வெள்ளி, 5 ஜூன், 2015

மருதக்கலி - மருதனிளநாகனார்

மருதக்கலி - மருதனிளநாகனார்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு அளி இன்மை
கண்டும் நின்மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
                                   மருதன் இளநாகனார், கலித். 74: 8, 9
தலைவனே ! நஞ்சு, உண்டோருடைய உயிரைப் பறிக்கும் என்று அறிந்திருந்தும் அதனை உண்டாற் போல, நீ இரக்கமற்றவன்; கருணையின்றி வருத்தும் பண்பினன் என்று தெரிந்திருந்தும் நின் பொய்ம்மொழியை உண்மையென நம்பிப் பரத்தையரும் பித்தேறினரே.
விருந்து எதிர் கொள்ளவும் பொய்ச் சூள் அஞ்சவும்
அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும்  என் புலவி தாங்காது
                                  மருதன் இளநாகனார், கலித். 75: 27 – 29
தோழீ ! தலைவன் புறத்தொழுக்கம் கொண்டானாயினும் விருந்தினரை எதிர்கொள்ளவும் பொய்யுரைக்கு அஞ்சவும் பெறுதற்கரிய புதல்வனைத் தழுவுதலைக் காணவும் என் சினமெல்லாம் அழிந்து ஒழியும் ; என் நெஞ்சு புலவியைத் தாங்காது அமையும்.
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது ...
                                 மருதன் இளநாகனார், கலித். 80: 14, 15
ஐயனே ! யாவரும் விரும்புகின்ற அழகினை உடையாய், அத்தா, அத்தா என்று கூறும் நினது இனிய மழலை மொழிகளைக் கேட்பது மிகவும் இனிது.
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர ...
                                    மருதன் இளநாகனார், கலித். 99: 4 – 6
அரசனே ! குழந்தையைப் பார்த்து பார்த்து அதற்கு முலை சுரந்து பால் ஊட்டுமாறு போல மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து உலகைப் பாதுகாத்து வருகிறது இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது  வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறுவின்றி வியன் ஞாலத்து
பாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்
                                மருதன் இளநாகனார், கலித். 100: 5, 6
வேந்தே ! குற்றமற்ற மேன்மையான  நின்னுடைய  ஒழுக்கத்தால் பரந்த இவ்வுலகத்தைப் பேணிப் பாதுகாத்து வருகின்றாய்; உலகில் உள்ளோர் வணங்கித் தொழுது போற்றும் வண்ணம் ஒலிக்கின்ற முரசினை உடையவன்.
                                                        அடுத்து – முல்லைக்கலி...............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக