செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 12

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 12
6. பழமுதிர்சோலை
(மதுரை அழகர்மலை முருகன் – ”பழமுதிர்சோலை இன்ன இடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை ; மதுரைக்கு ஏறத்தாழ 15கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் அல்லது திருமாலிருஞ்சோலை மலையே பழமுதிர்சோலை எனக் கூறுவர் அறிஞர் – ஆனால் அத்தலம் இப்போது வைணவத் திருப்பதியாக விளங்குகின்றது.” )
முருகன் எழுந்தருளும் இடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
            நக்கீரர். திருமுரு. 1: 218  – 226
குன்றுதொறும் ஆடற்கண்நிற்றலேயன்றி சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியறுத்துச் சேவற்கொடி உயர்த்து அவ்விடத்தே அந்த இறைப்பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்து ஊர்கள்தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப் பெருமான் எழுந்தருளியிருப்பான்.
தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம் பொருந்தி அவ்விடத்தும் இருப்பான் ; வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான் ; காட்டிலும் சோலையிலும் அழகுபெற்ற ஆற்றிடைக்குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறுபல ஊர்களிலும் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்திலும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான். ( கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் –வழிபாடு ; வாரணம் – கோழி ; துருத்தி –ஆற்றிடைக்குறை ; வைப்பு – ஊர்.) தொடரும்………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக