செவ்வாய், 2 ஜூன், 2015

நற்றிணை -பொன்மொழிகள்

சங்கத் தமிழ் - எட்டுத்தொகை
நற்றிணை -பொன்மொழிகள்
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
                                                 கபிலர், நற். 1 : 1, 2
 தோழியே ! என் காதலர் சொன்ன சொல் தவறாதவர்; என்றும் இனியவர்; எக்காலத்தும்
என்னைவிட்டுப் பிரிய நினையாதவர்.

நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம் நயந்து அருளி
                                                           கபிலர், நற்.1: 6, 7
தோழீ ! நீரின்றி அமையாது உலகியல் வாழ்வு  அதைப்போல, அவரின்றி நம் வாழ்வு சிறக்காது என்பதை நன்கு அறிந்த நல் உள்ளம் கொண்டவர் அவர்.

சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே
                                அறிவுடைநம்பி, நற். 15 : 9, 10
 தலைவனே ! காதல் கொண்டதால் தொன்று தொட்டு எம்மொடு வளர்ந்துவந்த நாணத்தையும் விட்டோம்; இனி இவ்வூரில் அலர் எழுவதாக.

பிரியின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின்  புணராது புணர்வே
                       சிறைக்குடி ஆந்தையார், நற். 16 : 1, 2
நெஞ்சே ! தலைவியைவிட்டுப் பிரியாமல் இருந்தால் பொருள் கிடைக்காது; பொருளுக்காகப் பிரிந்தால் அவளோடு கூடி மகிழும் இன்பம் கிடைக்காது.

பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ
                      சிறைக்குடி ஆந்தையார், நற். 16 : 4 – 6
 நெஞ்சே ! தேடிய செல்வமானது வாடாத மலரை உடைய பொய்கை இடத்து நீந்தும் மீன் செல்லுகின்ற வழி போல இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் தன்மை உடையது.

தெண்ணீர் மலரில் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
                                     கணக்காயனார், நற். 23 : 8, 9
தெளிந்த நீரில் உள்ள மலர் போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன.( தோழி கூற்று )
பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
                                                   கபிலர், நற். 32 : 7- 9
அறிவுடையோர், ஆராய்ந்து பார்த்தே நட்புக் கொள்வர்;  நட்புக் கொண்ட பின்பு ஆராய்ந்து பாரார்.

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
                               மருதன்இளநாகனார், நற். 39 : 3
காமம் எல்லை மிகுமாயின் அதனைத் தாங்குதல் எளிதாகுமோ ( தலைவன் கூற்று )

வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து
                                      ………………… நற். 46 ; 1, 2
வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல்  எப்படி மறையுமோ அப்படி  இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.
செறுநரும் விழையும் செம்மலோன்  …
                  மருதம் பாடிய இளங்கடுங்கோ, நற். 50 : 9
பகைவரும் விரும்பும் பண்புடையாளன்

விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
                                         நல்வேட்டனார், நற். 53 : 9
காட்டாற்றில் பெருக் கெடுத்து ஓடி வரும் புதிய இனிய நீரானது நோய் தீர்க்கும் மருந்தும் ஆகும்.
              
நம்வயிற்  புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே
                                                    கபிலர், நற். 59 : 7, 8
 மிகுந்த அன்பு கலந்த   உறுதியான பற்றுடன் என்றும் தன் நெஞ்சிலே எம்மை நினைந்து வாழும்  எம் காதலி வாழும் ஊர்.
பேணுப பேனார் பெரியோர் என்பது
நாணுத்தக்கன்று அது காணுங்காலை
                                     இளம்போதியார், நற். 72 : 1, 2
ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.
உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பின்
                                        இளம்போதியார், நற். 72 : 3
இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பதைப் போன்ற குற்றமற்ற நட்பு.
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
                                            கண்ணகனார், நற். 79 : 5, 6
 தோழீ ! பிரிவறியாது தலைவனோடு கூடியிருத்தல் இன்பம்;அவர் பிரிந்து செல்வாராயின் அதனினும் கொடுமை வேறு உண்டோ
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே
                                         பூதன் தேவனார், நற். 80 : 8, 9
நெஞ்சே ! யான் உற்ற நோய்க்கு  அவளே மருந்தாவாள்; அவளன்றிப் பிறிதொரு  மருந்தும் இல்லை.

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே
                                           அம்மள்ளனார், நற். 82 : 5, 6
 தலைவியே ! முருகனுடன் கலந்து இனிது சென்ற வள்ளியைப் போல விளங்கும் நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுவதனாலே  யான் நின்னை நோக்க இயலாது ஆனேன்.
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே
                                          நல்லந்துவனார், நற். 88 : 8, 9
பழங்கள் உதிர்கின்ற தலைவனின் குன்றமானது நம்பால் பெரிதும் அன்புடை மையாலே தன்வருத்தத்தை அடக்கிக்கொள்ள மாட்டாதே  கண்ணிர் அருவியாகப் பெருகும் படி அழும்.       
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
                                      இளந்திரையனார்,நற். 94 ; 1, 2
 தோழீ ! காம நோய் வருத்துகின்றபோது, அன்போடு வந்து அருகிருந்து நமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும்.
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு
                                           மாறன்வழுதி, நற். 97 : 1, 2
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
                                               ……………… நற். 108 : 6
பழகியிருந்து பின் பகைவராகிப் பிரிந்தால் அப்பிரிவும் துன்பம் தருவதே.
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
                                              போதனார், நற். 110 : 9-11
 என் மகள், அறிவையும் ஒழுக்கத்தையும் எங்ஙனம் கற்றனள் ? தன் கணவன் குடி வறுமையுற்ற சூழலிலும் தன் தந்தையின் வளமான செல்வத்தையோ உணவையோ கருதாதவள் ஆனாளே.
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ
                                   கந்தரத்தனார், நற், 116 : 1, 2
கொடிய தீமை செய்வோரைக் கண்டவிடத்தும் தீமை செய்வோர் உளம் வருந்தி உணருமாறு இனி அதனைச் செய்யாதிருக்க என்று பலமுறை எடுத்துக் கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
                                      ………………… ,  நற். 126 : 7, 8
கொடிய பாலை நிலத்தைக் கடந்து சென்று ஈட்டும் பொருள் இன்பம் தரும் என்றாலும் இளமையில் நுகரும்  காம இன்பத்தைக் காட்டிலும் சிறந்த வளமை உடையதாமோ ? இல்லையே..
நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன்
                                           நற்சேந்தனார், நற். 128 : 3, 4
 தோழியே ! ஓர் உயிரை இரண்டு உடல்களில் பகுத்து வைத்தாற் போன்று நின்னோடு  பொருந்திய நட்பு உடையேன்.

அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
                                  நற்றங்கொற்றனார், நற். 136 : 2, 3
கொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது தகுந்த மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன் போல
அல்லில் ஆயினும்  விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே
                                 இடைக்காடனார், நற். 142 : 9 – 11
தலைவி நள்ளிரவாயினும் விருந்தினர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் பண்புடையவள்; கற்பிற் சிறந்தவள்; மென்மையும் இளமையும் நிறைந்தவள்.
காதல் தானும் கடலினும் பெரிதே
                                         ....................... , நற். 166 : 10
தலைவியே ! நின்பால் எனக்குள்ள காதல் கடலை விடப் பெரிதே .
சுடுவாள் போல் நோக்கும்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே
                                         ...................... , நற். 175 : 8, 9
தோழியே ! சுடு பால்மேல் ஆடை படர்வது போல், பசலை படர்ந்த என் மேனியைச் சுடுவது போல் நோக்கினளே அன்னை.

பிறர்க்கு என முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணிப் போகிய
                                    ......................... , நற். 186 : 8, 9
 தோழியே ! தன் வாழ்நாளும் பொருளும் பிறவும் பிறர்பொருட்டே என்று, முயன்று முடிக்கும் பேரருள் வாய்ந்த என் தலைவன் பலராலும் விரும்பத்தக்க பொருளைத் தேடிச் சென்றான்.
நன்றி விளைவும் தீதொடு வரும் என
                                          ....................... , நற். 188 : 6
நன்மை கருதிச்செய்யும் செயல் தீமையாய் முடிவதும் உண்டு.

சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற்கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
                                        வெள்ளைக்குடி நாகனார், நற். 196: 5 – 7
நிலவே ! நீ நிறைவும் நேர்மையும் கொண்டு விளங்குகிறாய், உனக்குத் தெரியாமல் உலகில் எதுவும் இல்லை. என் முன் வாராத என் காதலர் எங்கே இருக்கிறார் ; காட்டுவாய் நீ .                                                 
பெரு நிலம் கிளரினும் திரு நல் உருவின்
மாயா இயற்கைப் பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே
                                            பரணர், நற். 201 : 10 – 12
இவ்வுலகமே சினங்கொண்டு எதிர்த்தாலும் அழகிய வடிவுடைய என் காதலி நெஞ்சினின்று நீங்காள்.
…………………………………………………….தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக