புதன், 20 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 7

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 7
                                      காவிரியில் கல்லணை….
                                     கரிகாலன் காவிரியின் குறுக்கே அணை கட்டியதற்கான சான்று யாண்டும் காணப்படவில்லை - ஆயின் மேற்சுட்டிய கருத்துக்களைக் கொண்டு பார்க்கும்பொழுது - கடுங்கோடையிலும் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன விளைநிலங்கள் செழித்திருந்தன -  காவிரி ஆற்றின் வளம் முழுவதையும் கரிகாலனே கொண்டிருந்தான் என்பதால் காவிரியைக் காத்துச்( அணை கட்டி) சோழ நாட்டை வளமாக்கினான் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ..! 
 காவிரி யாற்றின் சிறப்பு
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்             
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப்பு யன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
                        -- பட்டினப்பாலை : 1 – 7
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல் வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே ….
காண்க:  வாய்த்தலை – நீரைத் தேக்கும் தலை மதகு (உழவர் வழக்கு)
  --- சிலப்பதிகாரம் : 10 : 102  –  109
 இதன் பொருளாவது – கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னு மிவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெயரினும் காற்றுப்பொரும் குடகவரையினது உச்சிக்கண்ணே கடிய குரலையுடைய உருமேற்றோடு சூன்முதிர்ந்த பருவப்புயல் தன்பெயலாகிய வளத்தைச் சுரத்தலானே அவ்வரையிற்பிறந்த பல பண்டத்தோடு கடுகிவருதலையுடைய காவிரியினீர், முகத்தைக் குத்தியிடிக்குங் கடல் தன் வளத்தைக் கொண்டு எதிர்தலானே தேங்கி, வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்ற அப்புதுப்புன லொலியல்லது ஆம்பி முதலாயின ஒலித்தல் செல்லாவென்க.
கோள்நிலை திரிந்து கோடை நீடினும் … 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக