ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -94

மெய்ப்பொருள் காண்பது அறிவு -94

பிளேட்டோ (Plato) கி.மு. 428 – 347.

” மாறும் பொருள்களும் மாறா வடிவங்களும் சேர்ந்தே நம் காட்சிக்கு உட்படும் இவ்வுலகும் பேரண்டமும் ” என்றார்.
 பிளேட்டோவின் அரசியல் கோட்பாடு

“உயர் நற்பண்பே பேரறிவு ; நற்பேரறிவே உயர் நற்பண்பு.”

குடியரசு

 பகுத்தறிவு இயல்பாகவே மேம்பட்டிருப்பவர்கள் ஆளுந்தகுதி உடையவர்கள். ஆண் நாயைப் போன்று பெண் நாயும் வீட்டைக் காக்க வல்லது. அறிவுடைய பெண்களும் ஆள்வோர் வரிசையில் இடம் பெறலாம்.

முடியாட்சி, குடியாட்சி, குழுவாட்சி போன்ற அரசியல் அமைப்புகளில் ஏற்புடையது எது… சிறப்புடையது எது..? ஆளுகின்றவர்கள் நற்பேரறிவும் உயர் பண்பும் உடையவர்களானால் எல்லா அரசியல் அமைப்புகளும் ஏற்புடையனவே. என்கிறார்.

குடியாட்சித் தத்துவமும் முடியாட்சித் தத்துவமும் கலந்ததொரு அரசியல் அமைப்பு நடைமுறைக்குச் சிறந்த அமைப்பு எனக் கருதுகிறார் பிளேட்டோ. இவ்வமைப்பில் உரிமைக்கும் அறிவுக்கும் ஒருசேர இடமுண்டு என்றும் கூறுகிறார். 

திருக்குறள் -சிறப்புரை :1006


திருக்குறள் -சிறப்புரை :1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். ---- ௧00௬

( தான் துவ்வான் ; தக்கார்க்கு ஒன்று ; இயல்பு இலாதான். )

 தானும் துய்க்க மாட்டான், உதவி வேண்டி இரந்து நிற்கும் தக்கவர்களுக்கும் கொடுத்துதவும் பண்பும் இல்லாதவன் தேடிக்குவித்த பெருஞ்செல்வம், அவன் தேடிப்பெற்றுக்கொண்ட பெரு நோய் ஆகும்.

“பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே.” ---புறநானூறு.

குளிர்ந்த நீர்த்துறையின்கண் தேன் பொருந்திய பெரிய பகன்றை மலர் பிறரால் சூடப்பெறாது வாடி வீழ்வதைப் போலப் பிறர்க்கு ஒரு பொருளையும் கொடுக்காது மாய்ந்து போகும் உயிர்கள் மிகப் பலவே.


சனி, 29 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -93

மெய்ப்பொருள் காண்பது அறிவு -93
பிளேட்டோ (Plato) கி.மு. 428 – 347.

சாக்ரடிசின் மாணவர். சாக்ரடிசின் கருத்துகளை நூலாக்கியவர். பிளேட்டோவின் அரசியல் தத்துவம் உயர்ந்தது.

“காட்டுமிராண்டியாக அன்றி நாகரிகமுள்ள கிரேக்கர்களாகவும் ; அடிமையாக அன்றி உரிமையாளனாகவும் ; பெண்ணாக அன்றி ஆணாகப் பிறந்ததற்காகவும் அனைத்திற்கும் மேலாக சாக்ரடிசின் காலத்தில் வாழும் பெருமை பெற்றதற்காகவும் கடவுளுக்கு நான் கடப்பாடு உடையவன்” என்றார்.

பிளேட்டோ செல்வக்குடியில் பிறந்தவர். தன் ஆசான் நஞ்சுண்டு இறந்தபின் அங்கிருக்க விரும்பாது அறிவிலிகள் நடத்திய கும்பல் ஆட்சியை வெறுத்து வெளியேறினார். உலகநாடுகளைச் சுற்றிய 
பின்பு ஏதென்சு திரும்பினார். அறிஞர்களை உருவாக்கக் கல்விக்கழகம் 
(அகாடமி) நிறுவினார்.

கருத்துமுதல்வாதம்

 பிளேட்டோவின் தத்துவ அமைப்பு ‘கருத்துமுதல்வாதம்’. கருத்துகளே எல்லாவற்றிற்கும் முதன்மையானவை. கருத்தே உறுதிப் பொருள். இக்கருத்துகள் யாவும் வெறும் வடிவங்களே. அவை ஆக்கப்பட்டவை அல்லஎன்பதால் அழியக்கூடியவையும் அல்ல. இக்கருத்துகளை அறிவால் அறிய முடியுமே தவிர புலன்களால் நுகரமுடியாது.” …தொடரும்.. 

திருக்குறள் -சிறப்புரை :1005


திருக்குறள் -சிறப்புரை :1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். ---- ௧00௫
இல்லாதார்க்குக் கொடுத்தும் தானும் துய்த்து  மகிழ்தலும் இல்லாது, அவல நிலையில் உள்ளவர்கள் பல கோடிப் பொருள் வளம் பெற்றிருந்தாலும் அவற்றால் ஒரு பயனும் இல்லை.
“பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடுஇன்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே.” ---புறநானூறு.
பலவாறு எடுத்துக்கூறினும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.


வெள்ளி, 28 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -92

மெய்ப்பொருள் காண்பது அறிவு -92
சாக்ரடிசு (Socrates) கி.மு. 469 – 399.
                       மனித மனத்தில் இருக்கும் அச்ச உணர்வை மூலதனமாகக் கொண்டு மதத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வாழ்ந்தனர்.
                 நேர்மையே நற்பண்பு  ; நற்பண்பே அறிவு. உலகியல் பொருள்களிலும் போக்கினிலும் வாழ்க்கை நடப்பிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்திருக்கக் காணலாம். இக்குறைபாடுகளை நீக்கி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மாறாது தங்கி நிற்கும் பொதுத் தன்மையைக் காணவேண்டும் என்பது சாக்ரடிசின் நோக்கமாகும்.
                        கைகளை உயர்த்தும் ‘கும்பல் ஆட்சி முறையை” வெறுத்தார். சிந்தனைத் திறனும் அறிவுக் கூர்மையும் இல்லாதவர்கள் அறிஞர்கள் வகுக்கும் சட்ட அமைப்பிற்குள் இருந்து ஆளப்பட வேண்டும் என்றார்.
நாத்திகன்
                     சாக்ரடிசு நாத்திகன், தேசத்துரோகி, இளைஞர்கள் மனத்தில்  நச்சுக் கருத்துகளை விதைத்தவன் என்று குற்றம் சாற்றினர். “ஒன்றே கடவுள் என்பது குற்றமென்றால் ; சிந்திக்காது செயல்படும் கண்மூடிப் பழக்கம் ஒழிய வேண்டும் என்றது குற்றமென்றால் நான் குற்றவாளியாகவே இருக்க விரும்புகிறேன்.” என்றார்.
மதவாத அரசு சாக்ரடிசுக்கு மரணதண்டனை அளித்தது .  சிந்தனைத் திறனில்லாதவர்கள் எடுத்த அவசர முடிவால் ‘ஞான உரு ஒன்று அழிந்தது’.
ஏதென்சு நகரம் என்றோ இழைத்த அநீதிக்கு மனித இனம்  மனம் நோக இன்றும் வருந்துகிறது; மன்னிப்பு வேண்டி சாக்ரடிசிடம் மண்டியிடுகிறது. -

திருக்குறள் -சிறப்புரை :1004


திருக்குறள் -சிறப்புரை :1004
எச்சமென்று என் எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். ---- ௧00௪
இல்லாதார்க்கு ஒரு பொருளையும் கொடுக்காத கல்மனத்தன், ஒருவராலும் விரும்பப்படாதவன் ஆவான். அத்தகையவன்,   தான் இறந்தபின் தனக்கென இந்நிலவுகில் எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவான்..?
“நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
 நல்கூர்ந்தார் ஈயார் எனின். ---நாலடியார்.
வறுமையுற்ற காலத்தும் பிறரிடம் சென்று இரந்து நில்லாதார்  செல்வம் உடையராவர் ; நிறைந்த செல்வ வளம் இருந்தும் ஒன்றும் ஈயாதவர் எனின் அவரே மிக்க வறுமை உடையோராவர்.


வியாழன், 27 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -91

மெய்ப்பொருள் காண்பது அறிவு -91
சாக்ரடிசு (Socrates) கி.மு. 469 – 399.

உண்மை உயிரினும் மேலானது – நஞ்சுண்டபோதும் உண்மை பேசியவர் – ஏடெத்து எழுதவில்லை – தெருவோரப் பரப்புரை – பல 

அறிஞர்களை உருவாக்கிய அறிஞர் -  ஏன்…எப்படி… என்ற வினாக்களைத் தொடுத்து உண்மையை உணர்த்தியவர் – சொல்லும் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டியவர்- கொள்கைக்காவே வாழ்ந்தவர்.

ஏதென்சு ; பல அறிஞர்களைக் கண்டது – வணிக மையம் – செல்வச் செழிப்பு – பண்பாட்டுக் கலப்பு – சிந்தனைக் களம் -

பேரண்டத்தின் தோற்றம், இயல்பு பற்றி, மனிதன் சிந்திக்கத் தொடங்கிய இடம்.

இளைஞர்களுக்குத் தத்துவ தாகம் ஏற்படச் செய்தவர் சாக்ரடிசு.

‘ஈடும் எடுப்புமில்லா நற்பேரறிஞன் சாக்ரடிசு’ – என்பது கிரேக்க நாட்டுத் தெய்வ வாக்கு.

”எனக்கு எதுவும் தெரியாது என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று” என்று கூறியவர். ‘உன்னையே நீ அறிவாய்’ – இவரின் உயர்ந்த கோட்பாடு. 

‘அறியாதன பல உண்டு எனப்பலரை அறியச் செய்தவர். மனிதனைப் பற்றிய சிந்தனையே முதன்மையானது –என்றார். ----தொடரும்…. 

திருக்குறள் -சிறப்புரை :1003


திருக்குறள் -சிறப்புரை :1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.---- ௧00௩
தேடிய செல்வத்தைப் பாதுகாத்துப் பிறர்க்குக் கொடுத்துப் புகழை விரும்பாது பதுக்கி வைத்திருப்பவர்,  இவ்வுலகில் பிறப்பது, நிலத்திற்குப் பெரும் சுமையாகும்..  
“ மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை.” –நாலடியார்.
மறுமை இன்பமாகிய புகழை அறியாத கீழ் மக்களின் செல்வத்தைக் காட்டிலும் சான்றோர் வறுமை உயர்ந்தது.


புதன், 26 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -90

மெய்ப்பொருள் காண்பது அறிவு -90
கெராக்லிடஸ் (Heraclitus) கி.மு. 535 – 475.
இவர் அரசப் பரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக அரசுரிமையைத் துறந்தவர்.
மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே இயற்கையின் முதல் மூல்கம் எனக் கருதினார். நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை என்றும் உள்ளது. எல்லாப் பொருள்களும்  அவற்றின் பண்புகளை அதனதன் எதிமறைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வெப்பம் x குளிர் ; பிறப்பு x இறப்பு ;  உயர்வு x தாழ்வு  இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடின்றித் தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வு என்றார். 

திருக்குறள் -சிறப்புரை :1002


திருக்குறள் -சிறப்புரை :1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. ----- ௧00௨
இவ்வுலகில் பொருளால் எல்லாம் கைகூடும் என்று மயங்கிப் பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் பொருளைப் பூட்டி வைத்திருக்கும் ஒருவன் மனிதப் பிறவியில் இழிந்த பிறவியாவான்.
“ இன்மையின் இன்னாதது இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.”  -----நான்மணிக்கடிகை.
 வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை ; வறுமையுற்றார்க்கு இல்லை என்னாது ஈதலைப்போல் திட்பமானதும் வேறு இல்லை.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -89

மெய்ப்பொருள் காண்பது அறிவு -89
அனாக்சி மெனஸ் (Anaximenes)கி.மு. 588 – 625.
 இவர் அனாக்சி மேண்டரின் மாணவர். பொருள்கள் அனைத்தும் காற்றிலிருந்து தோன்றிக் காற்றிலே அடங்குகின்றன என்பது இவரின் கொள்கை. காற்று அளவிறந்தது; எங்கும் நிறைந்திருப்பது ; அழியாதது. காற்றின் செறிவிற்கேற்பவும் அழுத்தத்திற்கேற்பவும் மேகம் , நீர், நெருப்பு, நிலம் எனப் பொருள்கள் பரிணாமிக்கின்றன என்றார்.

திருக்குறள் -சிறப்புரை :1001


திருக்குறள் -சிறப்புரை :1001
101. நன்றியில் செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். --- ௧00௧
பெரும்செல்வம் பெற்றவன், தானும் துய்க்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இறந்து போகிறவன் இவ்வுலகத்திற்குச் செய்தது என்று சொல்ல ஒன்றுமில்லை.
”வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
இழந்தான் என்று எண்ணப்படும்.” –நாலடியார்.
இல்லாதார்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன் ; அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.


திங்கள், 24 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -88

மெய்ப்பொருள் காண்பது அறிவு -88
அனாக்சி மேண்டர் (Anaximander)  கி.மு. 610 – 546.
இவர் தேலிசின் மாணவர். தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த ஒரு மூலகத்தையும் பேரண்டத்தின் முதற் காரணமாக இவர் கொள்ளவில்லை இப்பேரண்டம் எதிர்மறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர்x நெருப்பு ; வன்மை x மென்மை ;  என்பன போன்று  பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒன்றே அனைத்திற்கும் மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலேயே அடங்கும்.
 மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே. மனிதன் மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.

திருக்குறள் -சிறப்புரை :1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. – ௧000
(கலம் தீமையால் திரிந்தற்று)
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் தூய்மையற்ற கலத்தின் தன்மையால் நல்ல பாலும் கெட்டுப் பயனற்றுப் போவதைப் போல் அப்பெருஞ் செலவமும் யார்க்கும் பயன்படாது போகும்.
“நல்லார்கண் பட்ட வெறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு. குறள். -408.
கல்வியறிவிற் சிறந்த சான்றோரை வருத்தும் வறுமைதரும் துன்பத்தைவிடக் கல்லாதவர்கள் கையில் கிடைத்த பெருஞ் செல்வம் மிக்க துன்பத்தைத் தரும்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -87

மெய்ப்பொருள் காண்பது அறிவு -87
கிரேக்கச் சிந்தனையாளர்கள்
கிரேக்கர்களின் தத்துவக் கோட்பாடுகள், மேலைநாட்டுத் தத்துவக் கோட்பாடுகள் அனைத்திற்கும் வித்தாக அமைந்துள்ளன. கிரேக்கர்களின் சிந்தனை ஆற்றலும் அறிவுத்திறனும் காலத்தால் அழிக்கமுடியாத சிறந்த தத்துவங்களை ஏற்படுத்தன. கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் உண்மையான தத்துவ ஞானிகளாக எவருக்கும் அஞ்சாத , எளிய இனிய வாழ்க்கை நடத்தியவர்கள். சமயச் சார்பில்லாது நடுநுன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் பண்டைய கிரேக்கர்கள்.
தேலிஸ் (Thales ) கி.மு. 6.
இவ்வுலகம் எதனால் ஆயது என்ற வினாவை எழுப்பிய முதல்வர் இவரே. இவ்வுலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணம் என்றும் கூறினார்.
கதிரவனும் விண்மீன்களும் வணக்கத்திற்குரிய கடவுளர் அல்லர் ; அறிவுக்கண்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய நெருப்பின் துகள்கள் என்றார்.
அனைத்தும் ‘ஆன்மா’ என்பது தேலிசின் கொள்கை. எல்லாப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்னும் இக்கோட்பாடு ’ஐலோசோயிசம்’ எனப்படும்.  -

திருக்குறள் -சிறப்புரை :999


திருக்குறள் -சிறப்புரை :999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.--- ௯௯௯
பிறருடன் மனம்விட்டுச் சிரித்துப் பேசி மகிழும் பண்பில்லாதவர்களுக்கு இவ்வுலகம், பகல் பொழுதிலும் இருள் நிறைந்ததாகவே தோன்றும்.
“ வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
 பண்புஇலன் பற்றார்க்கு இனிது. குறள் ---865.
வினையின் எதிர்வினகளை அறியான்;  வாய்ப்பிருந்தும் செய்யவேண்டிய நற்செயல்களைச் செய்யான் ; பழிக்கு அஞ்சான் ; நற்பண்பும் இல்லான் அவனை வெல்வது  பகைவர்க்கும் எளிது.

சனி, 22 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -86

மெய்ப்பொருள் காண்பது அறிவு -86
கன்பூசியசு ( கி.மு. 550 – 523 ) Confucianism
அரசியல்
ஒரு நல்ல அரசுக்குத் தேவையானவை…
போதுமான உணவு ; போதுமான படை பலம் ; பொதுமக்களின் நம்மிக்கை. மக்களின் நம்பிக்கையே முதன்மையானது ; அஃதில்லையேல் அரசு இல்லை.
கல்வி
கல்வி அறிவின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும். அனைவரும் கல்வி பெற வாய்ப்பளித்தார். ‘ ஒரு செய்தியின் ஒரு மூலையை நான் தெளிவாக எடுத்துக்காட்டியபிறகு மற்ற மூன்று மூலைகளையும் தானாகவே கண்டுபிடிக்க முடியாதவனுக்கு நான் மேலும் கல்வி கற்பிக்க மாட்டேன்.’
 அறிவுக்காக அறிவை அடைவதைவிட தன்னைப் பண்படுத்தி வளர்த்துக்கொள்வதற்காக அறிவு பெறுவதுதான் கல்வியின் உண்மையான பயன். சிந்தனை இல்லாத படிப்பு வீணானது; படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.”
சட்டங்களும் தண்டனைகளும் மக்களைத் திருத்திவிட முடியாது.
தத்துவம்
 ஒரு வாலிபன் வீட்டிலிருக்கும்போது பெற்றோர் பக்தியும் வெளியில் இருக்கும்போது சகோதர அன்பையும் பயில வேண்டும். அவன் மனப்பூர்வமாகவும் தீவீரமாகவும் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.
மனித சீவன்கள் மீது அன்பு செலுத்துவது மனிதப்பண்பு ; மனிதர்களைப் புரிந்து கொள்வது விஞ்ஞானம்.
இயற்கை
வானம், உன்னதமான ஆத்மிக இயக்கம் ; அது இயற்கையின் சக்தியே தவிர இறைவன் எனப்படும் ஓர் ஆள் அல்ல. மக்கள் அனைவரும் வானகத்தின் கீழ் ஒரு பொது மனித சமுதாயக் கூட்டம். மனிதன் இயற்கையோடு இயைந்து வாழவேண்டும்.” –

திருக்குறள் -சிறப்புரை :998


திருக்குறள் -சிறப்புரை :998
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.--- ௯௯௮
(நண்பு ஆற்றார் ஆகி ; பண்பு ஆற்றார் ஆதல்)
தம்மொடு நட்பு கொள்ளாது நன்மையல்லாத செயல்களைச் செய்வாரிடத்தும் தாம் பண்புடன் ஒழுகாதிருத்தல் பண்புடையார்க்கு உரிய செயலன்று.
“இன்னா செய்தாரை ஒறுத்தல்  அவர்நாண
நன்னயம் செய்து விடல் –குறள் -314.
தமக்குத் துன்பம் தருவனவற்றைச்செய்தவர்க்கு அவர் நாணும்படி நன்மையானவற்றைச்  செய்து அவர் செய்த தீமைகளையும் மறந்துவிடுதல் வேண்டும்.


வெள்ளி, 21 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -85

மெய்ப்பொருள் காண்பது அறிவு -85
   கன்பூசியசு ( கி.மு. 550 – 523 ) Confucianism
சீனத் தத்துவ ஞானி.. “ பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று கருதுகிறீர்களோ அதை நீங்கள் பிறருக்குச் செய்யாதீர்கள்.”
இவர் கடவுள், மதம், ஞானம் எதையும் இவர் போதிக்க வில்லை, நடைமுறையில் மனிதன் ஏற்று ஒழுக வேண்டிய நெறிகளை மட்டுமே கற்பித்தார்.
“ வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது மரணத்தைப் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்..? என்று வினவினார்.
இவருடைய  குறிக்கோள்கள்
1.  அரசுக்குக் கடமையாற்றல்
2.  . இளைஞர்களுக்குக் கற்பித்தல்
3.  சீனப் பண்பாட்டை எதிர்காலச் சந்ததியினருக்குப் பதிப்பித்தல்.
மேலை நாட்டுத்தத்துவம் மதத்தோடு தொடர்புடையது. சீன நாட்டுத் தத்துவம் அறிவுக் கலைகளோடு தொடர்புடையது.
 சீனரின் தத்துவ மூலம் – யாங்- யின் (Yang – Yin)
யாங் – ஆண்மை  : படைக்கும் ஆற்றல்
யின் -  பெண்மை : கிரகிக்கும் ஆற்றல்.
“ உலகம் முழுவதற்கும் ஓர் ஒழுங்கு, ஒரு பொது ஒழுக்கம், ஒரு பொதுச் சமுதாயம் அமைய வேண்டும். அதற்கு உலகப் பொதுத் திட்டம் ஒன்று வேண்டும்…
இதற்கு அடிப்படை ஒரு பொது அறநெறி. மனிதனின் செயல் அந்த அறநெறியோடு இசைந்திராவிட்டால் மக்களும் அரசும்  இயற்கை ஒழுங்கும் குழம்பிக்கிடக்கும்.
கன்பூசியசு கம்பனின் கோசல நாடு போன்று  “பொது நல நாடு” ஒன்றைப் படைத்துக்காட்டுகின்றார். இவரின் அறிவுரைகளில் குடும்பம், அரசியல், சமூகம், ஆகியவற்றில் ‘தனிமனித ஒழுக்கம்’ முதன்மைப் பங்குவகிக்கிறது. தொடரும்… 

திருக்குறள் -சிறப்புரை :997


திருக்குறள் -சிறப்புரை :997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். --- ௯௯௭
அரத்தைப் போல கூர்மையான அறிவு உடையவராயிருந்தாலும் ஆறறிவு உடைய மக்கள் பண்பு இல்லாதவர் ஓரறிவு உடைய மரத்தைப் போன்றாவராவர்.
“ பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத் தக்கன்று அது காணுங் காலை.”--- நற்றிணை.
ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.


வியாழன், 20 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -84

மெய்ப்பொருள் காண்பது அறிவு -84
புரட்சி

 முதலாளித்துவ முறையில் உள்ள முக்கிய குறைபாடு ‘உரிமை’ இழப்பாகும். அது தொழிலாளர்களைக் கோழைகளாக்கி வறுமை மிக்க வாழ்க்கைக்குத் தள்ளிற்று, சமதர்ம கொள்கையால்தான் அந்நிலையை மாற்ற இயலும் என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

முதலாளித்துவ புரட்சி – 1908 – துருக்கி
உழைக்கும் மக்கள் புரட்சி – 1905  - இரசியா
முதலாளித்துவ சனநாயகப் புரட்சி – கி.பி. 16 இல் நார்வே,டென்மார்க் ; 18இல் அமெரிக்க புரட்சி ; 19இல் இலத்தின் அமெரிக்க புரட்சி.

மன்னராட்சியோ , மக்களாட்சியோ ஓர் அரசு மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். ஆதிக்க மனப்பான்மை அழிவுக்கு இட்டுச் செல்லும்.  இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலான வேற்றுமைகளக் களையாவிட்டால் சமுதாயத்தில் முரண்பாடுகள் பல்கிப் பெருகும். மக்களை அறியாமையில் மூழ்கடித்து, சாதிச் சாக்கடையில் தள்ளி, மூடநம்பிக்கைகளால் அச்சுறுத்தி அவர்களை அடிமைப்படுத்தி ஆள நினைக்கும் ஆதிக்க வருக்கம் நெடுங்காலம் நீடித்திருப்பதில்லை என்பது வரலாற்று உண்மையாகும். பொருளாதாரச் சீர்திருத்தம் அனைவருக்குமான ஒன்று என்ற நிலை இல்லாவிடில் ஏழ்மையும் வறுமையும் ஆதிக்க சக்திகளை அழித்தொழிக்கும் வல்லமை பெறும்.

ஒவ்வொரு மண்ணிலும் புரட்சிக்கான ’விதை’ விழுந்துள்ளது. புரட்சிக்கான விதைகளை நம் முன்னோர்கள் விதைத்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிர்களை உரமாக்கியுள்ளனர். புரட்சி விதை – மரமாகி விழுது விட்டு இம்மண்ணைத் தன் வயமாக்கும்.
 புரட்சி -  புகைந்து கொண்டிருக்கும் எரிமலை –அது எப்பொழுது வெடித்துச் சிதறும் ,ஆதிக்க சக்திகளை அழிக்கும் என்பதை  எவராலும் அறிந்துகொள்ள முடியாது.. தடுத்து நிறுத்தி விடவும் முடியாது.

 புரட்சியை அடக்கும் அளவுக்கு இன்னும் அறிவியல் வளரவில்லை. புரட்சியை அழித்துவிடும் அளவுக்கு இன்னும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ; கண்டுபிடிக்கவும் முடியாது. 

திருக்குறள் -சிறப்புரை :996


திருக்குறள் -சிறப்புரை :996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். ---- ௯௯௬
பண்புடையார் இவ்வுலகில் தோன்றி வாழ்வதால்தான் உலகம் நிலை பெற்றிருக்கிறது.   அவ்வாறு அவர்கள் தோன்றாது போனால் இவ்வுலகம் மண்ணில் புதைந்து அழிவது உறுதி.
” இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக் கடன் இறுத்த செம்மலோய் …”----மலைபடுகடாம்.
நன்று இது, தீது இது என ஆராய்ந்தறியும் பெரியோர் இறந்து போக, உலகம் உள்ளவரை யாண்டும் நிலைத்து நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்து முடித்த செம்மல். (நன்னன்).

புதன், 19 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -83

மெய்ப்பொருள் காண்பது அறிவு -83
புரட்சி
’ இயற்கையான விதிகளுக்குட்பட்டு இயங்கும் சமுதாய மாற்றத்தினை உடனிருந்து முழுமையாக்கும் தாதி (செவிலி)தான் புரட்சி .’ –காரல் மார்க்சு.
சமுதாயப் புரட்சி
‘உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளோடு பொருந்தா நிலையில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது.
 பழைய சமுதாய உறவுகளைப் பாதுகாக்க முயலுகிற ஆளும் வர்க்கத்தின் வன்முறைக்கு எதிராக முற்போக்குச் சக்திகள் வன்முறையைப் பயன்படுத்தி எதிர்க்கத் தொடங்குகின்றன. இந்நிலையில் வர்க்கப் போராட்டம் அதிகபட்ச தீவிரத்தன்மை அடைகிறது. இந்நிலைமையைத்தான் சமுதாயப் புரட்சி என்கிறோம்.’
 சமுதாயப் புரட்சி என்பது சமுதாய உறவுகள் அனஒத்தையும் முற்றிலும் மாற்றிய்மைத்துப் புதியதொரு சமூகப் பொருளாதார அமைப்பைத் தோற்றுவிப்பதாகும்.
 ஒரு பழைய சமுதாயம் ஒரு புதிய சமுதாயத்தைக் கருவினுள் கொண்டிருக்கும்போது வன்முறைப் புரட்சி புதிய சமுதாயம் பிரசவிக்க மருத்துவச்சியாக இருக்கிறது.
“  முதலாலித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம். ஏகாதிபத்திய  அறிவாளிகள், பொருளாதார விடுதலையை ஒதுக்கிவிட்டு, அரசியல் விடுதலையையே வற்புறுத்துகிறார்கள். ஆனால் பொருளாதார விடுதலையே மிக முக்கியமானது” –லெனின்.
 இந்தியா அரசியல் விடுதலை மட்டுமே பெற்றது. பொருளாதார விடுதலை பெறவே இல்லை . தொடரும்… 

திருக்குறள் -சிறப்புரை :995


திருக்குறள் -சிறப்புரை :995
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. --- ௯௯௫
விளையாட்டாகக்கூடப் பிறரை இகழ்வது  துன்பம் தருவதாகும் . பண்புடையார், பகைவர் மாட்டும் பண்பு உள்ளது என்று அவரையும் இகழ மாட்டார்.
“நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மை.”--- பதிற்றுப்பத்து.
விளையாட்டாகக்கூடப் பொய் கூறுதலை அறியாமைக்குக் காரணமான வாய்மையும் பகைவரது புறங்கூறும் சொல்லைக் கேளாத குற்றமற்ற சிறந்த அறிவையும் உடையவனே. (செல்வக்கடுங்கோ வாழியாதன்.)


செவ்வாய், 18 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -82

மெய்ப்பொருள் காண்பது அறிவு -82
அருட்பிரகாச வள்ளலார்
இராமலிங்க அடிகள் : 1823 – 1873
 உருவ வழிபாட்டை- எதிர்த்தார்
பல தெய்வ வணக்கம் – வெறுத்தார்
அந்நியராட்சியைச் சாடினார்
சாதி, சமய வேறுபாடற்ற மக்கள் ஒற்றுமையை விரும்பினார். ஒளி வழிபாடு போற்றினார். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.தர்ம சாலையில் அனைத்து மக்களும் ஒன்றாக அமர்ந்து உண்ண வழி வகுத்தார்.
’மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று வேண்டினார்.
’இச்சாதி சமய விகற்பங்களெல்லாம் தவிர்ந்தே
எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும்’ என்று விரும்பினார்.
’கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ விழைந்தார்.
‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’ என்றார்.
‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
 தம் உயிர் போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்.’ என்னும் நிலை வேண்டி  ஏங்கினார்.
 ‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
 சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே.’ என்று அறியாமையால் மூட நம்பிக்கைகளில் உழன்று அல்லலுறும் மக்களை எண்ணி இரங்கினார். 

திருக்குறள் -சிறப்புரை :994


திருக்குறள் -சிறப்புரை :994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.---- ௯௯௪
அன்பொடு  அறம் பிறழாது நன்மை செய்து, யாவர்க்கும் பயன்படுபவர்தம்  பண்பினை உலகத்தார் பாராட்டி மகிழ்வர்.
“ நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்.” –பதிற்றுப்பத்து.
அகன்ற உலகத்தில் நல்ல புகழை நிலைநாட்டும் பொருட்டு இல்லாதார் துன்பம் நீங்கும்படி வழங்கும் வள்ளல் தன்மை மிக்க, அன்பு நிறைந்த மனம் உடையவன்.(சேரலிரும்பொறை)


திங்கள், 17 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -81

மெய்ப்பொருள் காண்பது அறிவு -81                        
சமணம்
சமணர், பிறப்பு பலவென்றும் ஒரு பிறப்பின் கன்ம பலன்களுக்கு ஏற்ப மறுபிறப்பு அமைகின்றதென்றும் கொள்வர்.
 கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரவல்லன, அதற்குக் கடவுள் ஒருவர் வேண்டா.
வீடு பேற்றிற்கு விரதங்கள் ஐந்து அவசியம். இவை ஐந்தனுள்ளும் அகிம்சையே தலையாயது. பிற உயிர்க்கு அணு அளவும்கூடத் தீங்கு செய்யார்.
படைப்புத் தொழிலைக் கொடுத்து இறைவனை மனித நிலைக்குத் தாழ்த்த விரும்பாத சமணர், மனிதனை அதாவது கேவல ஞானம் எய்திய பரிபூரண மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் கடவுளாக்கி வழிபடுகின்றனர்.
கடவுள் இல்லையென்னும் வாதம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. சமண சமயத்தை விளக்கியவர் வர்த்தமானர் ( மகாவீரர் – கி.மு. 599)
பொருள்களின் முடிவுகள் பலவாகலாம் ; ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலிருந்து நோக்கச் சரியானதாகும். இங்ஙனம் பல முடிவுகளை அநேகாந்தங்களை (அநேக+ அந்தங்கள்) ஏற்கும் கொள்கையே அநேகாந்தவாதம் . சமணர்கள் அநேகாந்தவாதிகள் என்றழைக்கப்படுவர்.
சமணர்களின் அரிய பெரிய தமிழ்த்தொண்டு என்றும் ஏற்றுப் போற்றற்குரியதாக நின்று நிலவுகின்றது.

திருக்குறள் -சிறப்புரை :993


திருக்குறள் -சிறப்புரை :993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு..----- ௯௯௩
( உறுப்பு ஒத்தல் ; மக்கள் ஒப்பு ; பண்பு ஒத்தல்.)
மக்கள் தம் உடல் உறுப்புகளால் ஒப்புமை உடையவர் என்றாலும் நன் மக்களோடு ஒப்பாகாமையால் அது பொருந்தாது ; உறுப்புகளாலன்றிப் பண்பால் ஒத்திருத்தலே ஒப்புமையாகும்.
“குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. –குறள். 704
 பிறர் மனத்தில் உள்ளதை அவர் கூறாமலேயே அவர்தம் முகக் குறிப்பால் அறியும் ஆற்றல் பெற்றவரோடு ஏனைய பிறரும் உடல் உறுப்புகளால் ஒத்திருந்தாலும் உணரும் அறிவால் வேறுபட்டவராவர்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -80

மெய்ப்பொருள் காண்பது அறிவு -80
சமணம்
உலகத் தோற்றம்.
உலகில் நாம் காணும் பொருள்கள் அனைத்தும் ‘ஸ்கந்தங்களே’ (கூட்டுப் பொருள்) . இந்த அண்டம் முழுவதையும் சமணர் ஒரு ‘மகாஸ்கந்தம்’ என்பர். பஞ்சபூதங்களின் சேர்க்கைதான் பொருள்கள். இப்பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் மேலும் அழியக்கூடிய அதாவது மேலும் பிரியக்கூடிய பொருள்கள். எது ஸ்கந்தமோ அதாவது, எது கூட்டுப் பொருளோ அது அழிவுறும்..
   பொருளுக்கு அழிவு என்பது நிலைமாறுதல். ஒரு பொருள் அழிந்து விட்டதென்றால் அது இன்னொன்றாக மாறிவிட்டது என்பதே கருத்து. ஆக்கம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றை ஆக்கலாமே ஒழிய் எதுவுமேயில்லாமல் ஒன்றையும் ஆக்க முடியாது.
அணுக்கள்
மூலப் பொருள்களை அணுக்கள் என்பர் சமணர். மிகப்பெரிய இவ்வுலகம் அணுக்கள்லிலிருந்துதான் தோன்றுகிறது என்பதே சமணர் கொள்கை. அணு, பகுதிகளால் ஆகாதது ; அது வடிவமற்றது. எனினும் அதுவே வடிவங்கள் எல்லாவற்றிற்கும் தோற்றிடம்.  அணுவை அழிக்க முடியாது. அது என்றும் உள்ளது. என்றும் உள்ளதாகையால் அது (சிருஷ்டி) படைக்கப்பட்ட பொருளன்று. அணுக்களுக்குத் தன்மையோ, குணமோ எதுவும் கிடையாது. சேர்க்கையால் எண்ணிக்கை வேறுபாடுகளால் குணவியல்புகளும் பிறவும் தோன்றுகின்றன.
      சடப்பொருளை  (உலகம்) விளக்குதற்கு அணுக்கள், காலம், இடம் ஆகிய மூன்றும் போதாது எனக்கண்ட சமணர்கள் வேறு இரு தத்துவங்களைச் சேர்த்துக் கொண்டனர்.  1. இயக்கு சக்தி. 2. நிறுத்து சக்தி. இச் சொற்கள் பாவ புண்ணியங்களைக் குறிப்பனவல்ல.
இயக்கு சக்தி – தர்மம்
நிறுத்து சக்தி -  அதர்மம்
சமணருடைய தர்மம் அதாவது  இயக்கு சக்தி முதல் இயக்கத்தைக் கொடுக்க வல்லதல்ல. அதாவது இயக்கமற்று நிற்கும் ஒன்றை இயக்காது. இயக்கம் தொடங்கிவிட்டதனால் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கத்தான் அதனால் முடியும். நிறுத்து சக்தியாகிய அதர்மம் அப்படியே தான் நிறுத்தாது. ஆனால் நிறுத்தப்பட்டதை அந்நிலையிலேயே வைத்திருக்கும்.
 அணுக்கள்தாம் உலகின் ஒடுக்கம் . இவற்றிலிருந்துதான் உலகம் உற்பத்தியாகும். இவற்றுக்குத் துணையாகக் காலம், ஆகாசம், தர்மம், அதர்மம் இவ்வைந்தையும் அசீவன் என்ற சொல்லால் குறிக்கின்றனர். ---தொடரும்…