வியாழன், 4 ஜூன், 2015

பதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -1

      பதிற்றுப்பத்து  - பொன்மொழிகள் –part -1
  ( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் –கட்டுரையில் காண்க
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
                                         குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 11 : 23 – 25
ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள்
செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து  வென்றவனே. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )                                                     

மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது ,,,
                                              குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 12 : 8, 9
நினது( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) வீரத்தினால் விளைந்த பெரும் புகழை எல்லாத் திசைகளிலும் கேட்பது எமக்கு இனிதாக இருக்கின்றது.                                                                    
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது நின் பெருங் கலி மகிழ்வே
                                           குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 12 : 24, 25
நின்னொடு ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )மனம் பொருந்தி இயைந்திருக்கின்ற அமைச்சர் முதலிய அரசியல் சுற்றத்தாரோடு காட்சியளிக்கும் நின் திருவோலக்கச் சிறப்பு துய்த்தற்கு என்றும் இனிதாகும்.
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி
                                   குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 13 : 9, 10
புலவர்கள் சிறப்பித்துப் பாடுதற்குரிய பயன் நல்கும் பகைவர் ஊர்கள் பலவும்
நீ ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )சினந்து எடுத்த போரால்  அவற்றின் அழகு அழிந்து அச்சம் தரத் தக்கனவாயின.

மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
                                     குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 13 : 26 – 28
நின்( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) நாட்டில், மழை வேண்டுங் காலத்து மழை பொழிகிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லை. நின் நாடு பொலிவு பெற்று விளங்குகிறது.

நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே
                                            குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 14 : 1, 2
நிலத்தின் பரப்பு, நீரின் ஆழம்,காற்றின் வேகம்,வானத்தின் உயர்ச்சி ஆகியன அளத்தற்கு இயலா. அதுபோல அப்பண்புகள் அனைத்தும் கொண்ட உன்
 ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )பெருமையையும் யாராலும் அளப்பதற்கு அரிது.

நாள் கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை
                                       குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 14 : 3 – 5
வேந்தே ! ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) விண்மீன்கள், கோள்கள், திங்கள், கதிரவன், பெரும் தீ ஆகிய ஐந்தும் ஒருங்கு சேர்ந்தாற்போன்ற ஒளி பொருந்தியவன் ஆவாய்.
                                                       
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே
                                              குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 14 : 10
கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்கச்செய்யும் ஆற்றல் மிக்கவன் நீ. ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )

கடலக வரைப்பின் இப்பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇத்
தவாஅலியரோ இவ் உலகமோடு உடனே
                                     குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 14 : 19 – 21
கடலால் சூழப்பெற்ற இந்நிலவுலகம் முழுவதையும் ஆண்ட நின்( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) மரபில் உதித்த முன்னோர்கள் போல, நீயும் நிலைபெற்று நின்று, நின் கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து அப்புகழுடனே தாழ்வின்றி வாழ்வாயாக.

கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம் பல நிகழ்தரு நனந் தலை நல்நாட்டு
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
                                    குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 15 : 1618
கடல் , மலை , ஆறு என இவை தரும்
 பொருள்களும் பிற பல இடங்களிலிருந்தும் கிடைக்கும் செல்வங்களும் நிறைந்த
 உன்( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) நாட்டில்  உள்ள பழைய ஊர்கள் இன்னிசை ஒலிக்கின்ற விழாக்கள் இல்லாத நாட்களை அறியா.

நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு என
உண்டு உரை மாறிய மழலை நாவின்
மென் சொற் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த
                                   குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 15 : 2426
இவ்வுலகத்தோர் வாழும் பொருட்டு நீ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )
 வாழ்வாயாக எனக் கள்ளுண்டமையால் நாக் குழறப்பெற்று மழலைச் சொற்களைப் பேசும் பாணர்கள், யாழை மீட்டி நின்னை வாழ்த்துகின்றனர்.
ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
                                        குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 15 : 2931
உண்மையையே பேசி ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையினை உடைய சான்றோர், நரகம் அடைதலைத் தவிர்க்கும் ஆவலில் நற்செயல்களை ஆற்றுவர் ;  தாம் வாழும் ஊரினின்று நீங்குதலின்றி உன்( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )
 நாட்டில் வாழவே விரும்புவாராயினர்.
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
                                          குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 17 : 1
வேந்தே ! ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ) நின் பொறுமைக்கு ஒப்பதாகிய பொருள் ஒன்று உண்டோ என எண்ணின் ஒப்பாகின்ற வேறு ஒரு பொருள் எங்கும் இல்லை.


அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக இந்நிழல்
                                          குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 17 : 9, 10
உங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதற்குரிய இடத்தினைக் காணாது  திசைகளிலெல்லாம் சென்று தேடிய இப் பரந்த நிலவுலகில் உள்ள மக்களே,
 சேரலாதனின் குடை நிழலில் வந்து சேருவீராக.

பெற்றது உதவுமின் தப்பு இன்று பின்னும்
                                             குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 18 : 7
பரிசிலாகப் பெற்ற பொருள்களையும் பிறர்க்குக் கொடுங்கள் அதனால் பிற்காலத்தில் இழப்பு ஏதும் விளையாது.

மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே
                                          குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 18 : 11, 12
மழை பெய்யாது தவறினும்  சேரலாதன் பரிசில் தருவதில் தவறமாட்டான்.                                                                      
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும்
                                           குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 20 : 8 – 10
கண்ணால் மகிழ்ந்து பார்த்து உள்ளத்திலே வஞ்சக உணர்வு கொண்ட பகைவரிடத்தும் கனவினும் பொய் கூறுதலை அறியாதவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் .

வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ
                                   குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 20 : 14, 15
பரந்த நிலப்பரப்பினை உடைய பகைவர் நாட்டை வஞ்சியாது எதிர் நின்று வென்று, புலவர்கள் புகழ்ந்து பாடுமாறு புகழை நிலை நிறுத்தினாய். ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் )


எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
                       குமட்டூர்க் கண்ணனார், பதிற்றுப். 20 : 21 – 23
பரிசில் வேண்டி வரும் எம்மைப் போன்றவர்களுக்கும் பிறர்க்கும் பரிசில்பெற வருபவர்கள் கலைப் புலமை உடையவர்கள் இல்லை என்றாலும் கொடுத்தலாகிய  கடமையை மட்டும் நோக்கி யாவர்க்கும் கொடை அளிக்கும்  ஒருபாற் கோடாத நெஞ்சினை உடையவன்  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து
நோயில் மாந்தர்க்கு ஊழி ஆக
                                       பாலைக் கெளதமனார், பதிற்றுப்.  21 : 30, 31
உலக உயிர்கள் வாழப் பருவம் தவறாது மழை பெய்து வருதலால் நின் (பல்யானைச்செல்கெழுகுட்டுவன் ) நாட்டில் மக்கள் எல்லாரும் நோயின்றி வாழ்வாராக.
           வேய் உறழ் பணைத் தோள் இவளோடு
        ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே
                                    பாலைக் கெளதமனார், பதிற்றுப். 21 : 37, 38
வேந்தே ! (பல்யானைச்செல்கெழுகுட்டுவன் ) பருத்த அழகிய தோள்களை உடைய நின் மனைவியோடு நீ வெள்ளம் எனும் எண்ணிக்கை கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக.                        
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய்ச் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
                                       பாலைக் கெளதமனார், பதிற்றுப். 22 : 1 – 4
மிகுந்த சினமும்  மிகுந்த காமமும் அளவிறந்த கண்ணோட்டமும் பகைவர்க்கு அஞ்சுதலும் பொய் கூறலும் பொருளாசையும் அளவுக்கு மிஞ்சிய தண்டனை அளித்தலும் இவை போன்ற பிறவும் இவ்வுலகத்தில் அறவழியில் ஆட்சி செலுத்துதற்குரிய அரசனது ஆணைச் சக்கரத்திற்குத் தடையாக நிற்பன.
ஓதல் வேட்டல் அவை பிறர்ச்  செய்தல்
ஈதல் ஏற்றல்  என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர்
                                        பாலைக் கெளதமனார், பதிற்றுப். 24 : 6 – 8
ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், ஈதல், ஏற்றல்  என்று சொல்லப்பட்ட ஆறு தொழில்களையும் தவறாது செய்து அற வழி நிற்போர் அந்தணர்.
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்
அளந்து கடை அறியினும் அளப்பு அருங் குரையை ..,
                                             பாலைக் கெளதமனார், பதிற்றுப். 24 : 15, 16
நீரும் நிலமும் நெருப்பும் காற்றும் வானுமாகிய ஐந்தினையும் அளந்து அவற்றின் முடிவினை அறிந்தாலும் நீ, (பல்யானைச்செல்கெழுகுட்டுவன் ) நின் பெருமையால்  அளத்தற்கு அரியவன் ஆவாய்.
பூசல் அறியா நல் நாட்டு
யாணர் அறாஅக் காமரு கவினே
                                    பாலைக் கெளதமனார், பதிற்றுப். 27 : 15, 16
போர் ஆரவாரத்தினை அறியாததும் புது வருவாயினை இடையறாது உடையதும் ஆகிய அழகிய நல்ல நாடு.
இளை இனிது தந்து விளைவு முட்டுறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்
                                    பாலைக் கெளதமனார், பதிற்றுப். 28 : 4, 5
வேந்தே !  (பல்யானைச்செல்கெழுகுட்டுவன் ) நீ, நாட்டினை இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து குடிமக்கள் அனைவரும் பகை, பசி, பிணி என்னும் துன்பங்கள் இன்றி அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை.
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே ...
                              காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப். 31 : 21 – 23
வெள்ளிய அலைகளை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் கொடையால் வரும் புகழை நிலை நிறுத்தியவனும் பல்வகைச் செல்வங்களைக் கொண்டவனுமாகிய வண்டன் என்ற கொடைவள்ளலைப் போன்றவன் நீ. (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் )
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர்ச் செல்வி
                                காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப். 31: 27, 28
வானுலகில் திரியும் தெய்வப் பெண்களுக்குள் சிறந்த அருந்ததியை ஒத்தவள் நின் (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ) மனைவி.    

உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப் பல செய்குவை வாழ்க நின் வளனே
                         காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப். 36 : 12 – 15
போர்க் களத்தில் நின்னால் (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ) வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் பிணங்களைப் பேய்கள் உண்டு  மகிழ்ந்து  ஆட, குருதி செந்நீராய் ஓட, பல போர்களைச் செய்வாயாக,  நின் செல்வம் நிலைத்து வாழ்வதாக.
உலகத்தோரே பலர்மன் செல்வர்
எல்லாருள்ளும் நின் நல்லிசை மிகுமே
                           காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப். 38 : 1, 2
உலகத்தோரில் செல்வம் படைத்தோர் பலர்; அவர்தம் புகழ்  தோன்றாமல் மறைந்தது; அவர் அனைவருள்ளும் நின்(களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் )  நல்ல புகழ் மேம்பட்டுத் தோன்றுமே.
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர்
                              காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப். 39 : 1, 2
நீ(களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ) பிறர்க்கென்றே வாழ்கின்றாய் ஆதலால் நின்னுடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் நின் படை வீரர்களிடம் யாம் சென்று இரப்பின்,  எமக்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின்
தொலையாக் கற்ப
                                                   பரணர், பதிற்றுப். 43 : 29 – 31
போர்த் தொழிலை விரும்பிச் செய்கின்றவன் நீ, (கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் )
அதனால் பகைவர்களும் மனம் அடங்காமற் புகழலாயினர். அழியாத கல்வியை உடையோய், வாழ்க நின் கொற்றம்.
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
                                                       பரணர், பதிற்றுப். 44 : 3, 4
 வேந்தே ! (கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ) பெருமை உடையவை என்றாலும்  போரில் வஞ்சனை செய்யாது எதிர்நின்று பெற்ற பொருட்களைக் கிடைத்தற்கு அரியன என்று கருதி அவற்றைத் தனக்கெனப் பேணிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளமாட்டாய், பிறருக்கெல்லாம் வழங்குவாய். 
கலம் செலச் சுரத்தல் அல்லது கனவினும்
களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல்
                                                            பரணர், பதிற்றுப். 44 : 5 – 7
பரிசில் வேண்டி வருவோர்க்கு  வாரி வழங்குவதோடு கனவில் கூட  என்னுடைய துன்பத்தை நீக்குக என்று பிறரிடம் கூறுதலை அறியாத குற்றமற்ற மனத்தையும் வெற்றியைத் தோற்றுவிக்கும்  நடையையும் உடைய அண்ணல் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட
                                                      பரணர், பதிற்றுப். 46 : 4 – 6
    வண்டுகள் ஒலிக்கின்ற  கூந்தலைக்  கொண்டையாகப் புனைந்த பாண் மகளிர், நரம்புக் கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்களுக்குப் பணியாத இயல்பை உடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர் . (கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் .
உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
வெல் புகழ்க் குட்டுவற் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே
                                                       பரணர், பதிற்றுப். 46 : 12 – 14
கடல் கலங்கும்படி வேலை எறிந்து, கரையிலே வந்து மோதி உடைகின்ற அலைகளை உடைய பரந்த கடலை உள்வாங்கச் செய்த , வெற்றியால் வரும் புகழுடைய குட்டுவனைக் கண்டோர் அவனைப் பாடி மீண்டு செல்வோம் என்று கருதார், அவனோடு இருக்கவே கருதுவர்.
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே
                                                        பரணர், பதிற்றுப். 47 : 7, 8
அழகிய நெற்றியை உடைய விறலியர் ஆடுகின்ற  பழைய நகரங்களின் எல்லையில் பேசப்படும் சேரனைப்பற்றிய(கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ) புகழ்ச்சிகள் சொல்லில் அடங்கா.          
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர்கொல்லோ நின் உணராதோரே
                 காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப். 51 : 21 – 24
வேந்தே ! ( ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ) அமிழ்தம் போன்ற உமிழ் நீரை உடைய சிவந்த வாயையும் தளர்ந்த நடையையும் உடைய விறலியர் பாட்டுக்களைப் பாட, பாடல் மிகுதலின் அவற்றைக் கேட்டு அங்கேயே வெகு நேரம் தங்கினாய், அதனால் வெள்ளிய வேலினையுடைய சேரன் ஐம்புல இன்பங்களுக்கு வயப்படுபவன் போலும் என்று, நின் இயல்பை முழுமையாக உணராதவர்கள் நினைப்பார்களோ ?.
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா ...
                     காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப். 52 : 10 – 12
நல்ல போரினை வஞ்சியாது எதிர்நின்று வென்ற,  இடியைப் போன்ற பகைவரை அழிக்கின்ற நினது ( ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ) பெரிய கைகள், நின்பால் வந்து இரப்பவர்க்கு அவர்கள் வேண்டியவற்றைக் கொடுத்தற்பொருட்டுக் கவிழுமே அல்லாமல் மற்றவர்களிடம் பொருளைப் பெறவேண்டி விரியமாட்டா.
ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின் நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ
                         காக்கைபாடினியார் நச்செள்ளையார், பதிற்றுப். 55 : 1, 2
கற்பில் சிறந்தோளுடைய தலைவா, ( ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ) நற்குணம் நிறைந்தவர்களைப் போற்றுதலில் வல்லவனே, பகைவரைக் கொல்லுகின்ற போரைச் செய்யும் அரசே நின்னைக் காண விரும்பி வந்தேன்.      
                                                                                                  .. CONTD…                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக