கலித்தொகை – பொன்மொழிகள் – பகுதி -1
(நூற்குறிப்பு - 41
செவ்விலக்கிய நூல்கள் கட்டுரையி காண்க)
பாலைக்கலி – பாலைபாடிய
பெருங்கடுங்கோ
மேல் நின்று மெய்கூறும் கேளிர் போல் நீ செல்லும்
கானம் தகைப்ப செலவு
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 3: 21, 22
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ
ஒழிக இனி பெரும நின் பொருட்பிணிச் செலவே
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 4: 24 – 26
தலைவ ! தலைவி
கலங்கிய நெஞ்சுடையள் ஆயினள், ஒரு நாள் பொழுது நின்னைப் பிரியினும் உயிர் வாழ்வாளோ ? வாழாள் ஆதலின் பொருள் கருதிப்
பிரியும் நின் செலவைத் தவிர்ப்பாயாக.
ஓர் இரா வைகலுள் தாமரைப்
பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ
பாலைபாடிய
பெருங்கடுங்கோ,கலித். 5: 14, 15
தலைவனே !
நீரினின்று நீக்கப்பட்ட தாமரை மலர் போல்
ஓர் இராப் பொழுதேனும் நீ பிரிவையாயின் இவள் உயிர் வாழ்வாளோ?
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 6: 10, 11
நெடுந்தகாய் !
அன்பு நீங்குமாறு எம்மைவிடுத்துப் பிரிந்து செல்லக் கருதாமல் நீவிர் செல்லும் வழியிடை
நும்முடைய துன்பத்திற்குத் துணையாக எம்மையும் அழைத்துச் செல்வீராயின்
அதுவன்றி எமக்கு வேறு இன்பம் உண்டோ ?
இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 7: 20, 21
தலைவனே ! பொருள் ஈட்டக் கருதிச் செல்லும் தேயத்து
நீ, முயன்று ஈட்டும் பொருள் இன்பம் தரலாம் ஆயின் நின் பிரிவால்
இழந்த இவளின் இனிய உயிரை மீட்டுத் தருமோ ?
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலைப் பிரியா ஆறும் மற்றதுவே
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 9 : 22 – 25
தாயே ! விரும்பிய காதலனொடு சென்ற கற்பிற் சிறந்தாளை எண்ணிக்
கலங்காதீர்; சிறந்தானைத் தேர்ந்து அவன்
பின்னே சென்றனள்; அறங்களுள் சிறந்த இல்லறத்திற்குரிய வழியும் அதுவே.
இன்னிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 11: 16, 17
கொடுமையான
காட்டிடத்தே இனிய நிழல் இன்மையால் வருந்திய
பெண்மானுக்குக் கலைமான் தன்னுடைய நிழலைக் கொடுத்து உயிரைக் காக்கும் எனவு
உரைத்தனரே.
பல்லியும் பாங்கு
ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும்
ஆடுமால் இடனே
பாலைபாடிய
பெருங்கடுங்கோ,கலித். 11: 21, 22
இளமையும் காமமும்
நின்பாணி நில்லா
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 12: 12
இளமையும் காமமும்
நின் கையகத்து நில்லாதாகி
நாள்தோறும் கழியும்
கடை நாள் இது என்று
அறிந்தாரும் இல்லை
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 12: 15
இறக்கும் நாள்
இதுவென்று அறிந்தவர் எவரும் இலர்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு
மாற்றுமைக் கொண்ட வழி
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 12: 18, 19
தலைவ! நீ,
தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார் வழியே
செல்லாமல் அவ்வழியினின்றும் மாறுபட்ட நன்மக்கள் வழியினை நினக்கு வழியாகப்
பேணுவாயாக.
செம்மையின்
இகந்தொரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும்
மறுமையும் பகையாவது அறியாயோ
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 13: 14, 15
அற
வழியினின்று மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும்
பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை
அறிந்திலையோ ?
வறன் ஓடின் வையகத்து
வான்தரும் கற்பினாள்
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 16: 20
வறட்சி
மிகுந்து உயிர்கள் துயறுற்ற காலத்து மழை பெய்விக்கும் ஆற்றலுடைய கற்புடையாள்.
நீள் கதிர் அவிர்மதி நிறைவு போல் நிலையாது
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 17: 7, 8
நீண்ட கதிரினை
உடைய ஒளி வீசும் முழுமதி நாளும் தேயுமாறு போல நாளும் இளமையும் இன்பமும் கெடாது உடன்
நிலைத்து நிற்குமோ ?
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை …
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 18: 10, 11
ஒன்றன் கூறாகிய
ஆடையை உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் கவலையுறாது ஒன்றிக் கலந்து
பிரியாது இருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை.
கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 21: 10, 11
பொருள் தனக்கு
உரியர் இன்னார் என்று கருதாமல் அவரவர்க்குரிய பழைய நல்வினையாலேஅவரவரிடத்து மீண்டும்
மீண்டும் சென்று தங்கும் இயல்புடையது.
உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை …
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 22: 1 – 3
பிறரிடம்
இருந்து இரந்து பொருள்கொள்ள விழையும் பொழுது முகம் மலர்ந்திருத்தலும் கொண்டதைத் திருப்பிக்
கொடுக்கும் பொழுது முகம் வேறாதலும் பண்டுதொட்டே இவ்வுலகத்தில் உள்ளார் இயல்பு
ஆகும்.
தாய் உயிர்
பெய்த பாவை போல
நலன்
உடையார் மொழிக்கண் தாவார் ...
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 22: 5, 6
ஓவியன் தான்
உயிர்ப்புக் கொடுத்த பாவை தான் அழியுமளவும் அழகுடன் நிற்குமாறு போல நற்குணமுடையார்
சொன்ன சொல் தவறார்; பிறழ்ந்து பேசார்.
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள்நீர் உண்ட குடை ஓரன்னர்
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 23: 8, 9
கணவரால்
துய்க்கப்பெற்றுப் பின் அவரால் கைவிடப்பட்ட மகளிர், வேட்கையாலே பதனீர் அருந்தி, எச்சிலாற் பயன்படாது தூக்கி எறியப்பட்ட பனங்குடை ஒப்பர்.
துளி மாறு பொழுதின் இவ் உலகம் போலும் நின்
அளி மாறு பொழுதின் இவ் ஆயிழை கவினே
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித்.
25: 28, 29
மழை பெய்யாது இவ்வுலகம்
கெடுமாறு போல நின் அரவணைப்பு இன்றேல் இவள் அழகு கெட்டழிந்துவிடும்.
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 27: 1, 2
கொடுத்தலில் சிறிதும்
குறைவு காட்டாது அறநெறிகளை நன்குணர்ந்து ஒழுகும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகித்
தழைப்பதைப் போல இனிய நீரை உடைய ஆற்றின் இரு கரைகளிலும் மரங்கள் தழைத்துப் பூத்துக்
குலுங்கின.
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் …
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 34: 4, 5
முன்பு தனக்கு
ஒருவர் செய்த உதவியைப் பின்பு அவர் வறுமையுற்ற காலத்தே மறக்காது செய்வர் நல்லோர்.
கரி பொய்த்தான்
கீழ் இருந்த மரம்போலக் கவின் வாடி
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 34: 10
பொய்ச் சான்று
சொன்னவன் கீழே
தங்கியதனால் பட்டுப்போன மரம்.
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ
பாலைபாடிய பெருங்கடுங்கோ,கலித். 35: 17, 18
நிலத்தில்
உள்ளார் நாவிலே வழங்கும் நீண்ட மாடங்களை உடைய மதுரை நகரில் அறிவினை உடைய சான்றோர்
நாவில் பிறந்த கவிதைகளின் புதுமையை நுகரும்
இளவேனில் காலமல்லவோ இது.
அடுத்து – குறிஞ்சிக்கலி……..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக