சோதிடம்
உண்மையா….? பகுதி- 2
சோதிடம் உண்மையா ?
உண்மையென்றே சிலர் கூறுகின்றனர்;
அதற்கானசான்றுகலையும் தருகின்றனர். கோள்களின் இயக்கங்களை அனுமானமாக அறிந்த காலத்தில்
சோதிடம் வகுக்கப்பட்டது. அனுமானங்களில் அறிவியலுக்குப் புறம்பான செய்திகள் இடம் பெறவும்
வாய்ப்புண்டு.
வானநூற்கருத்துக்கள் ஆரியபட்டர்- வராகிமிகிரர் சித்தாதங்களிலேதான் (கி.பி. 400 – 850) முழு வளர்ச்சி
அடைந்துள்ளன. (வராகிமிகிரர் கி.பி. 3 எனவும் கூறுவர்)
“ நட்சத்திரங்கள் பல கூட்டங்களாக
அமைந்து விளங்குகின்றன. ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பெயர் பெறுகின்றது. அசுவனி முதல்
ரேவதி ஈறாக உள்ள 27 நட்சத்திரக் கூட்டங்களில் பல நட்சத்திரத் தொகுதிகளைக் காணலாம்.
விசாகம் ஆறு நட்சத்திரங்களையும் கேட்டை நான்கு நட்சத்திரங்களையும் திருவாதிரை மாத்திரம்
ஒரு நட்சத்திரத்தையும் கொண்டுள்ளது. இந்த 27 நட்சத்திரங்களும் சூரியனைச் சுற்றி ஒரு
நீள் வட்டத்தில் அமைந்துள்ளதைப் போலத் தோன்றுகின்றன. இவ்வமைப்பையே மேசம் முதல் மீனம் ஈறாகவுள்ள 12 ராசிகளாகப் பகுத்துள்ளனர்.
இப்பன்னிரண்டு ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்கள் எனில் ஒரு ராசிக்கு 2 1/4 நட்சத்திரங்களாகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திடனும்
சூரியன் சற்றேறக்குறைய 13 ½ நாட்கள் வசித்து வருகிறான். ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
சூரியன் செல்லும் காலங்களுக்கேற்பப் பலன்கள் உண்டு எனக் கூறுவர். 27 நட்சத்திரங்களுக்கும்
வடிவங்கள் உண்டு இவை வானத்தின் நடுவே வரும் பொழுது உச்ச நிலை பெறுகின்றன.
மேசம் முதல் மீனம் ஈறாகவுள்ள 12 ராசிகளின் பெயர்களும்
வேற்றுநாட்டவரால் இடப்பட்டவை. அவற்றை அப்படியே எடுத்தாளுகிறார் வராகமிகிரர். இப்பன்னிரண்டு
ராசிகளுக்கும் குரூரம் செளம்யம் ஆண் பெண் சரம்ஸ்திரம் உபயம். ஆட்சித் திக்கு ஓரை திரேஷ்காணம்
முதலியவற்றை முறைப்படி வகுத்துக் கிரகங்களின் உச்ச நீச வீடுகளை அடிப்படையாகக் கொண்டு
சோதிடம் கணிக்கப்படுகிறது என்கிறது சோதிடத் தத்துவம். மேலும் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி முப்பது வருடத்திற்கு
ஒருமுறை ஓடி வருகையில் சூரிய வீதியில் 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் 2 ½ வருடங்கள் தங்குவதுபோல்
தோன்றுகிறது. சூரிய வீதியில் உள்ள அசுவனி முதல் ரேவதி ஈறாகவுள்ள நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும்
நான்கு நான்காகப் பிரிக்க அவை 108 பிரிவாகும் இவற்றில் ஒன்பது ஒன்பது பிரிவுகளை ஒவ்வொரு
வீடாக்க 12 வீடுகள்வரும். இவையே மேசம்முதலான 12 ராசிகளாகும். சனி- சூரிய வீதியில் ஒவ்வொரு
நட்சத்திரத்தின் அருகில் இருக்கும் பொழுது ஒவ்வொரு வகையான பலன் அளிப்பான் என்று நம்பினர்.சில
நிகழ்ச்சிகள் உலகத்திற்கே பெருந்தீங்கு விளைவிப்பன எனவும் நம்பினர். மகம் என்னும் நட்சத்திரம்
சிங்க ராசியில் இருக்கிறது. மகத்தில் சனி ஓடும்போழுது பெருந்தீங்கு விளையும் எனவும்
கருதினர். தமிழ் இலக்கியங்களில் சனி – கரியவன் என்றும் மைம்மீன் என்றும் குறிக்கப்படுகின்றன.
சனிக் கிரகம் சூரியனுக்கு வெகுதொலைவில் இருப்பதால் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளியில்
நூறில் ஒரு பங்கே அதற்குக் கிடைக்கிறது. எனவே சனியைக் கரியவன் என்றனர்.
இலக்கியச் சான்றுகள்
சூரிய வழிபாடு தமிழர்களின் தொன்மை வழிபாடாகும். சூரியனின்
முதன்மையும் மேன்மையும் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை எனலாம். சூரியனை முதன்மையாகக்
கொண்ட வான் மண்டலத்தைத் தமிழர்கள் அறிவியல் கண் கொண்டு அளந்தறிந்துள்ளனர் என்பதற்குப்
பழந்தமிழ் இலக்கியங்களில் நிறையச் சான்றுகள் உள்ளன. வானியல் நிகழ்வுகள் வாழ்க்கையிலும்
விளைவுகளை ஏற்படுத்தும் என்று தமிழர்கள் சிலரும் நம்பினர். ”தென்னாட்டிலே புலீசனால்
இயற்றப்பெற்ற வான சாத்திரம் முன்னம் இருந்தது என்பதை வராகிமிகிரர் நூலால் அறிகிறோம்.
புலீச சித்தாந்தமாகிய வாக்கிய – செளரமான காலத்தை விடாமற் பற்றி வருதலாலும்- நட்சத்திரம்
– கிரகம் இவைகளின் பெயர்களைத் தமிழ்ச் சொற்களாலேயே வழங்கி வருதலாலும் நெடுங்காலமாகவே
தமிழ் மக்கள் வானக் கணிதத்தை அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.”
புறநானூறு 229 ஆம் பாடல் சோதிடக் குறிப்புகளைக்
கொண்டிருக்கிறது. கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென
அஞ்சி அவன் துஞ்சிய விடத்துக் கூடலூர் கிழார் பாடியது. “ ஆடியலழற் குட்டத்து………………
எனத் தொடங்கும் இப்பாடலின் பொருளாவது-
“ மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளின் நிறைந்த
இருளையுடைய பாதியிரவின்கண் முடப்பனை போலும் வடிவுடைய அனுட நாளின் அடியின் வெள்ளி (
முதல் நட்சத்திரம்) முதலாகக் கயமாகிய குள வடிவு போலும்வடிவுடைய புனர்பூசத்துக் கடையின்
– வெள்ளி எல்லையாக விளங்கப் பங்குனி மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம்
அவ்விச்சியினின்றும் சாய அதற்கு எட்டாம் மீனாகிய மூலம் அதற்கெதிரே எழா நிற்க
- அந்த உத்தரத்திற்கு முன் ச் எல்லப்பட்ட எட்டாம்
மீனாகிய மிருகசீரிடமாகிய நட்சத்திரம் துறையிடத்தே தாழக் கீழ் திசையிற் போகாது கடலாற்
சூழப்பட்ட பூமிக்கு விளக்காக முழங்கா நின்ற தீப்பரக்கக் காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து
ஒரு மீன் வீழுந்தது. வானத்தினின்றும் அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய இரவலர் பலரும்
நல்ல மலை நாட்டுக்கு வேந்தனாகியவன் நோயையுடையன்னல்லனாகாப் பெறின் அழகிதென இரங்கிய நெஞ்சத்துடனே
மடிந்தவுள்ளம் பரப்ப யாம் அஞ்சினோம்; அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று அவன்
தேவருலகத்தை அடைந்தான்.”
ஒரு
விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு மாந்தரஞ்சேரலிரும்பொறை இன்ன நாளில் இறப்பான் என்று முன்பே
கணித்து அவ்வாறே அவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடினார் இப்புலவர்.
இராமனின் கிரக நிலை
ஆதிகாவிய நாயகன் இராமனின் ஜாதகம்
சோதிடப் பலன் கூறுகிறது. தெய்வங்களையே சோதிடம் ஆட்டிப்படைக்கும்போது… மனிதர்கள்..?
இராவணன் புரிந்த கடும் போரில்
இராமன் நிலை குலைந்தான். இராமன் தோற்றனன் என்ற அச்சத்தால் அமரரும் கலக்கம் எய்தினர்.
இராமனுக்கு இந்நிலை கிரகத்தால் வந்ததாம்-
விசைகொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசனென மேருவும் குலுக்கம்
உற்றதே
– என்கிறார் கம்பர். இனி இந்தக் கிரகப் பீடையின் விளக்கத்தைக் காண்போம்…..
“ விசாக நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக
ராசியின் முதற் பாகமாம். அந்த ராசி மண்டலம் செவ்வாய்க்கு ஆட்சி நிலையம் துலா லக்கினத்தைக்
கடந்து விருச்சிகத்தின் முன் பாகமாகிய விசாகத்தில் செவ்வாய்க் கிரகம் ஏறும்போது விரைந்து
செல்வான்; சொந்த வீடு ஆதலால் அந்தவாறு ”விசை கொடு” விரைந்து தாவுகிறான். அவ்வாறு விசாக
பாகத்தில் தாவுங்கால் அந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள அரசர்க்கு அழிவு நேரும் என்பது
கிரகவிதி. இட்சுவாகு மன்னன் விசாக நாளில் பிறந்தவன் ஆதலால் அந்த நட்சத்திரம் அவனுடைய
மரபினர்க்கு உறவிரிமையாய் வந்தது. குசன் அதில் ஏறிய போது இராமனுக்கு என்ன நேருமோ என்று
அனைவரும் கலங்கினர். ( குசன் என்பது செவ்வாய்க் கிரகத்தை – இக்கிரகத்திற்குரிய வேறு
பெயர்கள் பதினொன்று என்று பிங்கல முனிவர் குறித்துள்ளார்) ஒருவனுக்கு சென்ம நட்சத்திரத்தில்
செவ்வாய் சேர்ந்தால் அவனுக்குப் பீடை உண்டாம் என்பது சோதிட விதி.
ஆருணியின் மரணக் குறிப்பு
பாஞ்சால தேசத்து அரசனான
ஆருணி என்பான் உதயண மன்னனோடு போரிட நேர்ந்தபோது செவ்வாய் விசாகம் சேர்ந்த நிலையைக்
கொங்குவேளிர் குறித்துள்ளார்.
பெய்கழல் ஆருணி பிறந்த நாளுள்
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க
ஆற்றலசான்ற அடல்வேல் ஆருணி
ஏற்றோர் யாவர் என்று போருக்கு அழைக்க
இன்னா மன்ன நின்னுயிர் உணீஇய வந்தெனன்
என்றே உதயணன் வந்தான்…………. என்பார். ………… தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக