புதன், 31 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1036


திருக்குறள் -சிறப்புரை :1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.--- ௧0௩௬

உழவர்கள் கைஓய்ந்து உழுதொழிலைச் செய்யாமல் போவார்களானால் உயிர்வாழ்க்கைக்கு உணவின்றி ஒழிய, ’உண்ணாநிலை நின்றோம்’ என்று கூறும் துறவோரும் அவ்வறநிலையில் நிற்றல் இல்லையாகும்.

“ மண்முழா மறப்ப பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப
கரும்புஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி…..” ---புறநானூறு.

முரசின் கண்ணமைந்த பகுதியில் மார்ச்சனை இடுதல் மறந்து ; யாழ் 
இசையெழுப்புதலினின்று மறந்து; பெரிய இடமுடைய பானையும் பாலின்மையல் கவிழ்ந்து நெய் கடையும் ஓசையை மறந்து ; தம்முடைய உறவினர்கள் மது உண்ணுதலை மறக்க ; உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்க ;  அகன்ற தெருவுடைய சிற்றூர்கள் விழாக்களை மறந்து, தன் நாடு இவ்வாறு ஆகுமாறு மன்னன் வடக்கிருந்தான்.


செவ்வாய், 30 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1035


திருக்குறள் -சிறப்புரை :1035

இரவார் இரப்பாக்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.---- ௧0௩

உழவென்னும் உயர் தொழில் புரியும் உழவர்கள், உழைத்து உண்ணும் பெருமைக்குரியர்கள் ; பிறரிடம் சென்று இரந்துண்டு வாழமாட்டார்கள். மாறாகத் தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்னாது இருப்பதைக் கொடுத்து மகிழ்வார்கள்.

“கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்.” ---புறநானூறு.

வேட்டை நாயை உடைய வேட்டுவன், காட்டில் வாழும் வாழ்க்கையன் ; அவன் மான் தசையைக் கொண்ட கடகப் பெட்டியையும் ஆய்மகள் தயிர் கொண்டுவந்து தந்த பானையும் உடையவன் ; அவனுக்கு ஏரினால் உழுது வாழும் உழவர்தம் பெரிய வீட்டில் உள்ள மகளிர், குளத்திற்குக் கீழாக விளைந்த களத்திலிருந்து பெற்ற வெண்ணெல்லை முகந்து தருவர் ; அதனைப் பெற்றவனாய் மகிழ்ந்து தன் இருப்பிடத்திற்கு மீள்வான்.


திங்கள், 29 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1034


திருக்குறள் -சிறப்புரை :1034

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.----- ௧0௩௪

நெற்கதிர்களாலான குடைநிழலில் வாழும் உழவர்கள், பல அரசர்களின் குடையின் கீழ் அடங்கிய நிலப்பரப்பை எல்லாம் தம் மன்னனின் குடை நிழலில் தங்குமாறு செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்களே உழவர்கள்.

“புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்.” –புறநானூறு.

பிள்ளை ஈன்று பல திங்கள் செல்லினும் பால் சுரக்கும் தாயின் மார்பு போல, மிகுதியான நீர் கரையின் மரங்களைச் சாய்க்குமளவு பெருகிய வெள்ளத்தை உடைய காவிரி, உலக உயிர்களைக் காக்கும் சோழ நாட்டிற்கு வேந்தன்..


ஞாயிறு, 28 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1033


 திருக்குறள் -சிறப்புரை :1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.---- ௧0௩௩

உழைப்பால் உழவுத் தொழில் செய்து தான் உண்டு பிறரும் உண்ண உணவளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழத் தகுதியுள்ளோராவர்; மற்றையோர் எல்லாரும் அவரைத் தொழுது உணவுண்டு அவர் அடிதொழுது பின்செல்பவராவர்.

“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
 வீற்றிருந்த வாழ்வும் விழும் –ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி.

ஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய  வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.

சனி, 27 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1032


திருக்குறள் -சிறப்புரை :1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. --- ௧0௩௨

உழவுத் தொழில் செய்ய இயலாது பிற தொழில் செய்வாரையும் உழவர்கள் உணவளித்துக் காப்பதால், உழவர்கள் உலக மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேர்ச் சக்கரத்தைக்காக்கும் அச்சாணி போன்றவர்கள்.

“ குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது “ –சிறுபஞ்சமூலம்.

குளம் வெட்டி, கரைமேல் மரங்களை நட்டு, மக்கள் செல்ல வழி அமைத்து, தரிசு நிலங்களைச் செப்பம் செய்து, உழுவயலாக்கி, நீர் வளம் நிறைந்த இடத்தில் கிணறு உண்டாக்கி, ஆகிய இவ்வைந்து அரிய செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்திற்கு இனிதாகச் செல்வான்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1031


திருக்குறள் -சிறப்புரை :1031
104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.---- ௧0௩௧

குடிப்பெருமைக்கு உரிய, உயர்ந்த தொழிலாக உழவுத்தொழிலைக் குறிக்கின்றார் திருவள்ளுவர்.

ஊரெல்லாம் சுற்றினும் உயர் தொழிலெனப் பலவற்றைப் போற்றினும் இவ்வுலகம் ஏர்த்தொழில் பின்னேதான் சுழல்கிறது. அதனால், உழைப்பின் வருத்தம் மிகுதி என்றாலும் உயிர்களுக்கு உணவளிக்கும் உழவே உலகின் தலைசிறந்த தொழிலாகும்.

“ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்……” ------சிலப்பதிகாரம்.

இரந்து வாழ்வோர் சுற்றமும்  இல்லார்க்கும் இயலார்க்கும் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும் கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில் வழியே சிறப்படையும்.


புதன், 24 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1030


திருக்குறள் -சிறப்புரை :1030

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. ---- ௧0௩0

 குடிப்பெருமையைக் காக்கும் காலத்துப் அருகே இருந்து தாங்கும்
நல்ல ஆண்மகன் இல்லாத ,குடியாகிய மரம் துன்பமாகிய கோடரியால் வெட்டுண்டு இற்று வீழும்.

”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக நின் ஆயுள் தானே.” ---புறநானூறு.

முழங்கும் கடல் முழுதும் வளைத்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம் புகழை உலகில் நிலைக்கச் செய்து, தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே..! ஒன்றைப் பத்தின் மடங்குகளாக அடுக்கிய, கோடியைக் கடை எண்ணாக இருத்திய பேரெண்ணிக்கையை நின் வாழ்நாள் கொண்ட பெருமையை அடையட்டும்.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1029


திருக்குறள் -சிறப்புரை :1029

இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.----- ௧0௨௮

தன்குடிப்பெருமை தாழ்வுறத் தேடிவரும் இடையூறுகளைத் தடூத்துநிறுத்திக் காப்பதால் அவனுடைய உடம்பு துன்பங்கள் நிறையும் கொள்கலனாகியதோ..?

“குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல.” –புறநானூறு.

குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள்: உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும், கோல் செங்கோலாகவும், உரிய இறைப் பொருளுண்டு நடுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.

திங்கள், 22 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1028


திருக்குறள் -சிறப்புரை :1028

குடிசெய்வார்க்கு  இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும். ------ ௧0௨௮

தான் பிறந்த குடியின் பெருமையை உயர்த்த நல்ல நேரம் என்று ஒன்றில்லை ;  நல்ல நேரம் வரட்டும் என்று சோம்பி இருந்தால் மானம் அழியப் பிறந்த குடியின் பெருமையும் கெட்டு அழியும்.

”அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்…” –அகநானூறு.

 அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.



ஞாயிறு, 21 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1027


திருக்குறள் -சிறப்புரை :1027

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. ---- ௧0௨௭

போர்க்களத்துப் படை வீரர்களுள் போரை வென்றெடுக்கும் வல்லமை, வீரம் செறிந்த வீரர் ஒருவருக்கே வந்து பொருந்துவதைப் போல நற்குடியில் பிறந்தோர் பலராயினும் குடிப் பெருமையைக் காக்கும் பொறுப்பு, ஆற்றல் வாய்ந்த ஒருவருக்கே வந்து சேரும்.

“யார் மகள் என்போய் கூறக் கேள் இனி
குன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
தொல்குடி மன்னன் மகளே…..” –புறநானூறு.

வெல்லும் போரை உடைய அண்ணலே…! யார் மகள் இவள் என்று வினவாநின்றனை ; இனி, யான் கூறக் கேட்பாயாக, மலையைக் கண்டாற் போன்று நிலையினை உடைய பல நெற்போர்களை, நாள்தோறும் காலையில் கடா விட்டு அழித்து, குவித்து வைத்துள்ள நெல்லை, வலிய வில் வீரர்களுக்கு நாள் உணவாகக் கொடுப்பதில், மாற்றம் இல்லாத பழமையான குடிகளை உடைய, மன்னன் மகள் ஆவாள்.

சனி, 20 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1026


திருக்குறள் -சிறப்புரை :1026

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையத் தனதாக்கி  ஆளும் ஆண்மைத் தன்மையே நல்லாண்மை என்பதாம்.

” நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்  
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
 வேளிருள் வேளே  விறல்போர் அண்ணல். “ –புறநானூறு.

நீதான், வடபுலத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றிச் செம்பாற் புனைந்து செய்தது போன்ற நீண்ட துவராபதி என்னும் நாட்டை ஆண்ட வெறுப்பற்ற கொடையினை உடைய நாற்பத்தொன்பது தலைமுறைகளைக் கொண்ட வேள்களுள் ஒருவன் ..! வெற்றி பொருந்திய போரையுடைய தலைவனே…!

வெள்ளி, 19 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1025


திருக்குறள் -சிறப்புரை :1025

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. --- ௧0௨

குற்றம் இல்லாதவனாகத் தன்குடியை உயர்த்துவதற்குரிய கடமைகளைச் செவ்வனே செய்து வாழ்கின்ற ஒருவனைத் தம் சுற்றமாகச் சூழ்ந்து உறவு கொள்வர் உலகத்தார்.

”கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ  சுமந்து
மணி அன்ன நீர் கடற் படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நிற் பயந்திசினோரே” -----புறநானூறு.

கரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் ; அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள் அருவியுடைய மலை நாடனே..! நீ வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.

வியாழன், 18 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1024


திருக்குறள் -சிறப்புரை :1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.----- ௧0௨௪
ஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையைத்  தாழ்வுறாது மேம்படுத்த, விரைந்து செய்ய நினைத்த செயல்,  தடைகள் ஏதும் சூழாமல் தானே நிறைவேறும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதாம்.

“ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண் மாஞாலம் விளக்குறூஉம் – திங்கள் போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப் பிறந்தார். “ ----நாலடியார்.

ஒரு பக்கத்தைப் பாம்பு பற்றினாலும் ஒருபக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய பூமியை ஒளி விளங்கச் செய்யும் நிலவினைப்போலத் தாம் செய்யக் கருதிய செயல்கள் ஈடேறாது போனாலும் நற்குடியிற் பிறந்தார் பிறருக்கு உதவி செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.  

புதன், 17 அக்டோபர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். ---- ௧0௨௩

பிறந்தகுடியின் பெருமையக் கட்டிக்காப்பேன் என உறுதிகொண்டு செயலாற்றும் ஒருவனுக்குத் துணையாகத் தெய்வம் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்னேவந்து நிற்கும்.

“நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்தகு மொய்ம்ப காட்டினை…….” –புறநானூறு.

வேந்தே..! உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீ என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை யான் காணுமாறு வெளிப்படுத்தினை.


செவ்வாய், 16 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1022


திருக்குறள் -சிறப்புரை :1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி. ---- ௧0௨௨

செயலாற்றும் திறனும்  நிறைந்த அறிவும் உடைய ஒருவன் தொய்வின்றிச் செய்யும் பெருமைமிக்க செயல்களால் அவனுடைய குடிப்பெருமை நிலைத்து நீடித்திருக்கும்.

“ சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வாந்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வாந்தோயும்
மைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.” ---நாலடியார்.

வானம் அளாவிய மேகங்கள் தவழும் மலையை உடைய அரசனே..! அறிவிற் சிறந்த ஆண்மையும்  செயலாற்றல் மேன்மையும் நல்லொழுக்கமும் இவை மூன்றும் புகழால் உயர்ந்த நற்குடியில் பிறந்தார்க்கு அல்லாமல், பெருஞ் செல்வ வளம் வந்தடைந்தபோதும் நற்குடியில் பிறவாதவர்களுக்கு உண்டாகாவாம்.

திங்கள், 15 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1021


திருக்குறள் -சிறப்புரை :1021
103. குடிசெயல் வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.----- ௧0௨௧

ஒருவன் பிறந்த குடியின் பெருமை சிறந்து விளங்க, தான் எண்ணிய செயலை முடிக்காமல் ஒருபோதும் சோம்பி இருக்கமாட்டேன் என்னும் உறுதியில் நிற்கும் பெருமையைவிட வேறு சிறந்த பெருமை இல்லை.
பிறப்பின் பெருமை உயர்ந்த குடிப்பிறப்பில் உள்ளது.

“ மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
 தென்புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே.” –புறநானூறு.

பல உயிர்களையும் காக்கும் தொன்மையான குலங்களில் சிறந்த பாண்டியக் குலத்தில் பிறந்து, பாண்டிய நாட்டைக் காக்கும் பெருமையிலிருந்து நீங்கிப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் குடியினனாகப் பிறப்பு அடைந்து சிறுமை உறுவேனாகுக.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1020


திருக்குறள் -சிறப்புரை :1020
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.---- ௧0௨0
மனத்தகத்து நாணம் என்னும் நற்குணம் இல்லாதவர், உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பது, மரப் பதுமையைக் கயிற்றால் கட்டி உயிருள்ளது போன்று இயக்கி மக்களை மயக்குவது போன்றதாம்.
அகத்தில் அழுக்கும் புறத்தில் தோற்றப்பொலிவும் கொண்டு உலவுவர் பலர்.
போரைத்தடுத்த புலவர்.
” நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே.” –புறநானூறு.
சோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை உடைய காவல் அமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும் ; எனினும் மானமின்றி, இனிதாக அங்கே உறையும் வேந்தனுடன் , இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட முனைந்தாய் என்பது நாணத்தக்கது.

சனி, 13 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1019


திருக்குறள் -சிறப்புரை :1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.------- ௧0௧௯

ஒருவன் நேர்மை பிறழ்ந்து நடப்பானாயின் அஃது, அவன் பிறந்த குடிப்பிறப்பு ஒன்றையே கெடுக்கும். அவனே நாணம் இல்லாதவனாயின் அவன் குடிப்பிறப்பு உள்ளிட்ட எல்லாச் சிறப்புகளையும் அழிக்கும்.
நற்குடியில் பிறந்தவன் நாண் அழியாமை நன்று.

“ ……………………………………….முன்னாள்
கையுள்ளது போல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக்கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்தி
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்
 செல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு.

முதல் நாள் நீ தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால் எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டுகின்ற புகைழைப்பெற்ற உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கிப் போவேன்.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1018


திருக்குறள் -சிறப்புரை :1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.----- ௧0௧௮
பிறர் நாணத்தக்க பழிச்செயல்களைக் கண்டு தான் நாணம் கொள்ளானாயின்  அறமே நாணி அவனை விட்டு நீங்க, அவன் அறமற்றவன் என்னும் தன்மை உடையவனாவான்.
“ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசையில் வான் புகழே.”—புறநானூறு.
இரவலர்க்கு ஈயாத மன்னர் நாண, பரிசிலர் பலரும் போற்றும் குற்றமற்ற நின் (பிட்டங்கொற்றன்.) புகழ் இவ்வுலகில் பரந்து நிலை பெறுவதாக.

வியாழன், 11 அக்டோபர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.---- ௧0௧௭
நாணுடைமையைப் பெருமையாகக் கருதி வாழ்பவர்கள், உயிர் வாழ்வதற்காக நாணத்தைக் கைவிடமாட்டார்கள் ;  நாணுடைமையைக் காக்க உயிரை இழக்கவும் தயங்க மாட்டார்கள்.
….. ….  ….. சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.” –குறுந்தொகை
சான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர். தாங்க மாட்டார் என்பதாம்.


புதன், 10 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1016


திருக்குறள் -சிறப்புரை :1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். ----- ௧0௧௬
மேன்மையானவர்கள் ,நாணுடைமையைத் தமக்கு வேலியாகக் கொள்வதன்றி, அகன்ற இவ்வுலகினை விரும்பிக் கொள்ளார்.
”வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.” –நாலடியார்.
இந்த உலகம் முழுவதையும் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பொய் கலந்த சொற்களைப் பேசாதே.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1015


திருக்குறள் -சிறப்புரை :1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.  ----- ௧0௧௫
சான்றோர் தமக்குவரும் பழியையும் தம்மைச் சார்ந்தோர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணம் கொள்வர். அத்தகையை பெரியோரை நாணுடைமை என்னும் நற்குணத்தின் உறைவிடமாகக் கருதி இவ்வுலகத்தார் போற்றுவர்.
“ பிறர் உறு விழுமம் பிறரும் நோப
 தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்.” ---அகநானூறு.
நல்லோர், பிறர் துன்பப்பட்டால் தமக்குத் தொடர்பு இல்லாதவரானாலும் அவர் துன்பத்தைத் துடைப்பர். தமக்குத் துன்பம் நேரின் அதைப் பெரிதாக எண்ணாமல் எளிதாகக் கொள்வர்.

திங்கள், 8 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1014


திருக்குறள் -சிறப்புரை :1014
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. ---- ௧0௧௪
சான்றோர்க்கு நாணுடைமை எனும் நற்குணமே அணியாகும் அவ்வணி இல்லையேல், பெருமிதம் மிக்க நடை அவர்க்கு நோயாகும்.
“ நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாண் ஆளும்
 அச்சத்தான் நாணுதல் நாண் அன்றாம் – எச்சத்தின்
மெல்லியராகித் தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண். –நாலடியார்.
தன்னை விரும்பி வந்தவர்களுக்கு ஒன்றும் கொடாமல் இருப்பது வெட்கமன்று ; நாளும் அசத்தால் முடங்கி இருத்தல் வெட்கமன்று ; தன்னினும் குறைபாடுடைய, அற்பர் ஆராயாது செய்த சிறிய இழிவையும் பிறர்க்குச் சொல்லாமல் இருப்பதே நாணுடைமை ஆகும்.