தொல்காப்பியம் -எண்வகை மெய்ப்பாடு
மெய்ப்பாடு –
மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு
நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல், ... பேராசிரியர்,
சுவை – காணப்படு பொருளாற் காண்போர் அகத்தின்கண்
உளதாகும் மனநிலை சுவையெனப்படும் என்பதாம் – இளம்பூரணர்.
நகை
என்பது இகழ்ச்சியிற் பிறப்பது, அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. இளிவரல்
இழிப்பிற் பிறப்பது. மருட்கை வியப்பிற் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற்
பிறப்பது. பெருமிதம் வீரத்திற் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கனவற்றாற் பிறப்பது.
உவகை சிங்காரத்திற் பிறப்பது. – இளம்பூரணர்
நகையே அழுகை
இளிவரல் மருட்கை
அச்சம்
பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால்
எட்டாம் மெய்ப்பா டென்ப. _தொல்.மெய்.
3)
1.
நகையென்பது
சிரிப்பு; அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச்சிரித்தலுமென
மூன்றென்ப.
2.
அழுகையென்பது அவலம்; அந்து இருவகைப்படும், தானே
அவலித்தலும், பிறரவலங்கண்டு அவலித்தலுமென; இவற்றௌள் ஒன்று கருணையெனவும் ஒன்று
அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலுமுடைய என்பது.
3.
இளிவரலென்பது
இழிபு.
4.
மருட்கையென்பது
வியப்பு; அற்புதமெனினும் அமையும்.
5.
அச்சமென்பது
பயம்.
6.
பெருமிதமென்பது
வீரம்.
7.
வெகுளியென்பது
உருத்திரம்.
8.
உவகையென்பது
காம முதலிய மகிழ்ச்சி இவை அவ்வெட்டுமாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும்
வழங்கினும் அமையும். பேராசிரியர்,
நகைச்சுவைக்குப்
பொருளாவன ஆரியர் கூறுந் தமிழுங்,குருடரும் முடவருஞ் செல்லுஞ் செலவும், பித்தருன்ஹ்
களியருஞ் சுற்றத்தாரை இகழ்ந்தாருங் குழவி கூறும் மழலையும் போல்வன. –பேராசிரியர்,
நகை – இளம்பூரணர்
எள்ளல் இளமை
பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட
நகைநான் கென்ப
நகையா கின்றே தோழி ...... அகம். 59. எள்ளல் பற்றி நகை தோன்றியது.
மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல்; பேதைமையென்பது
கேட்ட்தனை உய்த்துண்ராது மெய்யாகக் கோடல்.
பேராசிரியர் – எள்ளலென்பது தான் பிறரை எள்ளி நகுதலும்
பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நகுதலுமென இரண்டாம்.
நகை நீ கேளாய் தோழி – அகம். 248
தான் செய்த
தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின்.
( இளமை – அறிவு முதிராப் பிள்ளமை, பேதைமை – அறிவின்மை – Stupidity , மடம் – ஐயுறாது
நம்புமியல்பு- Simplicity or innocence )
அழுகை – இளம்பூரணர்
இழிவே இழவே
அசைவே வறுமையென
விளிவில்
கொள்கை அழுகை நான்கே
இழிவு – பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது.
இழவாவது – உயிரானும் பொருளானும் இழத்தல்.
அசைவென்பது – தளர்ச்சி, அது தன்னிலையிற்றாழ்தல்.
வறுமை என்பது – நல்குரவு
ஐயோ எனின்யான்
........ புறம் 255
இது இழிவுபற்றி வந்த அழுகை.
அழுகை – பேராசிரியர்
இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல்.
இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும், இன்பம்
பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல்.
அசைவென்பது பண்டை நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்துதல்.
வறுமையென்பது – போகந்துய்க்கப்பெறாத பற்றுள்ளம்.
இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும்
அவலமாமென்பது.
இல்லி தூர்ந்த பொல்லா ..... புறம். 164
முலைப்பசை காணாது அழுகின்றது குழவியென்பது தன்கட்டோன்றிய
வறுமைபற்றி அவலம் பிறந்தது.
( இளிவு = இழுதகவு; இழவு = இழத்தல்; அசைவு =தள்ளாத் தளர்வு;
வறுமை = மிடி, இல்லாமை; )
இளிவரல் - – இளம்பூரணர்
மூப்பே பிணியே
வருத்த மென்மையோடு
யாப்புற வந்த
இளிவரல் நான்கே
பிணியென்பது – பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு
தூயதன்றென இழித்தலுமாம்.
வருத்தமென்பது – தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய
வருத்தத்தானும் இழிப்புப் பிறக்கும். இச்சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ
ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும் - பாரதியார்.
தண்ணந் துறைவற் .................
............................இன்னுயிர் இழப்பே – குறுந்.
349
மென்மையென்பது – நல்குரவு
மாக்கேழ் மடநல்லாய் ... நாலடி – 41
பிணி – இது உடம்பினை அருவருத்துக் கூறுதல்.
இளிவரல் - –பேராசிரியர்
தொடித் தலை விழுத்தண் .... புறம்.243
இது தன்கண் தோன்றிய மூப்புப்பொருளாக இளிவரல் பிறந்தது.
( இளிவரல் மானம் குன்ற வருவது.) பிணி = தீரா நோய்.
மருட்கை - வியப்பு – இளம்பூரணர்
புதுமை பெருமை
சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா
மருட்கை நான்கே
புதுமை – யாதொன்றானும்
எவ்விடத்தினும் எக்காலத்தினுந் தோன்றாத்தோர் பொருள் தோன்றியவழி வியத்தல்.
பெருமை – பண்டுகண்ட
பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும்.
சிறுமை – நுண்ணியன
கண்டு வியத்தல். அது கடுன்கட் பல துளை போல்வன.
ஆக்கம் – ஒன்றன் பரிணாமங்கண்டு
வியத்தல் அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மர முதலாயின ஆகியவழி வியத்தலும்-
இளயான் வீரங்கண்டு வியத்தலுமாம்.
பொலம்பூ வேங்கை ….
………………… அஃதறிந்தருள் நீயென ( சிலப். பதிகம் ) என்றது புதுமை.
பேராசிரியர் – புதிதாக்க் கண்டனவுங், கழியப் பெரியனவாயினவும்,
இறப்பச் சிறியனவும் ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும்பற்றி வியப்புத்
தோன்றும்.
நிலத்தினும் பெரிதே ……………….. குறுந். 3
-
பெருமை வியப்பு – கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழிமுறை
முறையாற் பெருகற்பாலதாகிய நட்பு மற்றவனைக்கண்ணுற்ற ஞான்றே நிலத்தினகலம் போலவும்விசும்பினோக்கம்
போலவுங் கடலினாழம்போலவும் ஒருகாலே பெருகிற்றென்றமையின்; இது தன்கட்டோன்றிய பெருமை
வியப்பு. இது தலைமகன் கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறகட்டோன்றிய பெருமை
வியப்பாமென்பது கொள்க.
அச்சம்- நான்குவகையாலும்
அச்சம் பிறக்கும் - அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை (அரசன்) இளம்பூரணர் –
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
மையல் வேழ
மடங்கலின்......
.......................................மஞ்ஞையின் நடுங்கி
குறிஞ்சி. 165.
தன்கண் தோன்றிய அச்சம்
பேராசிரியர் –
யானை தாக்கினு
..........................
......................................... மறம்பூண்
வாழ்க்கை பெரும்பாண் 134-136
பிறன்கண் தோன்றிய
அச்சம்.
பெருமிதம் –
இளம்பூரணர்
கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே
இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கு மகிழ்ச்சி
பெருமிதம் என்று கொள்க.
பெருமிதமாவது
தன்னைப் பெரியன் எனப் பிறர் மதிக்கும் வண்ணம் கல்வி, தறுகண், இசைமை, வண்மை
என்பவற்றின் பேரெல்லைக்கண் நிற்றலாகும்.
பெருமிதமாவது – தன்னைப் பெரியனாக நினைத்தல்.
பேராசிரியர் –
இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்;
என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதமெனப்படும்
என்றற்கென்பது . கல்வியென்பது தவ முதலாகிய விச்சை, தறுகணென்பது அஞ்சு தக்கன கண்ட
இடத்து அஞ்சாமை. இசைமை (புகழ்மை)யென்பது
இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவன செய்யாமை. கொடையென்பது உயிரும்
உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல்.
கழியாக் காதல ராயொனுஞ் ....................
...........................................இன்பம்
வெஃகார் அகம்- 112
என்பது புகழ்.
பல்லிருங் கூந்தன் ...........
.............. ................ குழைகவென் தாரே – புறம் 73
என்பது காமம்பற்றிய பெருமிதம்.
வெகுளி – இளம்பூரணர்
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே
உறுப்பறையாவது – அங்கமாயினவற்றை அறுத்தல்
குடிகோளாவது – கீழ்வாழ்வாரை நலிதல்
அலையென்பது – வைதலும் புடைத்தலும்
கொலையென்பது – கொல்லுதற் கொருப்படுதல்
இவை நான்கும் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க.
பேராசிரியர் – உறுப்பறையென்பது, கை குறைத்தலுங் கண் குறைத்தலு
முதலாயின; குடிகோளென்பது, தாரமுஞ் சுற்றமுங்
குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்; அலையென்பது,
கோல்கொண்டலைத்தன் முதலாயின; கொலையென்பது அறிவும்
புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்
உறுதுப்பு அஞ்சாது ……….. புறம் 72
என்பது கொலை பொருளாக வெகுளிச்சுவை பிறந்த்து.
நின்மகன் படையழிந்து …………. புறம்278
தன்மகன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தானென்று சின்ங்கொண்டாளாகலின்.
உவகை – இளம்பூரணர்
( கையாறு என்பது இன்பமின்மையால் வருந் துன்பம் எனவும்
இடுக்கண் என்பது துன்பமுறுதலான் வருந் துன்பம்.
செல்வம் புலனே புணர்வு விளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே
செல்வ
நுகர்ச்சியானும், கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும்
மகளிரொடு புணர்தலானுஞ் சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகை
பிறக்கும் என்றவாறு.
வையை வருபுனல்
...........
நெடுமாடக் கூடற் கியல்பு ...... பரிபாடல் 11.
பேராசிரியர் – செல்வமெம்பது, நுகர்ச்சி; புலனென்பது,
கல்விப்பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது காமப்புணர்ச்சி முதலாயின ;
விளையாட்டென்பது யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதல் முதலாயின. இவை
நான்கும் பொருளாக உவகைச் சுவை தோன்றும்.
உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.
அல்லல் நீத்த வுவகை யென்றதனாற் பிறர் துன்பங் கண்டு வரும்
உவகையும் உவகையெனப்படா தென்பது.
தொடிக் கண்
வடுக்கொள .....
..................................... தீவிய மொழிந்தே
. அகம். 142
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக