சோதிடம் உண்மையா….?
பகுதி- 1
இன்ப விழைவு உயிர்களின் இயல்பாகும் எனினும்
துன்பம் தொடர்கதை யாகின்றது. ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்றாலும் சூழலும் துன்பச்
சுழலாக மாறுகின்றது. நிகழ்காலம் கொடியதென்றாலும் எதிர்காலம் இனிமையாக இருக்கும் என்ற
எண்ணம் எழுந்துகொண்டே இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் வாழ்க்கை வண்டியும் உருண்டோடிக்
கொண்டிருக்கிறது.
ஒளிமயமான எதிர்காலத்தை
அறிந்துகொள்ள மனிதனுக்குத் தான் எத்தனை ஆசை ! கடவுள் வழிபாடும் காணிக்கையும் சமயத்
தத்துவமும் சந்நியாசிகளின் அருள்வாக்கும் சோதிடமும் ஆருடமும் எதிர்காலத்தில் நிகழக்
கூடியனவற்றை சொல்கின்றனவோ இல்லையோ நிகழ்காலத்திற்கு ஆறுதல் அளிக்கின்றன என்பது உண்மையே!
இந்த அற்பச் சுகத்திற்கு அறிவு அடிமையாகின்றது – விலைபோகின்றது. கிரகங்கள் மனிதர்கள்
மீது ஆட்சி செய்கின்றன என்று கூறி – சோதிடர்கள் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.
சோதிடம்
சோதிடம் எண்ணத்தில் பிறந்து – எழுத்தாணியில்
வளர்ந்து – எழுது கோலிலும் வளர்ந்து இன்று கணினி மயமாகிவிட்டது. சோதிடம் செல்வந்தர்களின்
செல்லப்பிள்ளை – இந்தச் செல்லப்பிள்ளையி சொல்லை யாரும் தட்டிக் கழிப்பதில்லை. நாளும்
கோளும் இவர்களுக்காகவே நகர்ந்து கொண்டிருக்கின்றன போலும் . “ நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை
– நாள் என் செய்யும் கோள் என் செய்யும் “
- உழைத்தால்தான் உணவு.
உழைப்பின் மேன்மையாலே நாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன
; உழைக்க நேரமில்லை என்று வருந்தும் மக்களிடையே
- இன்றும் பலர் உண்டு – உறங்கி – ஊர்க்கதை பேசிக் காலத்தைக் கழித்தது போதாதென்று
இராகு காலம் – எமகண்டம் – சூலம் – குளிகை – அமாவாசை – பாட்டிமுகம் - என்று காலத்தை விரயம் செய்கிறார்கள். இன்னும்
சிலர் அஷ்டமி – நவமி என்று சில நாட்களையே விழுங்கிவிடுகின்றனர். இவர்களுக்கும் இந்த
நாட்டின் முன்னேற்றத்திற்கும் என்ன தொடர்பு..?
சோதிடம்
மெய்யா – பொய்யா என்று ஆராய்ச்சி செய்வோர்
இலர். அதனால் அதைச் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் இடையே “ சோதனை” வருவதில்லை. சோதிடத்தைச்
சிலர் பிழைப்புக்குச் சொல்கிறார்கள் ; சிலர் பெருமைக்குச் சொல்கிறார்கள். அந்த பெருமை
கூடப் பிழைப்பு சார்ந்ததுதான். எப்படியாயினும் சோதிடம் சொல்பவன் மிகவும் புத்திசாலியே
! எண்ணங்களுக்கு வெளுக்கும் வண்ணங்களைப் பூசுவதில் வல்லவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டே
ஆகவேண்டும்.
அருள் வாக்கு
சோதிடத்திற்காவது கூட்டல் கழித்தல் தெரிந்திருக்க
வேண்டும் ; அருள் வாக்கிற்கு அதுவும் தேவையில்லை. “ஞானப் பார்வை “ ஒன்றே போதும். அருள்
வாக்கின் பெருமை அதன் பொருளைப் புரிந்துகொள்பவர் மனத்தைப் பொருத்தது. சோதிடத்திற்குச் ”சொல் சாதுரியம்” அடிப்படை;
அருள் வாக்கிற்கு “அற்புதங்கள்” அவசியம். வெறுங்கையில் விபூதி கொட்டும்- சோறு கொட்டினால்
என்னவாம் ஏழ்மையும் வறுமையும் நீங்குமல்லவா..? பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.
சோதிடத்தின் வளர்ச்சி
சோதிடம் என்று
தோன்றியது என்று “கணிக்க முடியாது” கடவுள் நம்பிக்கை என்ற ஆணி வேரின் ஒரு கிளையாக இது
மனத்தில் பதிந்துள்ளது.வேதத்தில் சோதிடம் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லையென்பர். வானியல்
ஆய்வில் தொன்மைத் தன்மையுடைய கிரேக்கர்கள் மூலம் வட இந்தியாவிற்கு வந்து பின் தென்னிந்தியாவிற்குள்
நுழந்ததாகக் கருதுகின்றனர். ஆனால் வானியல் என்னும் அறிவியலுக்கு உரியவர்கள் தமிழர்களே
என்பார் எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை.
“ சாலடியர் –கிரேக்கர் – ரோமர் இவர்கள் போலவே பண்டைய
இந்தியரும் வான சாத்திரத்தைச் சோதிடத்திற்குத் துணையாகவே கொண்டனர். மற்ற மக்களைவிட
இந்த்துக்கள் தான் தங்கள் வாழ்க்கையிலே தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் நட்சத்திரங்களின்
ஆதிக்கம் நடப்பதாக நம்புகின்றனர். இந்தியாவில் வான சாத்திரமும் சோதிடமும் பின்னிப்
பிணைந்திருப்பதால் சமஸ்கிருதத்திலே வான சாத்திரி – சோதிடன் என்றே சொல்லப்படுகிறான்;
தமிழில் “கணியன்” எனப்படுகிறான்.
நல்ல நாள் பார்க்கும் பொறுப்பு அந்தணருடையது என்கிறது
ஆசாரக்கோவை. இவ்விடத்தில் 27 நட்சத்திரங்களின்பெயர்களும் நட்சத்திரங்கள் பெயரிட்ட தேவதைகளும் தெய்வங்களின்
பெயர்களும் ஆய்வுக்குரியவை.
” வருமுன் உரைப்போன்” என்ற போர்வையில் வாழ்வது சுகமானதும்
பாதுகாப்பானதும் ஆகும். சமுதாயத்தில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மக்கள்தம் அறியாமையின் அளவைப் பொறுத்தே அமைந்திருக்கும். கடவுள் நம்பிக்கைபோலச்
சோதிடம் அறிதலும் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது. அதனால் தான் சோதிடம்
இன்றும் வாழ்கிறது; என்றும் வாழக்கூடிய இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளது.
“இந்த சோதிட சாஸ்திரமானது ஜன்மாந்தரிய புண்ய பாப
கர்மங்களால் சுக துக்கங்கள் உண்டாகின்றன என்றும் அவை இவ்வளவு காலம் இருக்கும் என்றும்
அவற்றை இன்னின்ன கிரகங்களின் சாரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளக் கூடும். உண்மையில்
துறவியாய் எதிலும் பற்றில்லாதவனும்கூடப் பிராப்த கன்ம மூலம் சொல்லொணாத் துயரமுண்டாகுங்கால்
இத்துயரம் சரீரமுள்ளவரை இருந்துதான் தீருமா? அல்லது இடையில் நீங்கிவிடுமா எனவறிய விரும்பிச்
சோதிட வித்துவானையணுகி அவர் மூலம் அறிந்து கொள்ளக் கூடும் “ என்று சோதிடத்தின் பெருமை
கூறப்படுகிறது.
எதிர்காலத்தைத்
துணிவுடன் எதிர்கொள்ளத் தயங்குவோர் / மயங்குவோர் மனநோயாளிகளே. அறிவின் மீதும் உழைப்பின்
மீதும் நம்பிக்கையற்றவர்கள் எதிர்காலத்தை எண்ணி அஞ்சுகின்றனர். “எல்லாம் இறைவன் விட்டவழி”
என்று சோம்பலைத் துணைகழைத்துக் கொள்கின்றனர். எதனையும் துணிந்து ஆற்றும் மனவலிமை அற்றவர்களாகிவிடுகின்றனர்.
இவர்கள் கடந்த கால இழப்புகளை எண்ணிக் கலங்கி நிகழ்காலத்தைத் துன்பமயமாக்கிக்கொண்டு
ஏதோ காலத்தைக் கழிப்பதாகக் கூறுவார்கள்; உண்மை அதுவல்ல – காலம்தான் இவர்களைக் கழித்துக்
கொண்டிருக்கிறது. இத்தகையோர்க்குச் சோதிடம் கூறும் அறிவுரை இதுதான் - “எவன் சோதிட சாஸ்திர ரகசியத்தை அறிவானோ அவன் அறம்
பொருள் மோட்சம் இவைகளையும் நற்கீர்த்தியையும் அடைவான் என்று “பாஸ்கர சித்தாந்தம்” என்ற கிரந்தத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது” என்று
கூறுவதால் சோதிடத்தை அறியாதவன் அறம் பொருள் இன்பத்தையோ மோட்சத்தையோ அடைய முடியாதா?
இவற்றை எல்லாம் அடைய சோதிடம் என்ற எளிய வழி இருக்குமானால் அதனை யார்தான் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
சோதிடத்தின் மகத்துவம்
சோதிடம் உலகம் முழுதும் பரவியுள்ளது. சோதிடத்தின்
துணையின்றி அன்றாட அலுவல்களைச் செய்ய முடியாத மன ஊனமுற்றோர் பலர். இவர்களுடைய எதிர்பார்ப்புகள்
மிகவும் சிக்கலானவை – அவை…..
இன்றோ நாளையோ இறந்து விடக் கூடாது
உழைக்காமல் பொருள் வரவேண்டும்
பிறருக்குக் கொடுக்காமல் புகழ் வரவேண்டும்
இறந்தபின் சொர்க்கலோகத்திலும் சுகம்
கிடைக்க வேண்டும்
…. அவ்வளவுதான். சோதிடத்தின்
மகத்துவத்திற்கு அடிப்படையாக அமைவது எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான அணுகுமுறையே
!
ஜோசியங்கள் உண்மை போலவே தோற்றம்
அளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலான கூறுகள் மழுப்பாலனவை –பொதுப்படையானவை எல்லாக் கால்களுக்கும் பொருந்தும் நைலான் காலுறைகள் போல் இழத்த இழுப்பிற்கு
வருபவை. ஆனால் அவை தமக்கு மட்டுமே உரியவையாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்ற பிரமையை மக்களுக்கு
உண்டாக்குவதுதான் சோதிடனின் சாமர்த்தியம் . இந்த பிரமைக்கு உளவியலார் ”பார்னம் உத்தி”
(Barnum Effect) என்று பெயரிட்டுள்ளனர்
சோதிடம்
நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சமாதானமும் ஆறுதலும் அளிக்கிறது. சோதிட வயப்பட்டோர்க்குச்
சோதிடர் தரும் ”மருந்து” ஒரு மனநோய் மருத்துவத்திற்கு
ஆகும் செலவைவிடக் குறைவானதுதான். சோதிடர் – சோதிடம் கேட்போரின் எதிர்பார்ப்புகளை இயன்றவரை
நிறைவு செய்து விடுகிறார். சோதிடரைத் தவிர வேறு எவர் வாயாலும் பாராட்டுப் பெறத் தகுதியற்றவர்கள்
சோதிடத்தை நேசிப்பது இயற்கைதானே !எனவே சோதிடத்தின் நம்பகத்தன்மை – இடம் – பொருள் அறிந்து சொல்வதிலே தான் அடங்கியிருக்கிறது என்பது
வெளிப்படை…. தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக