புதன், 17 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -38 -41

அகநானூறு – அரிய செய்தி -38

பங்குனி உத்தர விழா  - திருவரங்கம்
வென்று எறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
வருபுனல் நெரிதரும் இருகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே.......
                                 - உறையூர் முதுகூத்தனார்,அகம். 137::4-12)
உரை:- உறையூர், பகைவர்களை வென்று அடிக்கின்ற வீர முரசினையும் போர் வெற்றியையும்  இனிய கள்ளினையுடைய கரும்பு மிக்கதும் உடையது சோழரது ஊராகும்.அவ்வூரிடத்தே பெருகிவரும் நீர் உடைத்திட , இடிந்து விழும் கரைகளையுடைய காவிரிப் பேரியாற்றின் அழகிய வெண்மையான மணலையுடைய மணங் கமழுகின்ற குளிர்ச்சி பொருந்திய சோலையில் உத்தரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில், பங்குனி உத்தர விழா நடைபெறும்.
அவ்விழாவின் மறுநாளில் பூக்களும் சிலைகளும் நெருங்கின மரங்கள் அடர்ந்த குறுங்காட்டின் நடுவேயுள்ள நெருப்பில்லாத வெற்றுஅடுப்புகளையுடைய (திரு) அரங்கம் போல, உன்னுடைய நெற்றியானது அழகு இழந்து....
குறிப்பு:- இப்பாடலாசிரியர் காலத்துத் திருவரங்கம் ஓர் ஊராகக் கருதப்படாது அகன்ற பொழில் சூழ்ந்த ஆற்றிடைக்குறையாகக் கருதப்பட்டது (இருந்தது) எனலாம். குறுங்காடு மண்டிய அவ்வாற்றிடைக்குறையில் உறையூர் மக்கள் பங்குனி உத்தர விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவர்.மக்கள் ஒன்றுகூடி விடியுமளவும் விழாக்கோலம் பூணுவர், யாண்டும் அடுப்புகள் அமைத்துத் தீமூட்டி உணவு சமைத்து உண்டு களித்து இன்பம் எய்துவர், மறுநாள் மக்கள் நடமாட்டம் இன்றி, அடுப்புகளிலும் தீயின்றி அவ்வரங்கம் அழகிழந்து பொலிவற்று வறிதே வெறிச்சோடி காணப்படும்.

அகநானூறு – அரிய செய்தி -39

மழை பொழிதல்
துஞ்சுவது போல இருளி விண்பக
இமைப்பதுபோல மின்னி உறைக்கொண்டு
ஏறுவதுபோலப் பாடு சிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர்தளி பொழிந்த வார் பெயல் கடைநாள்
                                       இடைக்காடனார், அகநா. 139 : 1- 5

கார்காலத்தின் கடைநாளில் நீர்கொண்ட மேகம் உறங்குவது போல இருண்டு வானம் பனிக்கும்படி மின்னியது; நீரை முகந்து கொண்டு மேலே எழும்புவது போல முழங்கிச் சிறந்து திசையெல்லாம் உலாவிப் பரந்தது; நிலமகளின் நெஞ்சு அஞ்சுமாறு இடைவிடாது இடித்து மிக்க நீரை மழையாகப் பொழிந்த்து.
மூதாய்= தம்பலப்பூச்சி / இந்திர கோபம்.
அகநானூறு – அரிய செய்தி -40
                                                                       பண்டமாற்று
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
..........................................................
................ உமணர் காதல் மடமகள்
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாறு கூறலின் .......
                                          அம்மூவனார், அகநா. 140 : 1-3,5-7
 பரதவ மக்கள் – உப்பங்கழியில்- உழாமல் விளையும் உப்பு – வணிகர் – உப்பினைப் பெறுவர்- வணிகர் இளையமகள் – வெண்ணிறக் கல் உப்பு நெல்லுக்கு ஒத்த அளவினதே எனச் சேரியின்கண் பண்ட மாற்றாக விலை கூறுவாள்.

அகநானூறு – அரிய செய்தி -41

                                                 புதுமணப்பெண்
துவரப் புலர்ந்து தூமலர் கஞலி
தரம் நாறும் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும் ......
                                                         நக்கீரர், அகநா.141 : 12-18
 புலர்ந்து-நறுமண மலர் – மணங்கமழும் கூந்தல்-திருமண வீட்டில் – பலகொண்டைகளை உடைய அடுப்பில் – பாலை உலையாக் – இளம்பெண்களுடன் கூடி-நெற்கதிர் முறித்து -  கரிய உலக்கை – பசிய அவலை இடிப்பாள்- மேலும் காண்க: அகம். 86, 136


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக