சனி, 16 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 3

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 3
விருந்து போற்றல்
…….. …….. ……… ஒன்றிய
கேளிர் போல கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 73  – 78
நான் விரும்பிப் பாடத் தொடங்குவதற்கு முன்பே கரிகாற் பெருவளத்தான் எழுந்துவந்தான் ; தன்னோடு பொருந்திப் பழகிய நண்பரிடம் தன் உறவுடைமையைக் காட்டுவதுபோல் காட்டினான் ; இனிய முகமன் உரைகள் பல கூறினான் ; தன் கண்ணினால் நன்கு காணும்படி  தனக்கு மிக அண்மையான இடத்திலே என்னை அழைத்து உட்கார வைத்துக் கொண்டான் ; என்னைக் கண்ணினால் பருகும் தன்மையை ஒத்த தன் பார்வையினால் என் எலும்புகள் நெகிழ்ந்து உருகும்படி குளிர்ச்சி கொள்ளச் செய்தான்.
( ஒன்றிய கேளிர் – நட்பில் பிணைந்த ; வேளாண் – விருந்து பேணல் ; அருகா நோக்கம் – கெடாத பார்வை.) தொடரும் …………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக