.. CONTD… பதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -2
நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே
காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப்.
57 : 13 – 15
ஒளிபொருந்திய நெற்றியை உடைய தன் காதல் மகளிர் ஊடலாற்
சினந்து பார்த்த பார்வைக்கு அஞ்சுவதைக் காட்டிலும் பரிசில் வேண்டுவோரின்
துன்பத்தைக் கண்டு அஞ்சுபவனும் அவர்களின் குடியைப் பாதுகாப்பவனுமாகிய சேரலாதனக்
கண்டு வருவோம்.
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம் அல்லேம் ...
காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப். 58 :
5 – 7
இன்றைக்கு இனிதாக உண்டோம் என்றால் நாளைக்கு அரைத்த மண்ணால் கட்டப்பட்ட
கோட்டையை உடைய மதிலை வெல்லாமல் உணவு உண்ணமாட்டோம்.
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம்
காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப். 59
: 8 – 10
உலகத்தைத் தாங்கிய மேம்பட்ட கல்வியை உடைய வில் படையினரின் கவசம்
போன்ற சேரலாதனே! ஏனைய அரசரினும் வேறாகிய தனிச் சிறப்பும் பெருமையும்
பொருந்தி அரசர்க்கெல்லாம் அரசனாக இருப்பவனே, நின்னை அடைந்தார்க்குப்
பாதுகாவலாக உள்ளவனே.
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் …
பதிற்றுப்.ஆறாம் பத்து.
பதி. 9 - 11
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், குழந்தைகளைப் பாதுகாப்பாரைப் போலத் தன் குடிகளைப் பாதுகாத்து, அறத்தையே ஆராயும் மனத்தை உடையவன்.
ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல்லிசை…
கபிலர், பதிற்றுப். 61 : 12 – 14
செல்வக்கடுங்கோ வாழியாதன், தான் கொடையாக வழங்கிய பொருட்கள் பற்றிக் கவலைகொண்டு, கொடுத்துவிட்டேனே என வருந்த மாட்டான் ; பரிசில் வேண்டுவோருக்குக்
கொடுக்குந்தோறும் நான் கொடுப்பவனாக இருக்கிறேன் என எண்ணி மகிழவும்
மாட்டான்; கொடை வழங்கும்பொழுதெல்லாம்
பெருங் கொடையாளன் என உலகத்தார் பலரும் சொல்லுவதாக நின்னுடைய நல்ல புகழ்.
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே
கபிலர், பதிற்றுப். 63 : 6, 7
நிலவுலகம் தன் கூறுபாடு எல்லாம் நீங்கும் ஊழிக் காலம் என்றாலும்
நீ (செல்வக்கடுங்கோ
வாழியாதன் ) சொன்ன சொல் பொய்த்தலை அறியாய்.
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேண் நாறு நறு நுதல் சேயிழை கணவ
கபிலர், பதிற்றுப். 65 : 9, 10
விரும்பத்தக்க அருந்ததியையும் வென்ற கற்பினையும் நெடுந்
தூரத்தினும் மணம் கமழ்கின்ற நல்ல நெற்றியையும் உடைய சிவந்த அணிகலன்களை அணிந்தவளின்
கணவனே. (செல்வக்கடுங்கோ வாழியாதன் )
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர் மன்ற இம் மண் கெழு ஞாலம்
கபிலர், பதிற்றுப். 69 : 10 – 12
பகைவருடைய கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச்செய்த
வேந்தே, (செல்வக்கடுங்கோ வாழியாதன் ) நின் முன்னோர்
நின்னைப்போல் மாறுதல் இல்லாத கொள்கை உடையவர் ஆதலால் நடுக்கமில்லாமல் இம்மண்ணுலகை ஆண்டனர்.
-
நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ் சொல் கேளாப் புரை தீர் ஒண்மை
கபிலர், பதிற்றுப். 70 : 12, 13
விளையாட்டாகக் கூடப் பொய் கூறுதலை அறியாமைக்குக் காரணமான
வாய்மையையும் பகைவரது புறங்கூறும் சொல்லைக் கேளாத குற்றமற்ற சிறந்த அறிவையும்
உடையவனே. (செல்வக்கடுங்கோ வாழியாதன் )
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
கபிலர், பதிற்றுப். 70 : 20 – 22
பெரியோரிடத்தே வணங்கிய மென்மை; பகைவர்க்கு வணங்காத
ஆண்மை உடைய இளந்துணைவராகிய ஆண்பிள்ளைகளைப் பெற்றமையால் நின் (செல்வக்கடுங்கோ
வாழியாதன் ) முன்னோர்களுக்குரிய கடனாற்றி,
இல்லறத்தார்க்குரிய கடன்களைச் செய்து முடித்த வெல்லும் போரைச் செய்யும் தலைவனே.
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி
அரிசில் கிழார், பதிற்றுப். 71 : 23, 24
தன்னால் பற்றப்பட்டாரது உயிரைக் கொள்ளாமல் தனக்கு இட்ட
பலியை மட்டும் ஏற்றுக்கொண்டு நீங்கும் பேயைப் போலத் நீ, ( தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை
) திறையைப் பெற்றுக்கொண்டு மீண்டு
செல்கிறாய். ஊழ் வலியால் நினக்கு என வரையறுக்கப்பட்ட நின் வாழ் நாட்கள் வாழ்க.
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் ...
அரிசில்கிழார், பதிற்றுப். 72 : 5, 6
மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம்
நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில்கிழார், பதிற்றுப். 72 : 9 – 11
எல்லா உயிர்களும் அழியும் ஊழிக் காலத்தின் இறுதி வருகின்றபோது,
நிலவுலகின் சுமை நீங்க, நீரானது பெரிய அலைகளுடன் எங்கும் பரந்து
எழும். இவ்வாறு உயிர்களைக் கொல்லுதற்குச் சினந்து எழுகின்ற ஊழி
வெள்ளம் எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாதபடி எல்லாத் திசைகளிலும்
இருளொடு சேர்ந்து பரவும்.
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே
அரிசில்கிழார், பதிற்றுப். 73 : 1 – 3
அறிவுடையோர் எண்ணினாலும் அறிவில்லாதோர் எண்ணினாலும்
பிறர்க்கு நீ, (தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை )
உவமையாகப் பொருந்தினால் அல்லாமல் நினக்குப் பிறரை உவமையாகக் கூறுதற்கு இயலாத ஒப்பற்ற
பெருமை உடைய அரசே
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் ...
அரிசில்கிழார்,
பதிற்றுப். 73 : 16 – 18
நின்னுடைய (தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ) செல்வமும்
வீரமும் கொடையும் மக்களின் அளவைக் கடந்தவை
என்பதை நான் பலநாள் சென்று சொன்னாலும் அதைத்
தெரிந்து கொள்ளாதவர் நின் பகைவர்.
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை ...
அரிசில்கிழார், பதிற்றுப். 74 : 17 – 21
நின். (தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ) மனைவியின்
கருவில் பத்துத் திங்களும் நிரம்பிப் பேரறிவை விரும்பி அன்பும் நாணும் ஒப்புரவும்
கண்ணோட்டமும் வாய்மையும் நடுவுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் , குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின்
துறைகளை முற்றக் கற்ற சிறப்புகளையும் உடைய
புதல்வனைப் பெற்றனை.
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு ...
அரிசில்கிழார், பதிற்றுப். 74 : 25, 26
ஈகையும் மாண்பும் செல்வமும் பிள்ளைப்பேறும் வழிபடுதெய்வமும் மற்ற எல்லாப் பொருளும் தவவலிமை உடையோர்க்கு
உரியன.
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
அரிசில் கிழார், பதிற்றுப். 76 : 7, 8
பரிசில் வேண்டியோர் மகிழும்படி கொடுத்து, இனிவந்து பரிசில்
கேட்போருக்குக் கொடை வழங்குதலிலிருந்து மாறாது குதிரைகளைக் கொடுக்கும் வள்ளல் (தகடூரெறிந்த
பெருஞ்சேரலிரும்பொறை ) இருக்கை.
உயிர் போற்றலையே செருவத்தானே
கொடை போற்றலையே இரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
அரிசில் கிழார்,
பதிற்றுப். 79 : 1 – 3
நீ, போரில் உயிரை
ஒரு பொருட்டாக எண்ணமாட்டாய், பரிசில் கேட்போர் சூழ்ந்து நிற்க அவர்களுக்குப்
பரிசுகளை வழங்கும்போது அப்பொருள்களைப் பெரிதாக எண்ணமாட்டாய், பெரியோர்களைப் பாதுகாத்துச் சிறியோர்களுக்கும்
அருள் செய்வாய். (தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை )
பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானை …
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 82 : 12, 13
நின்னைப் (குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை) புகழ்ந்து பாடுவோர்
கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வத்தையும் போர்களில் பகைவர்கள் கொல்லக் கொல்லக் குறையாத
படையையும் கொண்டோனே.
…சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை
நிலம் தரு திருவின் நெடியோய் …
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 82: 14 – 16
கொடையையும் நேர்மையையும் சால்பையும் வீரத்தையும் சான்றோர் விரும்பிப் புகழ்தலால்
கெடாத நல்ல புகழையும் பகைவரை வென்று பெற்ற செல்வத்தையும் உடைய நெடியோய். (குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை)
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 84 : 11 – 13
நீண்ட மேகத்தின் முழக்கத்தைப் போல இளைய ஆண் யானை வலிமை பெருகித்
தன் காலால் அகப்படுத்தப்பட்ட முளைத்த மூங்கிலினது கிளையைப் போல உன்(குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை) பகைவர் அழிந்து
போவார்களே அன்றித் தப்பித்துக் கொள்ள இயலாது.
நல் இசை நிலைஇய நனந் தலை உலகத்து
இல்லோர் புன் கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 86 : 5 – 7
அகன்ற உலகில் நல்ல புகழை நிலைநாட்டும் பொருட்டு இல்லாதார் துன்பம்
நீங்கும்படி வழங்கும் வள்ளல் தன்மை மிக்க அன்பு நிறைந்த மனம் உடையவன் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை.
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்
பெருங்குன்றூர் கிழார்,
பதிற்றுப். 88: 37, 38
வேந்தே ! ( குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை) நிலத்திற்கும் வானிற்கும்
இடையே உள்ள இடம் ஒளியடையும்படி உயர்ந்து செல்லும் சூரியனைப் போலப் பல காலம்
வாழ்வாயாக.
உயர் நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே …
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 89: 11 – 13
உயர்ந்த உலகத்தில் உள்ளோர் நின்னைப்(குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை) புகழ,அறநெறி தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி நோயின்றி வாழ்வாயாக.
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்டு ஓரனைய ஆக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆக …
பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப். 90: 51 – 54
ஒரு நாளே திங்களாக, திங்கள்கள் ஆண்டாக, ஆண்டுகள் ஊழியாக, ஊழிகள் வெள்ளம் என்னும் பேரெண்ணின் எல்லையாக உடையனவாதல் போன்று நின் (குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை)வாழ் நாட்கள் பெருகி வளர்வதாகுக.
THE
END
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக