வெள்ளி, 5 ஜூன், 2015

நெய்தற்கலி - நல்லந்துவனார்

நெய்தற்கலி - நல்லந்துவனார்
வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல்லாற்றின் உயிர் காத்து நடுக்கற தான்செய்த
தொல்வினைப் பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தாற் போல
                                              நல்லந்துவனார்,கலித். 118:  1 – 3
பகையை வீரத்தாலும் ஒழுக்கத்தாலும் வெல்லுகின்ற புகழுடைய மன்னவன், நல்ல நெறிமுறைப்படி பல உயிர்களையும் நடுக்கமின்றிப் பேணிப் பாதுகாத்தனன்.தான் செய்த நல்வினையின் பயனைத் துய்ப்பதற்காகத் துறக்கம் விரும்பிச் சென்றதைப் போல.
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள்ளில் உள்ளம் உள்ளுள் உவந்தே
                                     நல்லந்துவனார்,கலித். 118:  24, 25
தலைவன் எம்மை நினையாது, உள்ளன்பு இல்லாத உள்ளத்துடன் இருக்கும் அவரை எண்ணி எண்ணி உவந்து உள்ளுகின்றது எம்முடைய நெஞ்சம்.
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச
                                     நல்லந்துவனார்,கலித். 119:  6
தம்மைப் பற்றிய புகழுரைகளைக் கேட்டு நாணிய சான்றோர் போல மரங்கள் தலை சாய்ந்து உறங்கின.
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை
                                        நல்லந்துவனார்,கலித். 125: 3, 4
தம் நெஞ்சு அறியவே   தாம் செய்த தீவினகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும் செய்வர்; ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சத்துக்கு மறைத்தல் இயலாது. நெஞ்சத்தைக் காட்டிலும் அணுக்கமான சாட்சி வேறில்லை.
நனவு எனப் புல்லுங்கால் காணாளாய், கண்டது
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே
                                    நல்லந்துவனார்,கலித். 126: 16, 17
தலைவனே ! நீ தன் தோள் மேல் தழுவிக் கிடந்ததாக நினைத்து அவளும் நின்னைத் தழுவ முயலும் பொழுது  நின்னைக் காணாதவளாக, கண்டது கனவே என்று அறிந்து துயறுற்றாள் தலைவி.
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனைவரை நின்றது என் அரும் பெறல் உயிரே
                                   நல்லந்துவனார்,கலித். 128: 24 – 26
தோழீ ! யான் காணும்படி என் கனவிலே வந்த தலைவன்  நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி அவன்  வரவை எதிநோக்கி என் அரிய உயிரும் நீங்காது நின்றது.
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் ...
                                                நல்லந்துவனார்,கலித். 129: 1, 2
பல உயிர்களைப் படைத்த முதல்வன்,  தொல் ஊழிக் காலத்தே அவ்வுயிர்களெல்லாம் தன்னிடத்தே தொகையாக வந்து ஒடுங்குதலைச் செய்வான்.   
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறை கோடலின் கொடிதே யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே
                                      நல்லந்துவனார்,கலித். 129: 23 – 25
 நின்னை விரும்பியவருடைய நெஞ்சம் அழிந்து கெடுமாறு அவரைக் கைவிட்டு விடுவது, ஒருவன் நோயால் வாட, அந்நோய் தீர்க்கும் மருந்தையும் அதன் திறத்தையும் அறிந்த ஒருவன், அம்மருந்தை அறியேன் என்று வஞ்சித்து மறைத்தலினும் கொடிது. 
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
புல் இருள் பரத்தரூஉம் புலம்புகொள் மருள் மாலை
                                           நல்லந்துவனார்,கலித். 130: 6, 7
கல்வி கற்காது முதுமை எய்தியவனின் அகக் கண் இல்லாத நெஞ்சம் போலத் தனித்து வருந்துவதற்குக் காரணமான மாலைக் காலம் நிரைந்த இருளை பரவச் செய்தது.
வழிபட்ட தெய்வம்தான் வலியெனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல
                                    நல்லந்துவனார்,கலித். 132: 21, 22
ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
                                          நல்லந்துவனார்,கலித். 133: 6
ஆற்றுதல் என்பது இல்லற வாழ்க்கையில் , வறுமையுற்றோர்க்கு உதவுதல்.
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
                                          நல்லந்துவனார்,கலித். 133:  7
போற்றுதல் என்பது நட்பாகக் கூடினாரைப் பிரியாதிருத்தல்
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
                                          நல்லந்துவனார்,கலித். 133: 8
 பண்பு எனப்படுவது உலகத்தோடு ஒட்ட ஒழுகல்.
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
                                          நல்லந்துவனார்,கலித். 133:  9
அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்
 அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
                                     நல்லந்துவனார்,கலித். 133: 10
அறிவு எனப்படுவது  அறியாதார் கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
                                         நல்லந்துவனார்,கலித். 133:  11
செறிவு எனப்படுவது சொன்ன சொல் தவறாதிருத்தல்
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
                                           நல்லந்துவனார்,கலித். 133: 12
நிறைவு எனப்படுவது மறை பிறர் அறியாது காத்தல்
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
                                         நல்லந்துவனார்,கலித். 133: 13
முறை எனப்படுவது குற்றம் புரிந்தார் எவராயினும்  குற்றத்திற்கேற்ப உயிரைப் பறித்தல்.
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
                                நல்லந்துவனார்,கலித். 133:  14
பொறை எனப்படுவது  போற்றாதவரிடமும் பகை கொள்ளாது பொறுமையோடு இருத்தல்.
நல்நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல்
                                  நல்லந்துவனார்,கலித். 133: 16, 17
தலைவனே ! தலைவியின்  அழகிய நலத்தை நுகர்ந்து, அவளைத் துறத்தல், சுவை மிகுந்த பாலை உண்டபின் பால் இருந்த கலத்தைக் கவிழ்த்து விடுதலைப் போன்றதாகும்.
கரை காணா பெளவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தரப் புணை பெற்று தீது இன்றி உய்தாங்கு
விரைவனர் காதலர் புகுதர
                                   நல்லந்துவனார்,கலித். 134: 24 – 26
நடுக்கடலிலே மரக்கலம் கெட்டு நீரில் மூழ்கியவனுக்கு அலைகள் ஒரு தெப்பத்தை கொண்டுவந்து தர அதில் ஏறி உயிர் பிழைத்ததைப் போல பிரிந்து சென்ற காதலன் விரைந்து வந்து தலைவியின் உயிரைக் காப்பாற்றினான்.
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்
                                       நல்லந்துவனார்,கலித். 137: 12
தோழீ ! தலைவனின்  பிரிவு என்னும் சொல் விரைந்து செல்லும் வில்லினும் கடியதாய் இருந்தது அவர் சொல்லினால் பிறந்த நோய்.
நிறை அழி காமநோய் நீந்தி அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல
உக்குவிடும் என் உயிர்
                                நல்லந்துவனார்,கலித். 138: 16 – 18
 தலைவி தந்த காம நோயை நீந்திக் கடக்க இயலாது, நிறை என்னும் குணம் அழிய வருந்தும் என் உயிர் உப்பால் ஆன பாவை மழைத் துளியில் கரைந்தாற் போன்று கரையலாயிற்று.                                                    
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ...
                                     நல்லந்துவனார்,கலித். 139: 2, 3
பிறருடைய நோயைத் தன் நோய் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம் கடமை ஆகும்.
வெஞ்சுழிப் பட்ட  மகற்குக் கரை நின்றார்
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் ...
                                   நல்லந்துவனார்,கலித். 140: 25, 26
கடிய நீர்ச் சுழலில் அகப்பட்ட ஒருவனைக் கரையில் நின்றோர் சென்று காப்பாற்றாமல் அஞ்சாதே என்று  கரையில் நின்று கூறினாலும் அவன் உயிர் பிழைத்தல் கூடும்.
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று
                                       நல்லந்துவனார்,கலித். 143: 20, 21
என் உயிரில் கலந்த   தலைவன் தீதின்றி உயிரோடு உள்ளான்;   அவன் உயிரோடு உளன் என்பதைஅவன் உயிரோடு ஒன்றிய  என் உயிர் காட்டாமல் இருக்குமா?
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத்தீ
நீருள் புகினும் சுடும்
                        நல்லந்துவனார்,கலித். 144: 61, 62
கடலே! கருணயில்லாத என் காதலன் என்னிடத்து உண்டாக்கிய இக்காமமாகிய நெருப்பு, நான் நீருள்ளே புகுந்து நின்றாலும் சுடுகின்றதே.
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றார் மருந்து
                                நல்லந்துவனார்,கலித். 145: 49, 50
திங்களே! மனக் கலக்கத்தைத் தருகின்ற காதலன் செய்த காம நோய்க்கு  உன்னைத் தவிர  அயலில் உள்ளார் எல்லாரும் அதற்கொரு மருந்தைத் தெளிவாகக் கூறார்.
இல்லவர் ஒழுக்கம் போல் இருங்கழி மலர் கூம்ப
                                        நல்லந்துவனார்,கலித். 148: 6
பொருள் இல்லாதார் நடத்தும் இல்லறம் போலக் கரிய கழியில் மலர்கள் கூம்பின.
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
                                               நல்லந்துவனார்,கலித். 149: 4, 5

கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியன் வறுமையுற்று வருந்தி இருக்கும் பொழுது தன் கைப் பொருளைப் பகிர்ந்து கைமாறாகக் கொடுத்து உண்ணாதவன் செல்வமும் தான் கற்ற வித்தையைத் தவறாகப் பயன்படுத்துபவனுடைய செல்வமும்  தாமாகவே தேய்ந்து அழியும்.
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்
                                            நல்லந்துவனார்,கலித். 149: 8, 9
உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக