உடையன.)

கவை மக நஞ்சு உண்டாஅங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே
                                                  கவைமகன், குறுந். 324 : 6, 7      

 தலைவ, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று நஞ்சுண்டால் தாய் எவ்வாறு அஞ்சுவாளோ அதுபோல நான் அஞ்சுகின்றேன்.
இருநீர்ச் சேர்ப்பன் நீப்பன் ஒரு நம்
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று
எவனோ தோழி நாம் இழப்பதுவே
                             இளம்பூதனார்,குறுந். 334:4-6    
கடற்கரைத் தலைவன் பிரிந்தால் நாம் இழக்கப் போவது நமக்கு உரிய ஒப்பற்ற ஒரே உயிர் மட்டும் தான், இழப்பதற்கு வேறு என்ன உள்ளது ?

கான நீளிடை தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே
      காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார், குறுந். 347 : 4 – 6   
நெஞ்சே, கடிய இக்காட்டின்கண், இத்தலைவி நம்மொடு பொருந்துகின்ற இன்பத்தைச் செய்வாள் எனின் பொருள் தேடச் செல்லும் நின்னுடைய துணிவு பெரிதும் நன்மையுடையதாகும்.
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தா எனக் கூறலின்
இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே
                                                     சாத்தன், குறுந். 349 : 5 – 7         
ஒருவரது துன்பத்தைக் கண்டு வருந்தி, அவர் இரந்து கேட்ட பொருளைக் கொடுத்துப் பின்பு அதைத் திரும்பத் தா என்று கேட்பதை விட, நம் இன்னுயிரை இழப்பது கொடுமையானது ஆகுமோ? ஆகாது.

அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால் ...
                                                 கபிலர், குறுந். 361 : 1, 2            
அன்பிற் சிறந்த நம் அன்னைக்குக் கைம்மாறாகக் கருதுமிடத்து உயர்ந்த உலகமாகிய சொர்க்கமும் சிறிதாகும்.

இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன் துணைப் பிரிந்தே
                                     செல்லூர்க் கொற்றனார், குறுந். 363 : 5, 6      
தலைவ, இனிய துணைவியைப் பிரிந்து, இன்னாத காட்டுவழியே பொருள் தேடிப்போதல் நன்றோ?




பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ
                                                       கபிலர், குறுந். 365: 1, 2             
தோழி, தலைவனோடு நான் கொண்ட காதல் ஊழ் வலியால் முடிக்கப்பட்டது. ஊழ் வழிப்பட்ட செயலை அளந்து அறிதற்கு நாம் யாரோ ?
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்அகம் சேரின் ஒரு மருங்கினமே
வில்லகவிரலினார்,குறுந். 370: 3 – 5   
தலைவனோடு இருந்தால் இரண்டு உடலை உடையேன். அவருடன் கூடித் துயிலும் போது, வில்லை இறுகப் பிடித்த விரல்கள் ஒன்று சேர்ந்து பற்றுதல் போல் அவனது நல்ல மார்பினைச் சேர்ந்தால் ஓர் உடலை உடையேன்.

அறிவு காழ்க் கொள்ளும் அளவை செறிதொடி
எம் இல் வருகுவை நீ எனப்
பொம்மல் ஓதி நீவியோனே
.............................., குறுந். 379:4-6   

அன்புடையவளே, நீ அறிவு முதிர்கின்ற பருவத்தில் எம்முடைய வீட்டுக்கு இல்லறம் நடத்த வருவாய் என்று கூறி, என் அடர்ந்த கூந்தலைக் தடவிக்கூறிய தலைவன் இன்று யாண்டு உளன் ?

இன்னா செயினும் இனிது தலை அளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் கலைஞரோ இலளே
                                           அம்மூவனார், குறுந். 397 : 6 – 8  
தலைவ, நீ துன்பம் செய்தாலும் இன்பம் தந்தாலும் என் தோழி உனக்குரியவள், அவள் துன்பத்தை நீக்குவோர் உன்னையன்றி வேறுயார் உளர் ?
              -------------------    முற்றும்  -------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக