ஞாயிறு, 21 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -71- 75

அகநானூறு – அரிய செய்தி -71     
                                                    ஆட்டனத்தி, ஆதிமந்தி
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன அத்தி நலன் நயந்து உரைஇ
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டி
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர் –                        
                                                    பரணர், அகம்222:  5 – 12
மிகுந்த அழகு -   திரண்ட தோள்  - முழவொலி – கழாஅர் ஊர் – பெரிய துறை- விழாவில் நடனம் – காவிரிப்பெண் அவன் அழகில் மயங்கி – கவர்ந்து சென்றாள் அவன் மனைவி ஆதிமந்தி கணவனைத் தேடி அலைந்தாள். மருதி என்பவள் கடலில் சென்று  ஆதிமந்திக்கு அவள் கணவனைக் காட்டி புலவர் பாடும் புகழ் பெற்றாள்.
அகநானூறு – அரிய செய்தி -72     
                                                       தூங்கல் – புலவர் யார் ?
தமிழ் அகப்படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை
தூங்கல் பாடிய ஓங்குபெரு நலிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர் தழும்பன் –
                                                                 நக்கீரர், அகம்.227 14- 17
மருங்கூர் பட்டினத் தலைவன் - -வலிமை, கொடை தமிழகம் முழுதும் பரவி – பிடி மிதித்ததால் வழுதுணங்காய் போன்ற தழும்பு- வழுதுணைத் தழும்பன்-  தூங்கல் ஓரியார் – நற் 60 ஆம் பாடியவர் – என்பர் இவர் வரலாறு அறியவும். – ஆய்க.
232 – வேங்கை பூத்தல் – திருமண நாள், வெறியாடுமிடத்தில் குரவை
அகநானூறு – அரிய செய்தி -73    

ஆடல்
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் 
                                                   -நற்சேந்தனார்,அகம். 232 6-10
மன்றத்தில் வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பது போல் பொன்போல் பூத்தன முதிய மகளிரொடு  குறவர்கள் குரவைக் கூத்து ஆடுவர்.
அகநானூறு – அரிய செய்தி -74   
                                                 சர்க்கரைப் பொங்கல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென் தினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொடு
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீம் சேற்றொடு
பாபெய் செந்நெல் பாசவல் பகுக்கும் –
                                                        தாயங்கண்ணனார், அகம்.237:8-13
தீயி சுட்ட  கொழுப்பு- கறி – தினைச்சோறு – முற்றிய கரும்புச் சாறு பாகு – பால்  - செந்நெல் பசிய அவல்.
அகநானூறு – அரிய செய்தி -75  
                           ஆண் புலி இரை கொள்ளும் முறை – வலப்பக்கம்
மான்றமை அறியா மரம்பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென
மடமான் வல்சி தரீஇய நடுநாள்
இருள்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த
பனை மருள் எருத்தின் பல்வரி இரும்போத்து
மடக்கண் ஆமான் மாதிரத்து அலற
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியலறை சிவப்ப ஈர்க்கும்            –
                                                        கபிலர், அகம். 238:1-9

மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டில், குட்டிகளை ஈன்று அவற்றுக்குப் பாதுகாவலாக அமைந்த குட்டிகளை ஈன்றதால் மிகு பசி கொண்ட பெண்புலிக்கு  இளைய மானை இரையாக க் கொண்டுவந்து தர வேண்டி (இரைதேடி வெகுதூரம் செல்லாது – டிஸ்கவரி) பனந்துண்டினைப் போன்ற கழுத்தினையும்  பலகோடுகளையும் உடைய ஆண்புலியானது நடு இரவில் இருள் சூழ்ந்த குகைகளையுடைய பக்க மலையில் இரைதேடிப் புறப்பட்டது, அப்புலியினைக் கண்ட  மட நோக்குடைய காட்டுப் பசு திசையெங்கும் கேட்குமாறு அலறியது  தலைமையுடைய காளையை  காட்டில் வலப்பக்கம் வீழுமாறு கொன்று , அகன்ற பாறைகள் குருதியால் சிவக்குமாறு இழுத்துச் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக