சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 2

           பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 2     
   பொருநர் ஆற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை
                                                                                 21, 22
வழிச் செல்வோரைத் துன்புறுத்திப் பொருள் பறிக்கும் கொடுமையான ஆறலை கள்வர் கூடத் தம் கைகளில் இருக்கும் படைகருவிகளைப் போட்டுவிட்டுச் செயலற்று நிற்கும்படியாகச் செய்யும் இயல்புடையது இனிமை நிறைந்த பாலை யாழ்.

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம்
                                                                                          53 – 55
பெருமைமிக்க செல்வத்தினையும் பெரும் பெயரையும் பெரு முயற்சியினையும் வெற்றி முரசு முழங்கும் படையினையும் கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள் தம்முள் பகைமை நீங்கி ஒருங்கே அரசு வீற்றிருக்கும் தோற்றம் காண்பதற்கு இனிதாம்.

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான
                                                                         . 91, 92
தவம் செய்வோர்  தவம்செய்த தம் உடம்புடனே அத்தவத்தின் பயனைப் பெற்றாற் போல.
தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென்
                                                                         127 – 129
கரிகாலன், தன் தகுதி அறிந்து தரத்தர,  யானும் என் தகுதியின் அளவு அறிந்து விரும்பியவற்றையெல்லாம் வாரிக்கொண்டு, இனி எக்காலமும் எனக்கு வறுமை இல்லையாகும்படி வந்தேனாக.

அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்
அன்னோன் வாழி வென் வேற் குருசில்
                                                                                                      230, 231
 அறத்தொடு பொருந்திய வழிகளைஅறிந்துகொள்வதற்குக் காரணமான செங்கோல் உடைய  வெல்லும் வேல் படைக்குத் தலைவனாகிய கரிகால் பெருவளத்தான் இனிது வாழ்வானாக.                                                                                        
                                  

                                                  முற்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக