செவ்வாய், 23 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -87-90

அகநானூறு – அரிய செய்தி -87  
                                                               அன்னிமிஞிலி வரலாறு
முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கி
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்து
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி .........
                              பரணர்.அகம் 262 : 1 – 12
பழமையான பசிய காட்டில் – எருதுகள் பூட்டிய பலஏர்கள்  உழுது போட்ட சிவந்த புன்செய் நிலம்- எரு இட்டு – களை பறித்து – நீர் பாய்ச்சி – தழைத்து வளர்ந்த பயற்றங்கொல்லையில் பசு ஒன்று மேந்தது. பழமையான அவ்வூரில் இருந்த கோசர்கள் அப்பசு தன் பசு என்ற உண்மையை மறையாது உரைத்த தன் தந்தையின் கண்களை இரக்கமின்றிப் பிடுங்கித் துன்புறுத்திய கொடுமையினை அன்னிமிஞிலி அறிந்தள்- பொங்கிச் சினந்தவள் அக்கொடியாரை ஒறுக்கும்வரைக் கலத்திலிட்டு உணவு உண்ணேன் ; உடலில் தூய ஆடையினை உடுத்திக்கொள்ளேன் என விரதம் பூண்டாள்.வீரம் செறிந்த குறும்பியன் போர்த்திறன் கொண்ட திதியன் இருவரிடமும் தன் நோன்பை கூறினாள் அன்னி. இருவரும் படையுடன் சென்று கோசரைக் கொன்றனர். அன்னி மிஞிலி சினம் ஒழிந்து மகிழ்ந்தாள்.

அகநானூறு – அரிய செய்தி -88  
                                                   கங்கையில் புதைந்த செல்வம்
பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ
                            -மாமூலனார், அகநா.265 : 4 – 6
பலவகைப் புகழும் போர் வெல்லும் ஆற்றலும் உடைய நந்தர் என்பாரது சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே, ஈட்டித் திரட்டிக் குவித்து வைத்திருந்து பின்னர் கங்கையாற்றின் நீர் அடியில் மறைத்து வைத்து மறைந்தொழிந்த நிதியம் போன்ற பெரும் பொருளோ ...
நந்தர் தலைநகர் பாடலிபுத்திரம். பகைவர் கவந்தெடுத்துச் செல்லாதவாறு அன்னோர், கங்கையாற்றின் அடியில் சுருங்கை செய்து மறைத்து வைக்க, அப்பொருள் மறைந்து ஒழிந்தது என்பது வரலாறாகும்.

நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றுஅவண்
தங்கலர் ........................ அகம். 251: 5, 6  என்றும் மாமூலனார் முன்னர்க் கூறியுள்ளார்.
இச்செய்தியின் வரலாற்று உண்மையை ஆய்க..
அகநானூறு – அரிய செய்தி -89  
                                                      மறைத்து வைத்த செல்வம்
 அருந்தெறன் மரபிற் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண்
வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் ………
                     பரணர், அகநா. 372 : 1 – 5
பிறரால் தெறுதற்கரிய முறைமையினையுடைய கடவுள் காத்தலின் பெரிய தேன் கூடுகள் தொங்குவதும் நாட்டின் எல்லையினைக் காண்டற்குரிய உயர்ச்சியினையும் அகன்ற இடத்தினையும் உடையதுமாகிய அச்சம் பொருந்திய பக்கமலையினையுடைய பாழி மலையிடத்தே பழைய வேள்குடி மக்கள் தமது அகன்ற ஊரின்கண் மறைத்துவைத்த அரிய அணிகலமாகிய செல்வத்தைப் போல …. – குறிஞ்சி.
அகநானூறு – அரிய செய்தி -90  
                                   யாழ் ஒலிக்கும் ஊர் – நீடூர்
பாயம்=விருப்பம்- பாயாசம்,ஒற்கம் = மனத் தளர்ச்சி,பொலிசை = பேராசை
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன
                                      பரணர், அகநா.266: 10 – 14
எவ்வி என்பவன் குறிதப்பாத வாட்படையை உடையவன், யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன்; அவன் தன் ஏவலை ஏற்றுக் கொள்ளாத பூண் அணிந்த பகைவரை அரிமண வாயில் உறத்தூர் என்னுமிடத்துப் போரிட்டு வென்று அவர்தம் வலிமையைக் கெடுத்தான், அவ்விடத்தே தன் படை வீரர்களுக்குக் கள்ளுடன் பெருஞ்சோற்றினைப் பகற்பொழுதில் அளித்தபோது எழுந்த ஆரவாரம் …….

யாழ் ஒலிக்கும் தெரு என்றால் ….? எவ்வி வரலாறு…. ? அரிமண வாயில் உறத்தூர்.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக