வெள்ளி, 5 ஜூன், 2015

முல்லைக்கலி – சோழன் நல்லுருத்திரன்

முல்லைக்கலி – சோழன் நல்லுருத்திரன்
மடமொழி ஆயத்தவருள் இவள் யார்- உடம்போடு
என் உயிர் புக்கவள் இன்று
                           சோழன் நல்லுருத்திரன், கலித். 102: 7, 8
பாங்கனே ! மடமொழி பேசும் ஆயர் மகளிருள் இன்று தன் உடலோடும் என் உயிர்க்குள் கலந்தவளாகிய இவள் யார் ?
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்
                              சோழன் நல்லுருத்திரன், கலித். 103: 63, 64
கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை இப்பிறப்பில் மட்டுமன்று மறுபிறப்பிலும் தழுவமாட்டாள் ஆயமகள்.
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே
                       சோழன் நல்லுருத்திரன், கலித். 106: 43 – 45
தோழீ ! இவள் கணவன் கொல் ஏறு தழுவி இவளைக் கொண்டான் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே  யான் மோர் விற்று வருகின்ற இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோ ?
ஆயர் மகன் ஆயின் ஆய மகள் நீ ஆயின்
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்
நின்னை நோதக்கதோ இல்லைமன் ...
                        சோழன் நல்லுருத்திரன், கலித். 107: 19 – 21
தலைவியே ! அவன் ஆயர் மகன்; நீ ஆயர் மகள் ; நீ அவனை விரும்புகின்றாய் ; அவனும் நின்னை விரும்புகின்றான் இதில் அன்னை வருந்துவதற்கு ஒன்றும் இல்லையே.
கொலை உண்கண் கூர் எயிற்று கொய்தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி ...
                       சோழன் நல்லுருத்திரன், கலித். 108: 53 – 55
கண்டாரை ஈர்க்கும் மையுண்ட கண்ணையும் கூரிய எயிற்றினையும் தளிர் போன்ற மேனியழகையும் உடைய மாயோளே ! நின்னைக் காட்டிலும் சிறந்த அழகியர் மண்ணுலகத்து இல்லை என்பதை நீயே அறிவாய்.
இவள்தான் வருந்த நோய்செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள்
                         சோழன் நல்லுருத்திரன், கலித். 109: 53 – 55
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு
                          சோழன் நல்லுருத்திரன், கலித். 110: 10, 11
மெல்லியல்புகள் மிக்க ஆயமகளே ! மத்தைச் சுற்றிய கயிறு போல் நின் அழகைச் சூழ்ந்து திரிகின்றது என் நெஞ்சு.
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பன்றே
                       சோழன் நல்லுருத்திரன், கலித். 114: 19  – 21
திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய  பரந்த உலகத்தைப் பெற்றாலும் தூய நெறியுடைய   ஆயமகளிர்க்கு இருமணம் என்பது  குடிப்பிறப்பிற்கு  இயல்புடையதன்று.

                                          அடுத்து – நெய்தற்கலி……………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக