வியாழன், 18 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -51 -55

அகநானூறு – அரிய செய்தி -51

சக்கரம்
நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்
திருவில்தேஎத்துக் குலைஇ .......
     ஆலம்பேரி சாத்தனார், அகநா.175: 14,16
நிரம்பிய ஆரங்களைக் கொண்ட சக்கரப் படையையுடைய திருமாலின் பகைவரின் போர் எண்னம் அடங்குதற்குக் காரணமான மார்பிடத்தே பொருந்திய மாலைபோலப் பல நிறங்களைக் கொண்ட அழகிய வில்லை அவ்வானத்தின்கண் வளத்துத் தோற்றுவித்தது.
 கடவுள் பெயர் ஆய்வு – வடவர் கடவுட் கோட்பாட்டுடன் ஆய்க. சக்கரத்தின் தோற்றம் கடவுள் குறியீடு ஆனதேன் – ஆய்க.நேமியஞ் செல்வன் – திருமால்.

அகநானூறு – அரிய செய்தி -52

தழை ஆடை
மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து
           மருதம் பாடிய இளங்கோ, அகநா.176 : 13-15
 வீட்டின்கண் உள்ள மரத்தின் மீது படரும் செழுமையான  வயலைக் கொடியினை, விளங்கும் மலர்களையுடைய ஆம்பற் கொடியுடன் சேர்த்துக் கட்டிய தழை ஆடையை உடுத்திக்கொண்டு, விழாவில் கூத்தாடுகின்ற பரத்தையரோடு நீயும் பொலிவுடன் கூடிக்குலவிக் கூத்தாடினாய் ....
 தழை ஆடை உடுத்துவோர்  - ஆய்க

அகநானூறு – அரிய செய்தி -53

மெய்ப்பாடு
................................... தன்முகத்து
எழுதுஎழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
தொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு
கூர்நுனை மழுகிய எயிற்றள்
           மருதம் பாடிய இளங்கோ, அகநா.176 : 21-25
ஓவியர் பார்த்து எழுத வாய்ந்த முகம் – அழகுகெட அழுதாள்- பொன்னை உருக்கி வார்த்தாற் போன்ற தேமல் – சினத்தால் கைவிரல் நெரிக்க சிவந்த  மெல்விரல் – திருகிக் கடித்தமையால் கூர் மழுங்கிய பற்கள். 
அகநானூறு – அரிய செய்தி -54
177 - மயில் உணவு
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇ
கானமஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
அயிர்யாற்று அடைகரை வயிரின் நரலும்
                                   செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், அகநா.177: 9-11
பச்சை நிறப் பாகற் கொடியின் செந்நிறப் பழத்தினை விரும்பிச் சூல் கொண்ட கான மயிலின் கரிய பெடையானது அயிரியாற்றின் கரையின்கண் நின்றுகொண்டு ஊது கொம்பைப் போல் ஒலிக்கும்.

அகநானூறு – அரிய செய்தி -55
                                            மேலாடை இல்லை
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிது நினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் ..............................
                       கருவூர்க் கண்ணம்பாளனார், அகநா.180 : 5- 9                                                                                                       
தோழி, நான் மணல் மேட்டில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த பொழுது. குதிரை பூட்டிய தேரிலே விரைந்து வந்த தலைவன் குளிர்ந்த குளத்தில் பூத்த நிறைந்த குவளை அரும்புகளை மலர்வித்துக்கட்டிய மாலையைப் பின்னலைக் கொண்ட என் முதுகில் தாழ்ந்து தொங்குமாறு நான் விரும்பாதே சூட்டி, நன்கு வளர்ந்து எழுகின்ற என் இளமுலையை நோக்கினான், நெடிது நினைந்து நில்லாது சென்றுவிட்டான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக