வெள்ளி, 12 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -24 - 30

  அகநானூறு – அரிய செய்தி -24                    
கண்ணாடி
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியிற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும்....
                                               அந்தியிளங்கீரனார், அகநா.71 : 13 – 15
இகழ்ச்சியற இயற்றிய உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல் சிறிது சிறிதாகக் குறைந்து வந்து என் வலிமை மாய்தல் ....

  அகநானூறு – அரிய செய்தி -25                     

பாம்பு மணி உமிழும்
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் ......
 எருமை வெளியனார் மகனார் கடலனார், அகநா.72: 14, 15
அச்சம் தரும் நல்லபாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கில் ........
  அகநானூறு – அரிய செய்தி -26                     

குடவோலை
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
        மருதனிளநாகனார், அகநா. 77: 7,8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.-நாட்டார்)
(
  அகநானூறு – அரிய செய்தி -27                   

வலமாகஎழ- மழை பொழிதல்
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை – அறிவியல் நோக்கு - ஆய்க

அகநானூறு – அரிய செய்தி -28                   

85 – மணநாள் வேங்கை மலர்85,133
நன்னாள் பூத்த நாகிள வேங்கை
         காட்டூர் கிழார் மகனார் கண்ணனார், அகநா.85: 10
நல்ல நாள் காலையில்  பூத்த மிக இளைய வேங்கை மரத்தின்
வேங்கை பூக்கும் காலம் மணநாள் ஆகலின் நன்னாள் பூத்த என்றாள் என்லுமாம். மிளை – ஒருநாடு. இதல் – இருவகைப் பறவை




  அகநானூறு – அரிய செய்தி -29                   
திருமண நிகழ்ச்சி  - 86,136
இப்பாடல், களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்றுநச். கனையிருள் அகன்றகாலை என்பதனாற் ( அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில், முற்பக்கம் (பூர்வபக்கம்) என்பது பெற்றாம். கோள் என்றது ஈண்டுத் தீய கோள்களை. உரோகணி என்பதனை வருவித்து, விழுப்புகழ் நாளாவது உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம் . உரோகணியும் திங்களும் கூடிய நாள் கலியாணத்திற்குச் சிறந்ததென்பது ,                ‘திங்கட் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து ……… வதுவை மண்ணிய மகளிர் (அகம்.136) எனவும், வானூர் மதியம் சகடனைய வானத்துச் சாலியொரு மீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வதுஎனச் சிலம்பு. மங்கல.50-53. வருதலானும் அறியப்படும். கலியாணம் எல்லாரும் புகுதற்கு உரியதாகலின், பொது எனப்பட்டது.நெல்லொடு தயங்க என்றமையால் நெல்லும் சொரிந்தமை பெற்றாம்.( மருதம்) வதுவை மணமாவதுகுளிப்பாட்டல்; கோடிக்கலிங்கம்புதுப் புடைவை. –நாட்டார். மேலும் காண்க. அகம் 136.”வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில்-
அகநானூறு – அரிய செய்தி -30
                                                               வரதட்சணை
பெருங் கடல் முழக்கிற்றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே
                      மதுரை மருதனிள நாகனார், அகநா.90: 10-14
தலைவன் தலைவியைப் பொன் அணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை விலை என்றாள். உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால், பொருள் மிகக் கொடுக்கவேண்டுமெனத் தலைவியை அருமை பாராட்டியவாறு.

இவள் தந்தைமார், அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாக, வீரம் செறிந்த  கோசர்கள் வாழும் புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார் அல்லர். –நெய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக