வெள்ளி, 5 ஜூன், 2015

குறிஞ்சிக்கலி - கபிலர்

குறிஞ்சிக்கலி - கபிலர்
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள்
                                                                  கபிலர், கலித். 38: 15
தலைவன் பிரிவால் வாடும் தலைவி, கைப்பொருள் இல்லாதவனின்  இளமை போலப் பொலிவு இழந்து காணப்பட்டாள்.
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள்
                                                                   கபிலர், கலித். 38: 19
தலைவன் பிரிவால் வாடும் தலைவி, அறநெறியைச் சார்ந்து ஒழுகாது வறிதே முதுமை அடைந்தவன் போலப் பொலிவிழந்து நின்றனள்.                                         
அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
                                                                   கபிலர், கலித். 39: 6
அரிய மழைபொழிய வேண்டின் அதனை உடன் தரக்கூடிய கற்பின் பெருமை உடையவள்.
குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழிலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
                                                                   கபிலர், கலித். 39: 15 – 17
குறவர் மகளிர் என்றும் பிழை செய்யார்; தம் கணவரைத் தெய்வமென்று போற்றித் தொழுதெழும் பண்புடையர்; இதனால்  அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையவர் ஆயினர்.
பெண்டிர் நலம் வெளவி தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை
                                                               கபிலர், கலித். 40: 24, 25
மலைச்சாரலிடத்து தேன் உண்ட வண்டினம் மீண்டும் அம்மலரைத் தேடாது வேறொரு மலரை நாடிச்செல்லும் ; அவ்வண்டு போலப் பெண்டிர் நலத்தை நுகர்ந்து அவர் வாடுமாறு பிரிந்துசென்றனன் மலைநாடன் .                          
குன்று அகல் நல்நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீ தோன்றியற்று
                                                             கபிலர், கலித். 41: 23, 24
மலைநாடன் கூறிய வாய்மையில் பொய் தோன்றுமாயின் அது நிலவில் தீத் தோன்றியது போன்றதாகும்.
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத்
தேர் ஈனும் வண் கையவன்
                                                      கபிலர், கலித். 42: 20, 21
தோழீ ! தலைவன்  தன் மலை நீரினும் மென்மைத் தன்மை உடையவன்தன்னை விரும்பி வந்தோர்க்கு தேரைக் கொடுக்கும் கைகளை உடையவன்.
ஞாயிற்று முன்னர் இருள் போல் மாய்ந்தது என்
ஆய் இழை மேனிப் பசப்பு
                                                      கபிலர், கலித். 42: 31, 32
தோழீ! தலைவனைக் கண்டதும்  என் மேனியில் படர்ந்திருந்த பசலை  ஞாயிற்றின் முன் இருள் போல் மறைந்ததே.
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்
தன் மெய் துறப்பான்
                                                              கபிலர், கலித். 43: 26, 27
தோழீ ! என் தலைவன், வறுமையா ல் வாடியோர் தன் இல்லாமையை   கூறுவாராயின் அவர்தம் வறுமையைப் போக்கி வளம் சேர்க்கும் தன்மையன் ; அங்ஙனம் அவன் ஆற்ற இயலாவிடில் தன் உடலையே துறக்கும் இயல்புடையவன்.
வலிமிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர்
                                                                கபிலர், கலித். 46: 7, 8
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
                                                              கபிலர், கலித். 47: 1, 2
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்
                                                                 கபிலர், கலித். 47: 3, 4
தோழீ ! தலைவன், சான்றோரை வழிபட்டு நின்று அப்பொருளை அறிந்தவன் போலத் தோன்றுவான்;  நல்லவர்களிடம் தோன்றும் மன அடக்கமும் உடையவன்.
,இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
                                                                     கபிலர், கலித். 47: 5, 6
தோழி ! தலைவன்,  வறியோர்களின் வறுமையைக் கொடையினால் போக்க வல்லவன் போல வளமையும் உடையவன்.
நீயே வளியின் இகல்மிகும் தேரும் களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை
                                                                 கபிலர், கலித். 50: 15 – 17
தலைவனே , காற்றினும் விரைந்து செல்லும்  தேரினையும் களிற்றையும் நின்னை நாடிவரும் புலவர்க்கு மழையைப் போல அருள் சிறந்து மகிழ்வுடன் வழங்குவதில் கை ஒழியாதவன்.

கடைக் கண்ணால்கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்
                                                    கபிலர், கலித். 51: 15, 16
தோழீ ! தலைவன் என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கித்  தன் மன மகிழ்ச்சியைக்  காதலில் கூட்டிப் புன்னகை புரிந்து சென்றான் அக் கள்வன் மகன்.
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்று கங்குலும் அரற்றாக்கால்
                                                         கபிலர், கலித். 53: 18, 19  
தலைவனே! நின் பிவால் தலைவி வருந்துகிறாள், நனவிலே அவள் அழகு கெடும்படி வந்து, நலிவைத்தந்து, நடுங்குதற்குக் காரணமான  வருத்தம் கனவிலே சற்றே மறைந்தாலும் இரவெல்லாம் ஆற்றாளாயினள்.
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர்
அல்லல் களைதக்க  கேளிருழைச் சென்று
சொல்லுதல் உற்று உரைக்கல்லாதவர்
                                                          கபிலர், கலித். 61: 2 - 4
அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்து வறுமையுற்ற பொழுது  தம்முடைய துன்பம் தீர்த்தற்குரிய தக்க உறவினரிடத்தே சென்று தம் குறையை  வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை முழுதும் சொல்ல இயலாது தவிப்பர்.
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆகுமோ ...
                                               கபிலர், கலித். 62: 7, 8
தமக்கு இனிதாய் இருக்கின்றது  என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிந்து செய்வது நன்றாகுமோ ?

                                          அடுத்து – மருதக் கலி……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக