திங்கள், 22 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -81-85

அகநானூறு – அரிய செய்தி -81  
ஆளி- யானையை வீழ்த்தும், ஆளி-யாளி-சிங்கம்
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ....
                                           நக்கண்ணையார், அகம். 252 : 1-4
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

 ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்......
                            மதுரை இளங்கெளசிகனார், அகநா. 381 : 1 – 4
ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த, அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.
ஆளி- சிங்கத்தில் ஒருவகை. ஒருத்தல் – ஆண் ஆளி. “ ஆளியானது யானைக் கொம்பைப் பறித்து உண்ணும் என்பது “ முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானைத் தலை நிலம் புரள வேண்டுகோடு உண்டதே போன்று” சீவக.: 2554: 1-2.
அமரா=வெறுத்த, கமம்=நிறைவு, கணம்=கூட்டம். திலகம்=பொட்டு
வினைநவில் குதிரை = போர்த்தொழில் பயிற்சி பெற்ற குதிரை –அகம் 254
மாக விசும்பு =   அகம் 253. மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடு (பரி 1: 4 ) பரிமேலழகர்.
அகநானூறு – அரிய செய்தி -82 

255- கலங்கரை விளக்கம்
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட                                   
 கோடு உயர் திணி மணல் அகந்துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
   மதுரை மருதன் இளநாகனார், அகம். 255 : 1-6
உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமான வீசும் இயல்புனதாய காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிட்த்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது.நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளி பொருந்திய விளக்கினால் செல்லும் இடம் அறிந்து செலுத்த .....
அகநானூறு – அரிய செய்தி -83  

256 – கற்பழிப்பு- தண்டனை-
கரும்பு அமல் படப்பை பெரும்பெயர்க் கள்ளூர்
திரு நுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
                           மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகம்.256 : 15 – 20
கரும்புத் தோட்டம் நிறைந்த கள்ளூர்- நெறிதவறிய  அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தினைக் கவர்ந்து உண்டான், பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன் பொய் உரைத்தான். அவர்தம் சேர்க்கையை அறிந்தார்வாய்க் கேட்டறிந்த அவையத்தார்  அவனைத் தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின்  மூன்று கவர்த்த கிளைகளின் நடுவே இறுகக் கட்டி வைத்து, அவன் தலையில் நீற்றினைசாம்பல்பெய்தனர்.
அகநானூறு – அரிய செய்தி -84 

257-யாமரப்பட்டை –யானை  - கரடி -  உணவு
பகைமிகு கவலைச் செல்நெறி காண்மார்
மிசை மரம் சேர்த்திய சுவைமுறி யாஅத்து
நார்அரை மருங்கின் நீர்வரப் பொளித்து
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும்
துன்புறு  தகுவன ஆங்கண் புன்கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே                            
               உறையூர் மருத்துவன் தாமோதரனார், அகம். 257 : 14 – 21
ஆறலை கள்வர் மிகுந்த கவர்த்த வழிகளில், பின்வரும் வழிப்போவார் தாம் செல்லுதற்குரிய வழி இதுவெனக் காணும் பொருட்டு, முன்செல்வார் யாமரத்தின் மேலே ஏணியைச்சார்த்தி விட்டுச் செல்வார். யானை, யாமரத்தின் அடிப் பகுதியில் நாரினை நீர் வருமாறு உரித்துச் சுவைத்துப் போட்ட சக்கையாகிய சிதைந்த மரப்பட்டைகள் , அவ்வழிவரும் கல்லா உப்பு வணிகர்களுக்குத் தீ மூட்டும் சுள்ளிகளாகப் பயன்படும்.துன்பம் மிகுந்த அவ்விடங்களில் இரவில் இரை பெற விரும்பிய கரடிக் குட்டிகள் சிறு தூறுகள் படர்ந்த புற்றின்கண், வெண்ணிறப் பாம்புகள் நெளியும் படியாகப் புற்றாஞ் சோற்றினை அகழ்ந்தெடுக்கும்.
அகநானூறு – அரிய செய்தி -85

258 – பொற்குவியல்
நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நற்கு அறிந்தும் அன்னோள்
                 பரணர், அகம். 258 : 1 -3

நன்னனாகிய உதியனது அரிய காவலையுடைய பாழிச் சிலம்பில் தொன்மைமிக்க வேளிர்கள் பாதுகாத்து வைத்திருந்த பொன்னைக் காட்டிலும் நம் தலைவி அடைதற்கு அரியவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக