சனி, 2 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 3

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 3
பந்தும் பாவையும்
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்ந்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடம்மலி மறுகின் கூடல் …….
நக்கீரர். திருமுரு. 1: 67 – 71
போரைக் கருதி வருவார்க்கு உணர்த்துமாறு தூக்கிக் கட்டப்பட்ட வான் அளாவ உயர்ந்த கொடிக்கு அருகே தொங்கவிட்ட  பந்தும் பாவையும்  அறுப்பார் இன்மையின் தொங்கியே கிடக்கின்றன – போர் செய்வோர் இல்லை என்று கூறும்படி செய்ததனால் எக்காலமும் போர்த் தொழில் அரிதாகிய வாயிலையும்  - திருமகள் வீற்றிருந்த குற்றம் நீங்கிய கடைத் தெருவையும் மாட மாளிகைகள் மிக்க ஏனைய தெருக்களையும் உடைய நகரம் கூடல். ( முற்றத்துக் கொடியில் பந்தும் பாவையும் தொங்கவிட்டிருப்பது – எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இலர் ;  எம் பகைவரை யாம் பெண்டிர் போலக் கருதுகிறோம் ; ஆண்மையாளர் உண்டென்றால் இவற்றை அறுங்கள் – என்னும் குறிப்பே ஆகும்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக