செவ்வாய், 9 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -6 to 10


அகநானூறு – அரிய செய்தி -6               
                                                         புலி இரைகொள்ளும் முறை
தொடங்குவினை தவிரா அசைவில் நோன் தாள்
கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த
தாழ்வில் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப
                                        வெள்ளாடியனார், அகம்: 29 : 1 – 4
தான் தொடங்கிய வினையைக் கைவிடாத, தளர்ச்சியில்லாத, வலிய முயற்சியினையுடையதும் பட்டினி கிடந்து உயிர் வருந்துவதாயினும் தான் வீழ்த்திய களிறு இடப்பக்கம் வீழின் அதனைத் தின்னாது …………..
ஆகொள் வயப் புலி – அகம்.52- பசுவினைக் கவரும் வலிய புலி.
வலப்பக்கம் வீழ்த்தல் -   விலங்கியல் - ஆய்க
அகநானூறு – அரிய செய்தி - 7                   
                                       தமிழ் நாட்டின் எல்லைகள்
 தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
                                -மாமூலனார், அகம். 31 : 14, 15
தமிழ் நாட்டினை ஆளும் மூவராலும் காக்கப்பெறும் வேற்றுமொழியினையுடைய தேயங்களிலுள்ள பல மலைகளையும் கடந்து ….. ( தமிழ்மொழியின் வேறாய மொழி வழங்கும் தேயம் என்றுமாம்.)
 மேலும் காண்க புறம்
அகநானூறு – அரிய செய்தி - 8                 
                                                        நிலம் புடைபெயர்தல்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம்புடை பெயர்வ தன்றுகொல் இன்றென
மன்னுயிர் மடிந்த மழைமா றமையத்து
                                 -மாமூலனார், அகம். 31 : 1- 4
தீயைப் போன்று சினந்தெழுந்த வெம்மை விளங்கும் ஞாயிறு விளைநிலத்தேயுள்ள பயிர்கள் தீய்ந்தொழிய அழித்தலின், இன்று நிலவுலகம் குறைவுற்று நிலைபெயரும் காலான் அன்றோ என்று சொல்லும்படி நிலைபெறும் உயிர்கள் மடிதற்கேதுவாகிய மழை பெய்யாதொழிந்த இக் காலத்திலே ….. மேலும் காண்கபுறம்.

அகநானூறு – அரிய செய்தி - 9
                                         கழுகு, கண்ணைக் கவர்தல்
இலையில வோங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட
ந்ணவரிக் குறைந்த நிறத்த வதர்தொறுங்
கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம்
                        -மாமூலனார், அகம். 31 : 5 - 11

இலைகள் இலவாகி மிக ஓங்கிய யாமரத்தின், கிளைகளில் இருந்த பார்ப்புகளுக்கு, கற்களையுடைய சீறூரில் உள்ள மறவர்கள் வில்லால் அம்பினை எய்தலால் பொலிவற்ற நிறத்தினையுடைய வழிதோறும் செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்தாலொப்ப, நிண ஒழுங்கும் புண் சொரியும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தோரது, கண்ணைக் கவர்ந்து சென்று உமிழ்ந்து கொடுக்கும் கழுகுகளையுடைய காட்டை …..
 கண்கழுகுக் குஞ்சுகளுக்குச் சிறந்த உணவாதல் –  விலங்கியல் -ஆய்க.

அகநானூறு – அரிய செய்தி - 10                     

                                          பதுக்கை
 வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித்  துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
                                                                   -அம்மூவனார், அகம்.35 : 6 : 9
வில்லை ஏராகக்கொண்டு வாழும் வாழ்க்கையினை உடைய, சிறந்த அம்பினையுடைய கரந்தை வீரர்கள் தங்கள் வலிய ஆண்மையாலிட்ட பதுக்கைக் கண்ணுள்ள கடவுளை வழிபடற்கு அந்நடுகல்லில் மயில் தோகைகளைச் சூட்டி, துடியை அடித்து நெல்லாலாக்கிய கள்ளொடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுக்கும் ….

பதுக்கை
...........................................................
உவலிடு  பதுக்கை ஆளுகு பறந்தலை
           நோய்பாடியார், அகநா.67:14
மரித்த ஆட்களை இட்டுத் தழைகளைக் கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாழிடத்தே.

பதுக்கையிடத்துக் கல்லில் உறையும் கடவுள்பதுக்கைநடுகல்குறித்து ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக