புதன், 3 ஜூன், 2015

குறுந்தொகை- பொன்மொழிகள்

குறுந்தொகை- பொன்மொழிகள்
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் –கட்டுரையில் காண்க)
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே
                                                 ஆலங்குடி வங்கனார், குறுந். 8: 4 – 6  
            அவனோ, மனைவி கூறுவதையெல்லாம் கேட்பவன்.கண்ணாடியின்முன் கையும் காலும் தூக்கக் கண்ணாடியில் ஆடும் பொம்மை போல அவள் விரும்பியதைச் செய்வான் என்று காதல் பரத்தை தலைவனைப் பழித்தாள்.

நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே
                                                   தொல் கபிலர், குறுந். 14 : 5, 6  
            இவ்வூர் அறிய இவளையே மணமுடிப்பேன். இந்த நல்ல பெண்ணின் கணவன் இவன் என்று ஊரார் பலரும் கூறக் கேட்டு நானும் என் காதலியும்  சிறிதே நாணம் கொள்வோம்.

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே
                                                          கபிலர், குறுந். 18 : 4, 5      
பலாவினது சிறிய கிளையில் பெரிய பழம் தொங்குவது போல், இவள் உயிரோ மிகச் சிறிது, காமமோ மிகப் பெரிது.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இப்
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்
                           அள்ளூர் நன்முல்லையார், குறுந். 32 : 1 – 3       
காலையும் பகலும் மாலையும் இரவும் என்று பொழுது வரையறை தெரியுமாயின் காதல் பொய்யே.

செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
                                         செம்புலப் பெயல் நீரார், குறுந். 40 : 4, 5     
தலைவி,  செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல  நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இரண்டும் தாமாகவே கலந்து ஒன்றாயின.

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
                                                ஒளவையார், குறுந். 43 : 1, 2      
தோழி, தலைவர் பிரியமாட்டார் என்று நான் கருதியிருந்தேன்,பிரிவைச் சொன்னால் நான் தாங்கமாட்டேன் என்று அவர் கருதிவிட்டார்.
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே
                                               மாமிலாடன், குறுந். 46 : 6, 7    
 தோழி, பிரிந்து இருப்போர்க்குத் துன்பம் தரும் மாலைப் பொழுதும் தனிமைத் துயரும் தலைவர் சென்று தங்கி இருக்கும் நாட்டில் இல்லையோ ?

எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே
                                 நெடுவெண்ணிலவினார், குறுந். 47 : 3, 4    
ஒளிவீசும் வெண்ணிலவே, இரவில் காதலியைக் காணவரும் தலைவருக்கு நீ நல்லை இல்லை.

நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே
                              பூங்கணுத்திரையார், குறுந். 48 : 7, 8  
தலைவி விரும்புகின்ற பண்புடைய தலைவனே, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற ஓர் ஒப்பற்ற சொல்லைச் சொல்ல உனக்கு இயலாதா? என்று கேட்டாள் தோழி.

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே
                                      அம்மூவனார், குறுந். 49 : 3 – 5     
இப்பிறப்பு நீங்கி மறுபிறப்பு வருமாயினும் அப்பிறப்பிலும் நீயே என்கணவன், நானே உன் மனைவி.

இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே
                                      சிறைக்குடி ஆந்தையார், குறுந். 57: 5, 6    
ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல் இவ்வுலகத்து இயற்கை .ஒருவராகத் தனித்திருந்து துன்புறுதலினின்று உய்தல் இன்றேல், இறப்பது நன்று.
...காதலர்

நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே
                                                           பரணர்,குறுந். 60 : 4-6    
தோழி, காதலர் அன்பு செய்யாராயினும், விரும்பாராயினும் அவரைப் பலமுறை கண்களால் காண்பதே மனத்திற்கு இன்பம் தருகின்றது.

நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே
                                    சிறைக்குடி ஆந்தையார், குறுந். 62 : 4, 5  
நறுமணம் மிக்க என் தலைவியின் மேனி தளிரை விட நிறத்தாலும் மென்மையாலும் சிறப்புடையது. தழுவிக் கொள்வதற்கும் இனிமை நிறைந்தது.

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் ...
                                           உகாய்க்குடி கிழார்,குறுந்.63 : 1     
இரவலர்க்குக் கொடுத்தலும் அதனால் பெறுகின்ற இன்பமும் வறியவர்க்கு இல்லை.

அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே
                                   அள்ளூர் நன்முல்லையார், குறுந். 68 : 3, 4         
முன்பனிக் காக் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து, என்னை மணந்த அவருடைய மார்பேயன்றி வேறில்லை.

இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
                                                       ஓரம்போகியார், குறுந். 70 : 3 
இத்தகைய அழகுடையவள் என அவளை வருணித்துப் பாராட்டுதற்குரிய எல்லையை நான் அறியேன்
ஒன்று மொழி கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே
                                                                 பரணர், குறுந். 73 : 4, 5           
தலைவனை நீ அடைய விரும்பினால், சொல் உறுதிமிக்க கோசரைப்போலச் சிறிது வன்கண்மை உடைய சூழ்ச்சியும் வேண்டும்.

நோதக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே
                                              நக்கீரனார், குறுந். 78 : 4 – 6       
காமம், தன்னைச் சிறிதும் நல்லது என எண்ணாதவரிடத்தும் தானே சென்று தங்கும் மிகப்பெரிய அறியாமையை உடையது. அது மிகவும் வெறுக்கத்தக்கது.
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
                                                 வெண்பூதன், குறுந். 83 : 1, 2      
தலைவன் மணமுடிக்க வருகிறான் என்ற நல்ல செய்தியைச் சொன்ன அன்னை, பெறுதற்கரிய அமிழ்தத்தை உணவாகப் பெறுவாளாக, புகழுடைய துறக்க உலக இன்பத்தையும் அடைவாளாக.

மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப
                                          கபிலர், குறுந். 87 : 1, 2     
...அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பிலங்கடையே
அள்ளூர்நன்முல்லையார், குறுந்.93:2-4
தோழி, அவர் நமக்கு அன்னையும் தந்தையும் போன்று அன்பு செய்யாதவர், அன்பு இல்லாதவரிடம் ஊடல் கொள்வதால் பயன் ஏது .

நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன உரன் அவித்தன்றே
                                            கபிலர், குறுந். 95 : 4, 5               
 தலைவியின் நீரை ஒத்த சாயல் என்னுயை தீயை ஒத்த மனவலிமையை அவித்து விட்டது.

வான் தோய்வற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே
                                         ஒளவையார், குறுந். 102 : 3, 4              
என்னை வருத்துகின்ற காமம் வானத்தைத் தொடுவது போன்று எல்லையற்றதாகிறது என்னைக் கூடி மகிழ்ந்த தலைவர் சால்புடையர் அல்லர்.

வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே
                                 வாயிலான் தேவன், குறுந். 103 : 5, 6
கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
                                            ஆலத்தூர் கிழார், குறுந். 112 : 1, 2      
பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு அஞ்சினால், காமம் மெலியும் பிறர் இகழ்ச்சிக்காகக் காமத்தை விட்டால், என்னிடம் எஞ்சியிருப்பது நாணம் மட்டுமே என்றாள் தலைவி.
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே
                                              பரணர், குறுந். 120 : 1, 2           
நெஞ்சே, பொருள் இல்லாதவன் இன்பம் அடைய விரும்பினால் போன்று, பெறுதற்கு அரியதை விரும்புகிறாயே.
...காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அறியள் ஆகுதல் அறியாதோயே
                        பரணர், குறுந். 120: 3,4              
நெஞ்சே, காதலி நல்லவள் என்பதை அறிந்த நீ, அவளை எளிதாக அடைய முடியாது என்பதையும் அறியாது போயினையே.

ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
                        பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந். 124 : 2 – 4    
குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்ற முடைய  ஓமை மரங்கள் வளர்ந்த காடு துன்பம் தரத்தக்கது என்று சொல்கின்றீர்,  தலைவரைப் பிரிந்து தனிமையில் வாடும் மகளிர்க்கு வீடு இன்பம் உடையதோ ?

இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ
                                      ஒக்கூர் மாசாத்தியார், குறுந். 126 : 1, 2          
தலைவர், மீட்டெடுக்க முடியாத இளமைப் பருவத்தைப் பாராமல் பொருள் தேடிச் சென்றார், அவர் இங்கு வரவில்லை, எங்கு இருக்கின்றாரோ ?
.
உரம் செத்தும் உளனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே
                உறையூர் முதுகண்ணன் சாத்தனார், குறுந். 133 : 4, 5 
தலைவன், என் பெண்மை நலத்தை நுகர்ந்த பின்பும் தனிமையில்  இருந்து, என் உடல் வலிமை அழிந்து, இன்னும் உயிருடன் இருக்கின்றேனே.

வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
                               பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந். 135 : 1, 2    
இல்லறக் கடைமை ஆடவர்க்கு உயிர் போன்றது; இல்லத் தலைவிக்குக் கணவர் உயிர் போன்றவர்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே
                              மிளைப் பெருங்கந்தன், குறுந். 136 : 1 – 3            
காமம், காமம் என்று இழிவுடைய பொருள் போல் பேசுவர், காமம் வருத்தும் நோயன்று, சிறுத்தும் பெருத்தும் தணிந்தும் அமைவதும் இல்லை
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக
                   பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந். 137 : 3, 4              
இரவலர் வாராத நாள்கள் பல ஆகுக.

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
ஆறு செல் மாக்கள் புள்கொள பொருந்தும்
                                 அள்ளூர் நன்முல்லையார், குறுந். 140 : 1, 2     
கருக்கரிவாள் போன்ற முதுகை உடைய முதிர்ந்த ஆண் ஓணான், வழியில் செல்லும் மக்கள் நிமித்தம் பார்க்க உதவும்.
நில்லாமையே நிலையிற்று
           மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார், குறுந். 143 : 3   
இவ்வுலகத்தில், நில்லாது அழியும் தன்மையே நிலைபெற்றது.

                                     …………………… தொடரும்

1 கருத்து: