வியாழன், 18 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -42 - 50

அகநானூறு – அரிய செய்தி -42

                                                   பொன்சுமந்த கலம்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
        எருக்காட்டூர்த்  தாயங்கண்ணனார், அகநா.149 :  8-12
சுள்ளி என்னும் பெயருடைய பேரியாறு சேரர்க்குரியது- யவனர் மரக்கலம் - பொன்னை விலையாகக் கொடுத்து மிளகை ஏற்றிச்செல்லும் – முசிறிப் பட்டினத்தை  பாண்டியன் வளைத்து- போரில் வென்று அங்கிருந்த பொற்பாவையைக் கவர்ந்து சென்றான். முசிறி – புறம்.343, அகம் 57.
அகநானூறு – அரிய செய்தி -43

                                                             -நெடியோன்-முருகன்
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
                 எருக்காட்டூர்த்  தாயங்கண்ணனார், அகநா.149 :  16
நெடியோன்: நெடியன் – முருகந்திருமுருகா.211,288 – நச்சர் முருகனை நெடியவன்
என்பார்.
அகநானூறு – அரிய செய்தி -44
                                                           காட்டுத்தீ
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண் உறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கு எழு கூரெரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை
நல்லடிக்கு அமைந்த அல்ல......
        சேரமான் இளங்குட்டுவன்,அகநா.153:8-12
சுடும் கதிரவன் வெம்மை – வீசும் பெருங்காற்று – மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்கும் – சிதறி வீழும் தீப் பொறி – பெரு நெருப்பாகும்  - தலைவி நடந்து செல்ல ஆற்றுவாளோ.


அகநானூறு – அரிய செய்தி -45
பகன்றை
....................................... கதிர்
முதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ
காஞ்சியில் அகத்து ......
                  ஆவூர் மூலங்கிழார், அகநா. 156 : 4-6
 நெற்கதிரை  முதிய பசு தின்றது; காவலர் பாகற் கொடியறுத்து அத்துடன் பகன்றைக் கொடியையும் சேர்த்து அப்பசுவைக் காஞ்சி மரத்தில் கட்டி வைத்தனர்.
பகன்றை பெரிய இலை- வெண்ணிறப் பூ – பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ குறுந்.330--. – குறிஞ்சிப்பாட்டு -88, சிவதை என்று குறிப்பிடும்.

அகநானூறு – அரிய செய்தி -46
                                                     ஆமை முட்டை இடல்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகுவாய்க்
 கணவன் ஓம்பும் கானலம்.........
                                              குமுழிஞாழலார் நப்பசலையார், 160 ; 4-8
நிறைந்த சூல் கொண்ட யாமை,அடும்புக் கொடியினை அழியுமாறு இழுத்து வளைந்த உப்பங்கழியிடத்து வெண்மையான மணல் மேட்டின் பக்கத்தே அதனைச் சேர்த்து; யானைக் கொம்பினாற் செய்த வட்டுப் போன்ற வடிவுடைய புலால் மணக்கும் முட்டையை ஈன்று, பிறவுயிர்கள் அறியாவண்ணம் அம்மணலுள் மறைத்து வைத்தது; பிளந்த வாயினையுடைய ஆண் யாமை, அம்முட்டையினின்றும் குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்பட்டு வரும் அளவு, அதனைக் காத்துக் கிடத்தற்கு இடமான கடற்கரைச் சோலை.
கணவன் -  ஆண் யாமை –அஃறிணை ஆண்பாற் பொருளிலும் வழங்கும் –காண்க, நற்.103, குறுந்.151.
  அகநானூறு – அரிய செய்தி -47
தீக்கடை கோல்
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்
கடல்விளை அமிழ்தின் கணம்சால் உமணர்
சுனைகொள் தீம்நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
                                               தொண்டியாமூர்ச் சாத்தனார், அகநா.169: 3-7
பாலை நிலத்தே – புலி கொன்று உண்டு கைவிட்டுப்போன பெரிய யானை ஊனை- ஆறலை கள்வர் தம் கோலில் கோத்து கொண்டு செல்வர்.உப்பினைக் கொண்டு செல்லும் உமணர் கூட்டம் தீக்கடை கோலால்  உண்டாக்கிய சிறு தீயில் வாட்டி  சுனை நீர் உலையில்போட்டு ஊன்சோறு ஆக்குவர்.

?

அகநானூறு – அரிய செய்தி -48
                                       யானை – உயிர்நிலையில்......
இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண்கோடு கொண்டு..
                       மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், அகநா. 172 : 6-9
வலிய கை – வேட்டுவன் – வெண்கடம்ப மரத்தில் சாய்ந்து – அம்பு ஆய்ந்து எடுத்து –யானையின்  உயிர்நிலையில் எய்தி கொல்வான் – பார். குறுந்.272.

அகநானூறு – அரிய செய்தி -49

                                                    மூங்கில்முத்து
............................நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழங்குழித் தாஅம்
                                     முள்ளிப்பூதியார், அகநா.173 :13-15
காட்டில் வெப்பம் நீரை உறிஞ்சியதால் வற்றிய அழகிய பெரிய நீண்ட மூங்கிலின் கணுக்கள் வெடிக்க, கழங்கினைப் போன்ற உருவினைக் கொண்ட கழுவப்படாத முத்துக்கள் வழிச் செல்வார் கழங்காடிய பழைய குழிகளிலே வந்து வீழும். கழங்கு = கழற்சிக் காய்.



அகநானூறு – அரிய செய்தி -50

மழை
................................................ முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் .....................
   மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார், அகநா. 174 : 5-8
நிரம்பிய கால்களில் படர்ந்திருக்கும் முல்லையின் முதிய கொடியானது தளிர்க்குமாறு, ஞாயிறு தோன்றும் கீழ்த்திசை வானத்தில் எழுந்த கடுங்குரலையுடைய மேகங்கள் மழையைப் பொழிந்து முழங்கும்பொழுதெல்லாம் நம் தலைவி .....
காலை வானம் – ஞாயிறு தோன்றும் கீழ்த்திசை வானம்.
கீழ்த்திசையில் மேகம்  திரண்டால் கடும் மழை பொழியுமா? ஆய்க.
பாறு=பருந்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக