ஞாயிறு, 10 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 10

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 10
5.குன்றுதொறு ஆடல் (மலைகளுக்கெல்லாம் பொதுப் பெயர்)
குறிஞ்சியில் விழா
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கண் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
            நக்கீரர். திருமுரு. 1: 190 – 197
முருகன் பூசை செய்யும் வேலன் – பச்சிலைக் கொடியால் நல்ல மணமுடைய சாதிக்காயை இடையிடையே சேர்த்து அதனோடு அழகிய புட்டிலைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து – காட்டு மல்லிகையுடன்
வெண்டாளிப் பூவையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை உடையவனாய் நிற்க – நல்ல மணங்கமழும் சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடையவரும் – கொடிய தொழிலைச் செய்பவருமான குறவர்கள் – நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவை  - மலையிடத்துள்ள சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து – தங்கள் குறிஞ்சி நிலத்துக்குரிய ” தொண்டகப் பறையை அடித்து அவ்வோசைக்கேற்பக் குரவைக் கூத்தாட – முருகக் கடவுள்  எழுந்தருளுகின்றான்.
(நறைக்காய் – சாதிக்காய் ; குளவி – காட்டுமல்லிகை ; புட்டில் (போன்ற) – தக்கோலக்காய் ; கேழ் – நிறம்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக