சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 10

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 10
மலைபடுகடாம் - இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
                                                                                         17, 18
தம் மனைவியருடன் கூடியிருக்கும் கானவர்கள், தங்கள் வில்லில் தொடுத்த அம்பினை உடையவர்களாய் வழிச் செல்வார்க்குக் கள்வராலும் விலங்குகளாலும் இடையூறு ஏற்படாதவாறு காவல் புரிந்து துணை நிற்பர்.
அமை வரப் பண்ணி அருள் நெறி திரியாது
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறை பல முற்றிய பை தீர் பாணர் ...
                                                                              .38 - 40
யாழ் நூலில் கூறியுள்ள இலக்கணமரபுக்கேற்ப, இசைப்பதற்கு ஏற்ற வகையில் பேரியாழினை ஆயத்தம் செய்து, இசையை எக்காலத்தும் கேட்டு இன்புறும் செல்வச் சிறப்புடைய அரசர்களின் அவைக்களத்தில்  அவர்தம் செவி குளிர இசைக்கும்  பல்துறை அறிவு சான்ற  பாணர்கள்.
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப
பலர் புறம் கண்டு அவர் அருங் கலம் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரி ...
                                                                                             .70 – 72
நன்னன், உலகம் உள்ளளவும் கெடாத நல்ல புகழ் நிலைத்து நிற்குமாறு பகைவர் பலரையும்  புறமுதுகிட்டு ஓடச் செய்து. பகைவர்கள் திறையாகத் தந்த  அரிய அணிகலன்களைக்கொணர்ந்து புலவர்களுக்குப் பொன் மழை போல் பரிசுகளை  வரையாது வழங்குவான்.
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம் ...
                                                                                                    77 – 80
தாம் கற்றவற்றை வெளிப்படுத்தும் நாவன்மை மிக்க அறிவுடையோர்,  பலர் கூடிய  அவைக்களத்தில்  தாம் கற்றவற்றை மனங்கொளக் கூறாரிடத்தும் அவர்தம் இயலாமையை மறைத்துஇகழாது எல்லோர் மனங்களிலும் பொருந்துமாறு பொருளுரைத்து  அவர்களை நன்றாக நடத்தும் இயல்பினர். இத்தகைய உயரிய ஒழுக்கமுடைய சான்றோர் சுற்றம் சூழ விளங்குவது நன்னன் அவை.
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பு ...
                                                                                             .84 – 85
பரந்த இருள் நீங்கும்படிப் பகல் பொழுதை உண்டாக்கி  எழும் கதிரவன் போன்று, பகை என்னும் இருளை நீக்கிக் குற்றமில்லாத புகழோடு விளங்குபவன் நன்னன்.
செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு
                                                                        394 – 396
கூத்தர்களே ! நீங்கள் போகும் நாட்டில் போரிட்டு இறந்தவன் இவன் என்பதை உலகம் அறிந்துகொள்வதற்கு ஏற்பப் பெயர் எழுதிய கல்  நல்ல அடிமரத்தையுடைய மரா மரங்களின் நிழலில் நடப்பட்டிருக்கும். அத்தகைய நடுகல் கடவுள் நிறைந்த காடு.
படியோர்த்  தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவற் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
                                                                   423  – 426
கூத்தர்களே ! கொடிய வில்லினை உடைய வேடர் கூட்டத்தைக் கண்டால்  அவர்களிடம் தன்னை வணங்காதவரை அழித்தவனும்  எவர்க்கும் பணியாதவனும் பகைவரை ஆளும் தன்மையுடையவனும் கற்பினால் மேம்பட்ட  அரசியின் கணவனுமாகிய நன்னனைக் காணப் போகிறோம் என்று கூறினால் தசையும் கிழங்கும் தந்து உம்மைப் போற்றுவர் ; உங்களைத்  துன்புறுத்த மாட்டார்கள்.
 இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக்கடன் இறுத்த செம்மலோய் ..
                                                                      541543
நன்று இது, தீது இது என ஆராய்ந்தறியும் பெரியோர் இறந்துபோக,   உலகம் உள்ளவரை யாண்டும் நிலைத்து நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்துமுடித்த செம்மல், நன்னன்.
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகித்
                                                                      . 551553
அகன்ற நாட்டினையும் சுருங்கிய அறிவினையும் உடையவர்களாகி,  தம்மை நாடி இரந்து வந்தவர்க்கு  எதுவும் இல்லை எனக் கை விரித்துக் கூறியும்  தம் பெயரை உலகில் நிலை பெறச் செய்யாமல் தம்பெயர் தம்முடன் அழியுமாறு  சென்ற அரசர் பலராவர்.
.. புகழொடும் கழிக நம் வரைந்த நாள் ..
                                                                                   557
இத்துணைக் காலம் என வரையறுக்கப்பட்ட நம் வாழ் நாள்கள் யாவும் புகழுடன் கழிந்து போகுவதாகுக.
இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறையக்
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி.
                                                                                      576 – 578
நன்னனே ! இல்லாமையால் வருந்தும் புலவர்தம்  ஏந்தும் கைகள் நிறையும்படியாக உன் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ்செல்வம் கெடுதல் இல்லாது வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி
  
 இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 579, 580
மூங்கில் வளர்ந்த நவிரம் என்னும் பெயருடைய மலையின் உச்சியில் விரைவாக மேகங்கள் மழையைப் பொழிந்தாற் போலக் காலங் கடத்தாது முதல் நாளிலேயே  பரிசில்தந்து விடை கொடுத்து அனுப்புவான் நன்னன்.
                                                   முற்றும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக