ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 751

திருக்குறள் – சிறப்புரை : 751
பொருளல் வரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் –௭௫௧
ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் ஒரு பொருளாக மதிக்கச் செய்யும் பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு ஒன்றும் இல்லை.
“ அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
 பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை.” –பழமொழி.

அருளுடைய நல்லார் முதல், அருள் அல்லாதார் வரை, பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.

சனி, 30 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 750

திருக்குறள் – சிறப்புரை : 750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.—௭௫0
ஓர் அரண், மேற்குறட்பாக்களில் சுட்டியுள்ள சிறப்புகளையெல்லாம் கொண்டிருப்பினும் செயல் திறன் என்ற ஒன்று  இல்லாதவரிடத்து அவ்வரண் சிறப்புப் பெறுவது இல்லை.
”செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடல்படை குளிப்ப மண்டி அடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவல் படப்பை ஆர் எயில் பலதந்து
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி…”—புறநானூறு.

போர் செய்ய எதிர்ந்த பகைவருடைய நாடுகளில் கடல் போன்ற படை, மேலும் மேலும் உட்புகுந்து செல்க; அடர்ந்த புள்ளிகளையுடைய சிறிய கண்ணையுடைய யானையைத் தடையில்லாது செம்மையாக ஏவிப் பசிய விளை வயல்களையும் அரிய மதில் அரண்கள் பலவற்றையும் கொள்க; அவ்வரண்களில் கொண்ட அழகிய நல்ல அணிகலன்களைப் பரிசிலர்களுக்கு முறையுடன் வழங்குக

வெள்ளி, 29 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 749

திருக்குறள் – சிறப்புரை : 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.--- ௭௪௯
போர்முகத்துப் பகைவர் அழிய அரணகத்து இருப்போர்தம் செயல் திறனால் வெற்றி பெறும் பெருமையுடன் விளங்குவது அரண்.
“இருபெரு வேந்தர் மாறுகொள் வயின்களத்து
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்….”---அகநானூறு.
பேரரசர் இருவர் தம்முள் பகைகொண்டு போரிடும் போர்க்களத்தில், ஒப்பற்ற தன்படையைக் கொண்டு தன்முன் வருகின்ற படைகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் போர்க்கள வெற்றியாகிய செல்வமே பெருமை உடையது; அப்பெருமையே நிலைபெற்ற செல்வமாகும்.



வியாழன், 28 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 748

திருக்குறள் – சிறப்புரை : 748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.  ---- ௭௪௮
கோட்டையை முற்றுகையிடுவதில் வல்லவராய், அரணைச் சுற்றிவளைத்த பகைவர்களையும் தடுத்து நிறுத்தி உள்ளிருப்போரையும் தாம் பற்றிய இடத்தைவிட்டு அகலாது, போர் புரிந்து வெல்வதற்கு ஏற்றதாக அமைவைது அரண்..

“வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட….” ---பதிற்றுப்பத்து.

வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாகப் புனைந்த பாண் மகளிர், நரம்புக் கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்களுக்குப் பணியாத இயல்பை உடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாடுவர்.

புதன், 27 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 747

திருக்குறள் – சிறப்புரை : 747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்..--- ௭௪௭
பகைவர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டும் முற்றுகையிடாது எளிதான இடனறிந்து போர் தொடுத்தும் அரண் உள்ளிருப்போரைச் சூழ்ச்சியால் தம் வயப்படுத்த முயற்சி செய்தும் எவ்வகையானும் பகைவரால் கைப்பற்ற முடியாத காப்பு உடையதே அரண்.
“மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ”-----பதிற்றுப்பத்து.


 வேந்தே…!அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக்கழலையும் அணிந்து பகை மன்னரது நிலை பெற்ற மதில்களை அழித்து அவற்றிலுள்ள வீரர்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருபவன் நீ.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 746

திருக்குறள் – சிறப்புரை : 746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
 நல்லார் உடையது அரண்.—௭௪௬
பகைவரல் அரண் முற்றுகையிட நேரின் அரண் உள்ளே இருப்போர்க்குத் தேவையான எல்லாப் பொருள்களும் உடையதாய், நெருக்கடியான நேரத்தில் உதவக்கூடிய ஆற்றல் வாய்ந்த வீரர்களையும் கொண்டது அரணாம்.
“ அமர்கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
 பெரும் பல் யானைக் குட்டுவன்.” ----பதிற்றுப்பத்து.

போரை விரும்பிச் செய்வதில் தனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்னும்படி பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அவரது அரிய மதிலை எதிர்நின்று வென்று கைக்கொள்ளும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்.

திங்கள், 25 டிசம்பர், 2017

புலவர் குழந்தை….

புலவர் குழந்தை….

”தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தம் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளாரென்க. ‘ அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்’ என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள், ‘ அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்றென்பது பழந்தமிழர் கொள்கையெனில், வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா? ‘ குன்றக் கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன? ஆசிரியர் முப்பால் கூறியிருக்க, நாற்பால் எனக் கூறுவது ஆசிரியர் கருத்தறியாமையோடு, ஆசிரியர் கருத்தைத் திரித்துக் கூறித் தமிழரை மயங்க வைத்தலுமாகும்.”

திருக்குறள் – சிறப்புரை : 745

திருக்குறள் – சிறப்புரை : 745
கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.--- ௭௪௫
பகைவரால் கைப்பற்ற முடியாததாய்; வேண்டிய உணவு அளிக்க வல்லதாய்; உள்ளிருப்போர் போர் நிலைக்கு எளிதாய் அமைவது அரண்.
“உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்கு புறச் செந்நெற்றரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்ந்தாங்கு.” ----அகநானூறு.
உரைத்தல் அமைந்த வளவிய புகழினையுடைய பாரியினது பறம்பு அரணில் வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம் காலையில் புறம்போய்ச் சிவந்த நெற் கதிர்களைக் கொணர்ந்து தருமாறு திரிதலை உடையனவாகி ஞாயிறு மறையத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற்போல….
பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும் முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து நெற்கதிர்களைக் கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு.


ஞாயிறு, 24 டிசம்பர், 2017

புலவர் குழந்தை…

புலவர் குழந்தை…
“அறமாவது மனு முதலிய நூல்களில் வித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்” என்னும் (பரிமேலழகரின்) கூற்றே பொருந்தாப் போலிக்கூற்றாகும். ஆரியக் கொள்கைகளை எப்படியாவது தமிழர் நம்பும்படி செய்துவிட வேண்டும் என்னும் உட்கருத்துடன் கூறப்பட்டதேயாகும் இவ்வுரைப்பாயிரம். மனுவறம் தமிழர்க்கு எவ்வகையினும் பொருந்தாது. இக்கருத்துடன் உரையிற் புகுத்தப்படும் மனுவறங்களைக் களைந்து குறட் கருத்தைக் கொள்ளுதல் வேண்டும்.

திருக்குறள் – சிறப்புரை : 744

திருக்குறள் – சிறப்புரை : 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.--- ௭௪௪
சிறிய வலிய காவலால் காக்கப்படும் இடம் அகன்ற இடத்தை உடைத்தாகி அமைந்து, அரணை அழிக்க வந்த பகைவர்தம் ஊக்கத்தினை அழிக்கவல்லது அரணாவது.
“நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்……” –புறநானூறு.

வேந்தே..! ஆவலால் வெற்றி பெற விரும்பிவந்த பகைவர், நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழ்ச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.

சனி, 23 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 743

திருக்குறள் – சிறப்புரை : 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். ௭௪௩
உயர்வு, அகலம், உறுதி, பகைவர் எளிதில் அணுகமுடியாத அருமை ஆகிய இந்நான்கும் அமைந்திருப்பதே அரண் என்பர் அரண்முறை வகுத்த நூலோர்.
“முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்றாகும் என்ப.” –தொல்காப்பியம்.
மதிலகத்து எல்லாக் கருவிகளையும் உடைய முழுநிலையுடைய கோட்டையை முற்றுகை இடுதலும் அதைக் கொள்ளுதலும் என்ற முறையில் அமையும் என்று கூறுவர்.


வெள்ளி, 22 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 742

திருக்குறள் – சிறப்புரை : 742
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
 காடும் உடையது நாடு. ௭௪௨
மணிபோலும் வெள்ளிய நீரும் வளமுடைய பரந்த நிலமும் பாதுகாப்பாக அமைந்த மலையும் குளிர்ந்த நிழல் பரப்பும் அழகிய காடும் ஆகிய இந்நான்கு வகைப்பட்ட இயற்கை அமைப்புடையதே அரணாகும்.
“கடிமிளை குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலை ஞாயில்
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்.”---பதிற்றுப்பத்து.

மிகுந்த காவலையுடைய காவற்காட்டையும் ஆழமான அகழியையும் உயர்ந்த புறமதிலையும் நிலையான மதிலின் உச்சியையும் அம்புக்கட்டுக்களையுமுடைய அழித்தற்கரிய மதிலை உள்ளே புகுந்து அழித்துச் சமையல் செய்தலால் உண்டாகாமல் ஊரினை நீ சுடுவதனால் உண்டாகிய புகையை உடையதும் பகைவரைக் கொன்று பெருமிதத்தால் மலரப் பெற்றதுமாகிய மார்பினை உடையவன்…சேரலாதன்.

வியாழன், 21 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 741

75. அரண்
திருக்குறள் – சிறப்புரை : 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.—௭௪௧
பகைவர் மீது படையெடுத்துச் செல்வதற்கு அரண் சிறப்புடையது; பகைவர்க்கு அஞ்சித் தன்னை வந்தடைந்தார்க்கும் அரண் சிறந்த காப்புப் பொருளாகிறது.
“புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை.”---புறநானூறு.
புதிய பறவை வந்தாலும் பழைய பறவை அவ்விடம் விட்டு அகன்றாலும் அத்தகைய தீய குறிகளால் மன நடுக்கமுறாத சேரமானின் அரிய பாதுகாப்பினை உடையது அவன் நாடு.


புதன், 20 டிசம்பர், 2017

காமுறுதல்

16. காமுறுதல்

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று..- 402
கல்லாதவன், சான்றோர் அவையேறி உரையாற்றி அனைவரையும் ஈர்க்க முயல்வது, இரண்டு கொங்கைகளும் இல்லாத ஒருத்தி, காம வயப்பட்டு ஆடவரை ஈர்க்க முனைவது போலாம்.
சொற்காமுறுதல் ; பெண் காமுறுதல், இவ்விரு இடங்களிலும் காமுறுதல் சொல்லாட்சியைக் காண்க.  காமுறுதல் என்பது துய்த்தல் என்பதாம்
கற்றறிந்தார் அவையை ஈர்க்க விரும்பிய கல்லாதான் ஒருவன் செவ்விய சொற்களைத் தேடியதைப் போன்று . முலை இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி ஆண்மகனை ஈர்க்க விரும்பியதைப் போன்றதாம்.
முலை இரண்டு இல்லாதவள் சிறுமியாகத்தானே இருக்க வேண்டும் ஆனால் வள்ளுவரோ பெண் என்று கூறுகிறாரே .. செவ்விய சொற்கள் அவையை ஈர்க்கும் காம நுகர்ச்சிக் கண் வழிப் புகுதற்குக் காரணமாக இருப்பவை முலைகளே.
The authors of an independent review of these studies, published in The Journal of Female Health Sciences, then collated this data and compared the countries, from the bustiest to the most flat chested.
They concluded: “Women born in the USA have by far larger breasts than women in any other country, while women born in Africa and Asia, particularly in the east Asian countries, have the smallest breast volumes.”
“They are already well aware of the breast role as an important secondary sexual characteristic of females, so they know that women with large breasts are seen as being more desirable by the opposite sex.”

                           --Contd….

திருக்குறள் – சிறப்புரை : 740

திருக்குறள் – சிறப்புரை : 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. --- ௭௪0
மேற்சுட்டிய வளங்கள் அனைத்தும் ஒரு நாட்டில் நிறைந்திருந்தாலும் நாட்டுக்குத் தகுதிவாய்ந்த அரசன் அமையாதுபோனால் அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.
“பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்” ---புறநானூறு.
பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றனர்; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டில் உள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர் ; இனியும் இங்கே தங்கியிருத்தல் கொடுமையன்றோ..?


செவ்வாய், 19 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 739

திருக்குறள் – சிறப்புரை : 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. --- ௭௩௯
மக்கள் தங்கள் வாழ்வாதரங்களைத் தேடி அலையாமல் இயற்கையாகவே அனைத்து உயிர்களும் வாழ்வதற்குரிய வளங்களைக் கொண்டுள்ளதையே நாடு என்று சொல்வர்; உழைப்புக்கேற்ற வளங்களைத் தரும் நாட்டை நாடு என்று கூறார்.
“ மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
 தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த”----மதுரைக்காஞ்சி.
மழை வேண்டுங்காலத்துத் தவறாது பெய்து. நாடெங்கும் விளையுள் பெருகி. ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைய. விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்களும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு தவறாமல் வழங்கும்.


சனி, 16 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 738

திருக்குறள் – சிறப்புரை : 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டுற்கிவ் வைந்து.—௭௩௮
நோயின்மை; செல்வம்; இயற்கைவளம்; மனநிறைவால் உண்டாகும் இன்பம்; பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும்  நாட்டிற்கு அணி என்பர்.
“குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்
தான் செல் உலகத்து அறம்.” –நான்மணிக்கடிகை.
குளத்துக்கு அழகு தாமரை; பெண்மைக்கு அழகு நாணம்; ஒருவன் மறுமைக்கு ஆற்றும் அறங்கள் அவன் ஆண்மைக்கு அழகாம்.


வெள்ளி, 15 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 737

திருக்குறள் – சிறப்புரை : 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.௭௩௭
வான்மழையும் ஊற்று நீரும் ஆகிய இருவகை நீர் வளமும் ; நலமும் வளமும் நல்கும் வாய்ப்பாக அமைந்த மலையும்;  அம்மலையினின்று வீழும் அருவி நீரும்; வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
“திருவில் அல்லது கொலை வில் அறியார்
 நாஞ்சில் அல்லது படையும் அறியார்.” –புறநானூறு.
சேர நாட்டு மக்கள் மழைவளம் தரும் வானவில்லைத்தவிரக் கொலைசெய்யும் போர் வில்லினை அறியார்; உழுபடைக் கருவியாகிய கலப்பையைத்தவிர வேறு கொலைப்படைக் கருவி ஒன்றனையும் அறியார்.


வியாழன், 14 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 736

திருக்குறள் – சிறப்புரை : 736
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. --- ௭௩௬
பகைவரால் கேடு அடையாததாய் அரிதாகக் கேடு நேர்ந்தாலும் தன் வளம் ஒரு சிறிதும் குன்றாத நாடே நாடுகளுக்குள் சிறந்த நாடு என்பர்.

“ குழவியைப் பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர…”—கலித்தொகை.

வேந்தே…! குழந்தையைப் பார்த்து பார்த்து அதற்கு முலை சுரந்து பால் ஊட்டும் தாயைப்போல மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து. உலகைப் பாதுகாத்து வருகிறது. இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.

புதன், 13 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 735

திருக்குறள் – சிறப்புரை : 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.--- ௭௩௫
தன்னலத்தால் வேறுபட்ட குழுக்களும் உடனிருந்தே அரசைப் பாழ்படுத்தும் உட்பகையும் வேந்தனை வருத்தித் துன்புறுத்தும் கொல்வினைக் குறும்பர்களும் இல்லாததே நாடாகும்.
“நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை…”—கலித்தொகை.
தம் நெஞ்சு அறிய. தாம்செய்த தீவினைகளைப் பிறர் அறியாதவாறு மறைக்கவும் செய்வர்; ஆயினும் அவர் தம்முடைய நெஞ்சத்துக்கு மறைத்தல் இயலாது; நெஞ்சத்தைக்காட்டிலும் அணுக்கமான சான்று வேறில்லை.


செவ்வாய், 12 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 734

திருக்குறள் – சிறப்புரை : 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. ௭௩௪
கொடிய பசியும் நீங்காத நோயும் அழிவைத்தரும் பகையும்  நாடின்கண் சேராது மக்கள் மனநிறைவுடன் வாழுமாறு இனிதே இயங்குவதே நாடாவது.
”குழவி கொள்வாரின் குடி புறந்தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்…” ---பதிற்றுப்பத்து.
சேரலாதன். குழந்தையைப் பாதுகாக்கும் தாயைப்போலத் தன் குடிமக்களைப் பாதுகாத்து அறத்தையே ஆராயும் மனத்தை உடையவன்.

திங்கள், 11 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 733

திருக்குறள் – சிறப்புரை : 733
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு. --- ௭௩௩
பிறநாட்டு மக்கள் வாழ வழிதேடி இடம்பெயர்ந்து வருங்கால் கூடும் சுமையை ஒரு சேரத் தாங்கி அரசுக்குச் செலுத்தவேண்டிய இறைப்பொருள் முழுமையும் ஒருங்கே செலுத்தும் குடிமக்களைக் கொண்டதே நாடு.
” அரணம் காணாது மாதிரம் துழைஇய
 நனந்தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல்…” –பதிற்றுப்பத்து.
உங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதற்குரிய இடத்தினைக் காணாது திசைகளிலெல்லாம் சென்று தேடிய இப்பரந்த நிலவுலகில் வாழும் மக்களே..! சேரலாதனின் குடை நிழலில் வந்து சேருவீராக.


ஞாயிறு, 10 டிசம்பர், 2017

டாக்டர் வ. சுப. மாணிக்கம்.

டாக்டர் வ. சுப. மாணிக்கம்.
“  வாழ்க்கைத் தோழர்களே ..! இறுதியாக, ஒரு வள்ளுவம் கேண்மின்..! மக்கள்பால் ஆசான் கண்டறிந்த பெருங்குறை ஒன்று உளது, அக்குறை தீர்த்தாலல்லது வாழ்வுக்கு முன்னேற்றம் இல்லை.கல்வி அறிவு செல்வங்கள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, ஊக்கம் முயற்சி மடியாமை வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, தூய்மை, வாய்மை சால்புகள் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, நல்லவையெல்லாம் வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உண்டு, எண்ணிய எண்ணியாங்கு எய்தல் வேண்டும் என்ற பேரெண்ணம் நமக்கு உண்டு, இவ்வெண்ணமெல்லாம் நிரம்பிவழியும் நமக்கு, நன்கு ஊன்றிக் கொள்மின் ! எண்ணத் திட்பம் இல்லை, இல்லை, இல்லை..! எண்ணியதை மீண்டும் மீண்டும் பெருக்கல் வாய்பாடுபோல நினைவுக்குக் கொண்டுவரும்  எண்ணப் பயிற்சி இல்லை, உள்ளத்தால் உள்ளிய எனைச் சிறுபெருஞ் செயலையும் திரும்பத் திரும்ப உள்ளிக் கொள்ளும் உறைப்பு இல்லை, விரும்பிய ஒரு குணத்தைக் குறிக்கோளாகத் தேர்ந்து வைத்துக்கொண்டு, அதனைப் பலகாலும் பயிலும் செயற்கோள் இல்லை, கோளற்ற , செயலற்ற, முறையற்ற வாழ்க்கையாகத் தள்ளிக்கொண்டு, இறப்பு நோக்கிச் செல்கிறோம், உரம்போடா நல்வித்து விளையாமை போல, திட்பம் இல்லா எண்ணம் செயலாதல் இன்று, நெஞ்சுரம் அற்ற மகன் நினையும் எண்ணம் பேடிகை வாள் ஒக்கும், திண்மை பெறா எண்ணாளன் வாழ்வு விரியாது சுருங்கும் ; ஆதலின் ‘ வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்’ ( 661) என்பர், இத்திட்ப வள்ளுவத்தை நினைக..! நினைக..!! என்று நும்மைப் பன்மாணும் இரப்பன்.”

 -  

திருக்குறள் – சிறப்புரை : 732

திருக்குறள் – சிறப்புரை : 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.--- ௭௩௨
பெருகும் பெரும்பொருளால் மாற்றாரும் விரும்பும் வளமுடையதாகிக் கேடின்றி மிகுந்த வளம் விளைவதே நாடாவது.
”மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்
பூத்தன்று பெரும நீ காத்த நாடே.” ----- பதிற்றுப்பத்து.

நின் நாட்டில் மழை வேண்டும் காலத்து மழை பொழிகிறது; நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லை; நின் நாடு பொலிவு பெற்று விளங்குகிறது.

சனி, 9 டிசம்பர், 2017

வினோபாபவே

“மனிதனின் மூளைக்கு எட்டியபடி கணக்கிட்டால், ஆங்கில இலக்கியங்களுக்கு வயது 800, அமெரிக்க இலக்கியங்களுக்கு வயது 400, ஆனால் திருக்குறளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகள்.  800 ஆண்டுகள் வயதுடைய ஆங்கில இலக்கியங்கள் இந்தக்காலத்துக்குப் பொருந்தவில்லை, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் நான் மிகப்பெரிய ஜீவனைக் காண்கிறேன். இப்போது உலகலெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிற பஞ்சசீலக் கொள்கையையும்  நான் திருக்குறளில் காண்கிறேன். இத்தகைய திருக்குறளை உருவாக்குவதற்கு அதற்குமுன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழுக்கு வயது இருந்திருக்கவேண்டும்!” –என்று சொன்னவர் வினோபாபவே, அதோடு அவர் தமிழ்நாட்டில் பேசும்பொழுதெல்லாம் திருக்குறளையும் தேவாரத்தையும் குறிப்பிடாமல் பேசியதில்லை. –தினத்தந்தி, 23/9/17

திருக்குறள் – சிறப்புரை : 731

74. நாடு
திருக்குறள் – சிறப்புரை : 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. --- ௭௩௧
பருவம் தப்பாத விளைச்சலும் நன்னெறி நீங்காத தக்காரும் கேடு இல்லாச் செல்வரும் ஒருங்கு அமைவதே நாடாகும்.
“பூசல் அறியா நல் நாட்டு
 யாணர் அறாஅக் காமரு கவினே’” ---பதிற்றுப்பத்து.
போர் ஆரவாரத்தினை அறியாததும் புது வருவாயினை இடையறாது உடையதும் ஆகிய அழகிய நல்ல நாடு.


வெள்ளி, 8 டிசம்பர், 2017

பேராசிரியர் பா. வளன் அரசு

பேராசிரியர் பா. வளன் அரசு…….
”ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் அருளப்பெற்ற திருக்குறளுக்கு முப்பால் என்பதே முதற்பெயராகும். அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருட்கள் மூன்றையும் முழுமையாக எடுத்து மொழியும் மாண்புடையது. 1812ஆம் ஆண்டு அச்சேறிய திருக்குறளில் முதலில் ஆய்வினை 1902ஆம் ஆண்டு மேற்கொண்டவர் திருமணம் செல்வக்கேசவராயர். பத்தாம் நூற்றாண்டில் மணக்குடவர் தந்த உரை விளக்கத்தைத் தொடர்ந்து பதின்மூன்றாம் நூற்றாண்டில் உரை வரைந்தவர் வண்துவரைப் பெருமாள் என்னும் பரிமேலழகர்; நாளிதுவரை திருக்குறளுக்கு நானூறு உரைகள் வெளிவந்துள்ளன.
 வீரமாமுனிவர் 1730ஆம் ஆண்டு இலத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் மட்டுமேஐம்பதுக்கு மேற்பட்ட அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். நரிக்குறவர் பேசும் வக்கிரபோலியில் கிப்டு சிரோன்மணி மொழிபெயர்த்துள்ளார்.தைவான் மொழியில் 2010 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த அறிஞர் யூசி. 2014 ஆன் ஆண்டு சீனத்து மாண்டரீன் மொழியிலும் தந்துள்ளார். பேராசிரியர் சாகிர் உசேன் 2015ஆம் ஆண்டில் அரபு மொழியில் திருக்குறளை நல்கியுள்ளார். ” (காவ்யா)


திருக்குறள் – சிறப்புரை : 730

திருக்குறள் – சிறப்புரை : 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். --- ௭௩0
சான்றோர் அவையில் தாம் கற்றவற்றை எடுத்துரைக்க அஞ்சுபவர் உயிருடன் இருப்பினும் இறந்தாரோடு வைத்து எண்ணத்தக்கவர்களே.
“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.”— குறள்.214.

உயிர் இரக்கம் அறிந்து உதவிபுரிந்து வாழ்பவனே உயிருடன் வாழ்பவன் ஆவான்; பிறர் துன்பம் கண்டு இரக்கம் காட்டாத மற்றையோர் உயிருடன் இருப்பினும் அவர்கள் செத்தாருள்  வைத்து எண்ணத்தக்கவர்களே.

வியாழன், 7 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 729

திருக்குறள் – சிறப்புரை : 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.--- ௭௨௯
நல்ல நூல் பல கற்றறிருந்தும் சான்றோர் அவையின்கண் உரையாற்ற அஞ்சுபவரை ஒரு சிறிதும் கல்வியறிவு இல்லாதவரினும் கடையர் என்பர்.
”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்…” --நற்றிணை.
தொடங்கிய செயலைச்செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத் தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.


புதன், 6 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 728

திருக்குறள் – சிறப்புரை : 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.-- ௭௨௮
கற்றோர் கூடிய அவையில் தாம் கற்றவற்றைக் கேட்போர் மனங்கொள்ளுமாறு விரித்துரைக்கும் ஆற்றலற்றவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றிருந்தும் பயனற்றவர்களே.
“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.”—குறள்.650.

தாம் கற்றவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு விரித்துரைக்கும் ஆற்றல் அற்றவர். கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் கமழாத மலருக்கு ஒப்பாவர்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 727

திருக்குறள் – சிறப்புரை : 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.--- ௭௨௭
சான்றோர் அவைக்களத்தில் பேச அஞ்சுகின்றவன் கற்ற நூல்; போர்க்களத்தில் பேடி ஒருத்தித் தன் கையில் ஏந்திய வாள் போல் பயனற்றதாகும்.
”அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு.” ---நான்மணிக்கடிகை.

சான்றோர் இல்லாத அவை பாழ்; கல்வியறிவு இல்லாத உடம்பு பாழ்.

திங்கள், 4 டிசம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 726

திருக்குறள் – சிறப்புரை : 726
வாளொடுடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. --- ௭௨௬
பகைவர் படைகண்டு அஞ்சாத வீரர்களேயன்றிப் படைகண்டு நடுங்கும் கோழைகளுக்கு வாளோடு என்ன தொடர்பு? சான்றோர் நிறைந்த அவைகண்டு பேச அஞ்சுபவர்களுக்கு நூலோடு என்ன தொடர்பு ?
“ பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.” –இனியவைநாற்பது.

பற்பல நாளும் வீணே கழியாது பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை.