சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 9

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 9     
              பட்டினப் பாலை  - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
                                                      5 – 8
மழை பெய்யாமல் வறண்டு போனாலும்   மேற்கே குடகு மலையில் பிறந்து கிழக்கே கடலில் கலக்கும் வற்றாத  காவிரி  நீர்  கழனிகளில் பாய்ந்து இடையறாது விளைச்சல் பெருகிப்  பொன் கொழிக்கும்.

தீது நீங்கக் கடல் ஆடியும்
மாசு போகப் புனல் படிந்தும்
                                                             99, 100
பாவம் நீங்கக் கடலிலே குளித்துப் பின் அழுக்கு நீங்க நன்னீரிலே நீராடல்..
பல் கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடி
                                                                 169 - 171
பல்லாற்றானும் கற்றும் கேட்டும் முன்னோர் நெறியில் ஒழுகும் சிறந்த ஆசிரியர்கள் சொற்போர் நிகழ்த்தற்குப் பின்வாங்க மாட்டோம் எனக் காட்டுவதற்கு அடையாளமாக  உயர்த்திக் கட்டிய கொடி.
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்206, 207
நீண்ட நுகத்தடியிலே உள்ள நடு ஆணி போல நடுவுநிலை நிற்கும் நன்மனத்தினர்.
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
                                                                . 209 -  212
வணிகர்கள், தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒன்றாக எண்ணி வாங்குவதை  அதிகமாக வாங்கிக் கொள்ளாமலும்  கொடுப்பதைக் குறைத்துக் கொடுக்காமலும்  பலபண்டங்களையும் நேர்மையாக விலை கூறி விற்பர்.
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் ...
                                                                                               216 -  218
குற்றமற்ற நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்த பல் வேறு மொழிகள் பேசும் பல நாட்டு மக்கள்  யாவரும் கலந்து மகிழ்வோடு தங்கிருக்கும் பழுதற்ற சிறப்பினையுடைய புகார்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே
                                                                     218 -  220
நெஞ்சே ! அரிய பெரிய சிறப்பு வாய்ந்த காவிரிப் பூம்பட்டினத்தைப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியை விட்டுப்  பிரிந்து பொருள் தேடச் செல்லேன், வாழிய என் நெஞ்சே. - தலைவன்

                                                                 முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக