அகநானூறு – அரிய செய்தி -76
செம்முக மந்தி
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கின் தாஅய் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும் –
காவன்முல்லைப்
பூதனார்,அகம்.241 : 13-15
பாலை வழியில் உள்ள
நெல்லி மரத்தின் வட்டமான கழங்குகளைப் போன்ற இனிய சுவைமிக்க காய்களைக்
கொண்டு, பஞ்சு போன்ற
மயிரினையுடைய தலையினையும் சிவந்த முகத்தினையும் உடைய
குரங்குகள் தாவிக்குதித்து விளையாடும். (
செம்முகமந்தி வாழிடம் எது )
அகநானூறு – அரிய செய்தி -77
தந்தம் –
கள் குடிக்க, ஒட்டகம்/பசி, வாழ்வு
வல்வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்குமனை வரைப்பில்
மகிழ் நொடை பெற அராகி நனை கவுள்
கான யானை வெண்கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புந்தலை நீவும்
……………………………………….
குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் –
மதுரை மருதன் இளநாகனார், அகம். 245 : 7- 12, 17, 18
ஆறலை கள்வர் தலைவர், இரவில் கோடுகள் விளங்கும் பருத்த தோள், தேமல் படர்ந்த
வயிறு – கள் விற்கும் பெண்கள் – வீட்டின்கண்
கள்ளிற்கு விலையாகக் கொடுப்பதற்குக் கைப் பொருள் வேறு இல்லையாக, தன் மனையிடத்து உள்ள காட்டு யானையின்வெண்ணிறக் கொம்புகளைச் சுட்டிக் காட்டி
அவற்றை எடுத்து வரும்படி அம்பலத்து ஆடித்திரியும் புதல்வனின் புல்லியத் தலையினைத் தடவி
ஏவுவார்,………………
குறிய பாறையிடத்து , விரைந்த நடையினை உடைய ஒட்டகத்தின் நிலைகொண்ட பசியினைப் போக்கும் சுள்ளி போன்ற
வெண்ணிற எலும்புகள் காய்ந்து கிடக்கும்… ( எலும்பு உணவாகுமா?
)
அகநானூறு – அரிய செய்தி -78
சங்கு-
புணர்ச்சி / 11 வேளிரை வென்றவன்
பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு ஆரல் களவன் ஆக
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் – 1-3
சருச்சரை பொருந்திய உடலினையும் பெரிய வாயினையும் உடைய ஆண் சங்கு, கதிர்நுனை போலும் மூக்கையுடைய ஆரல் மீன் சாட்சியாக ஆழமான நீரையுடைய
பொய்கையில் பெண் சங்கினொடு புணரும்.
……………………………………………
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய – 8-12 –
பரணர்,அகம்
246
அகம்
55 ஆம் பாடலில் கரிகாலனோடு வெண்ணியில் போர் புரிந்து புறப்புண் பட்ட நாணிய பெருஞ்சேரலாதன் சான்றோர் சிலருடன்
வடக்கிருந்து உயிர் நீத்தான்.. வெண்ணியில் பதினொரு வேளிருடன்
இருபெரும் வேந்தரும் போரிலே நிலைகுலைய
அவர்தம் வலிமை அழித்து வென்றான்.
அகநானூறு – அரிய செய்தி -79
வேட்டை நாய்
………………………………. அல்கல்
வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து –
1-4 கபிலர் அகம். 248
அஞ்சாமையுடைய ஆண்பன்றி வலிமைமிக்க வேட்டை நாயைச் சினந்து எதிர்த்து
விரட்டியது; தன்னை நோக்கி வேடர்கள் நெருங்கி வருதலைத் தடுத்து
நிறுத்தியது தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி வலிய குட்டிகளை அணைத்துக்கொண்டு தன்
இனத்துடன் தப்பிப் பிழைத்தது.
அகநானூறு – அரிய செய்தி -80
மலையை உடைத்து வழி அமைத்தல்
விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்தகன்றனர் ஆயினும் … உமட்டூர்கிழார் மகனார்
பரங்கொற்றனா -அகம். 69 :10-12
விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய
மோரியர், தங்கள் பொன்னாலியன்ற உருள் தடையின்றிச் செல்ல,
வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக் கடந்து சென்றாராயினும்…..
மாகெழுதானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் –
மாமூலனார்,அகம். 251 :12-14
குதிரைப் படையுடைய மோரியர்கள் அழகு செய்யப்பட்ட தம் தேரினது
சக்கரங்கள் தடையின்றிச் செல்லும் பொருட்டு மலைவழிகளில் உள்ள பாறைகளை உடைத்துப்
பாதையாக்கினர்; வெண்மையான அருவிகளைக் கொண்ட அத்தகைய பாறை வழிகள் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக